பிரதமர் அலுவலகம்

வரும் 8, 9-ம் தேதிகளில் தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகாவுக்கு பிரதமர் பயணம்


தெலங்கானாவில் ரூ.11,300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கிவைக்கிறார்

செகந்திராபாத்-திருப்பதி இடையிலான வந்தே பாரத் அதிவிரைவு ரயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கிவைக்கிறார்

பிபி நகர் எய்ம்ஸ் மருத்துவமனை, செகந்திராபாத் ரயில் நிலைய மறுமேம்பாட்டுத் திட்டத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்

சென்னை விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடத்தை பிரதமர் தொடங்கிவைக்கிறார்

சென்னை-கோயம்புத்தூர் வந்தே பாரத் விரைவு ரயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கிவைக்கிறார்

ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தின் 125-வது ஆண்டை குறிக்கும் விழாவில் பிரதமர் பங்கேற்கிறார்

பந்திப்பூர் புலிகள் சரணாலயம் மற்றும் முதுமலை புலிகள் சரணாலயத்தில் தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்

புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் 50-ம் ஆண்டைக் குறிக்கும் நிகழ்ச்சியை தொடங்கிவைக்கும் பிரதமர் சர்வதேச புலிகள் கூட்டணி அமைப்பை தொடங்கிவைக்கிறார்

Posted On: 05 APR 2023 5:22PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு வரும் 8,9-ம் தேதிகளில் பயணம் மேற்கொள்கிறார்.

8-ந் தேதி காலை 11.45 மணியளவில் செகந்திரா பாத் ரயில் நிலையத்தை அடையும் பிரதமர் அங்கு செகந்திராபாத்-திருப்பதி வந்தே பாரத் விரைவு ரயிலை கொடியசைத்து தொடங்கிவைக்கிறார். பகல் 12.15 மணியளவில் பிரதமர் ஐதராபாத் அணிவகுப்பு மைதானத்தில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அங்கு ஐதராபாத் பிபி நகர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார். 5 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.  செகந்திராபாத் ரயில் நிலைய மறுமேம்பாட்டுத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டும் அவர் ரயில்வே தொடர்பான மேம்பாட்டுத் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

மாலை 3 மணியளவில் பிரதமர் சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார். அங்கு புதிதாகக் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த முனையக் கட்டடத்தை அவர் தொடங்கிவைக்கிறார். மாலை 4 மணியளவில் பிரதமர், எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், சென்னை-கோயம்புத்தூர் வந்தேபாரத் அதிவிரைவு ரயிலை கொடியசைத்து தொடங்கிவைக்கிறார்.  இந்த நிகழ்ச்சியில் இதர ரயில்வே திட்டங்களையும் அவர் தொடங்கிவைக்கிறார்.  மாலை 4.45 மணியளவில் பிரதமர்,  சென்னையில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் பங்கேற்கிறார். மாலை 6.30 மணியளவில் சென்னை அல்ஸ்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் பொது நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

9-ந் தேதி காலை 7.15 மணிக்கு பிரதமர் பந்திப்பூர் புலிகள் சரணாலயம் செல்கிறார். முதுமலை புலிகள் சரணாலயத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமுக்கும் அவர் செல்வார். காலை 11 மணியளவில் பிரதமர், மைசூரு கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ள புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் 50-ம் ஆண்டை குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் கலந்துகொள்வார்.

தெலங்கானாவில் பிரதமர்

தெலங்கானாவில் ரூ.11,300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் முடிவடைந்த திட்டங்களை தொடங்கிவைக்கிறார். ஐதராபாத் தகவல் தொழில்நுட்ப நகரத்தையும், வெங்கடேசப் பெருமாள் உறையும் திருப்பதியையும் இணைக்கும் செகந்திராபாத்- திருப்பதி வந்தே பாரத் அதிவிரைவு ரயிலை கொடியசைத்து தொடங்கிவைக்கிறார். கடந்த 3 மாதம் என்னும் குறுகிய காலத்தில் தெலங்கானாவில் தொடங்கப்படும்
2-வது வந்தே பாரத் ரயில் இதுவாகும். இந்த ரயில் இரு நகரங்களுக்கும் இடையே குறைந்தப்பட்சம் மூன்றரை மணி  பயண நேரத்தை குறைக்கும். இது  குறிப்பாக பக்தர்களுக்கு பயனளிக்கும்.

ரூ.720 கோடி மதிப்பில், உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன்  செகந்திராபாத் ரயில் நிலையம் மாற்றியமைக்கப்படவுள்ளது. இதில் அனைத்து பயணிகளுக்கும் தேவையான வசதிகள், பயணிகள் ரயில்களுக்கு மாறும் வசதிகள் அமைக்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் ஐதராபாத்-செகந்திராபாத் இரட்டை நகரத்தின் புறநகர் பகுதிகளுக்கு செல்லும் 13 புதிய பன்மாதிரி போக்குவரத்து சேவைகளை கொடியசைத்து தொடங்கிவைப்பார். இதன் மூலம் பயணிகள் விரைவாகவும், வசதியாகவும் பயணம் செய்ய வழி ஏற்படும். செகந்திராபாத்-மெகபூப் நகர் மின்மயமாக்கல் மற்றும் இரட்டை ரயில் பாதை திட்டங்களை அவர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்தத் திட்டம் ரூ.1410 கோடி மதிப்பில் 85 கி.மீ. தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் ரயில்களின் சராசரி வேகத்தை உயர்த்துவதுடன், எண்ணற்ற வசதிகளை வழங்குகிறது.

ஐதராபாத் அணிவகுப்பு மைதானத்தில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பிரதமர், ஐதராபாத் பிபி நகர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார். நாடு முழுவதும் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பிரதமரின் தொலைநோக்குக்கு இது சான்றாகும். பிபி நகர் எய்ம்ஸ் ரூ.1,350 கோடியில் உருவாக்கப்படவுள்ளது. பிபி நகர் எய்ம்ஸ், தெலங்கானா மக்களுக்கு அவர்களின் வீட்டுவாசலில் முழுமையான, தரமான, விரிவான சுகாதார சேவைகளை வழங்கும் முக்கிய மைல்கல்லாக அமையும்.

இந்த நிகழ்ச்சியின் போது பிரதமர் ரூ.7,850 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த சாலைத் திட்டங்கள் தெலங்கானா, ஆந்திரா இடையே சாலை இணைப்பை வலுப்படுத்துவதுடன் இந்த பிராந்தியத்தில் சமூகப்பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

தமிழ்நாட்டில் பிரதமர்

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.1260 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடத்தை (முதல்பகுதி) பிரதமர் தொடங்கிவைக்கிறார். இந்தப் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடம், விமான நிலையத்தின் பயணிகள் சேவைத் திறனை ஆண்டுக்கு 23 மில்லியன் பயணிகள் என்ற அளவில் இருந்து 30 மில்லியன் பயணிகளாக  உயர்த்தும். இந்தப் புதிய முனையம், கோலம், சேலை, கோயில்கள் போன்ற பாரம்பரிய அம்சங்களைக் கொண்ட தமிழ் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும். இயற்கையான சுற்றுப்புறத்தைக் கொண்டதாக இது அமையும்.

சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெறும் விழாவில் சென்னை-கோயம்புத்தூர் இடையேயான வந்தே பாரத் அதிவிரைவு ரயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கிவைப்பார். தாம்பரம்-செங்கோட்டை இடையிலான விரைவு ரயில் சேவையையும் பிரதமர் தொடங்கிவைப்பார். திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம் பள்ளி இடையிலான ரயில் சேவையையும் அவர் தொடங்கிவைப்பார்.  இந்த ரயில்சேவை கோவை, திருவாரூர், நாகப்பட்டிணம் பயணிகளுக்கு பயனளிக்கும்.

திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம் பள்ளி இடையே 37 கி.மீ. அகல ரயில்பாதைத் திட்டத்தையும் பிரதமர் தொடங்கிவைப்பார். இது ரூ.294 கோடியில் நிறைவடைந்துள்ளது. நாகை மாவட்டம் அகஸ்தியம் பள்ளியில் இருந்து உப்பு ஏற்றிச்செல்ல இது உதவும்.

சென்னை ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தின் 125-ம் ஆண்டு கொண்டாட்டத்திலும் பிரதமர் கலந்து கொள்கிறார். 1897-ம் ஆண்டு சென்னையில் ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தை சுவாமி ராமகிருஷ்ணானந்தா தொடங்கினார். ராமகிருஷ்ணா மடம் மற்றும் ராமகிருஷ்ணா மிஷன் ஆகியவை மனிதகுலத்துக்கு சமூகசேவை நடவடிக்கைகள் மூலம் பல்வேறு வடிவத்தில் சேவைகளை வழங்கும் ஆன்மிக அமைப்பாக உள்ளது.

சென்னை அல்ஸ்தம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் ரூ.3,700 கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மதுரை நகரில் 7.3 கி.மீ. நீள மேல்மட்டச்சாலை, தேசிய நெடுஞ்சாலை 785-ன் 24.4 கி.மீ. நீள 4 வழிச்சாலை ஆகியவற்றை அவர் தொடங்கிவைப்பார். தேசிய நெடுஞ்சாலை 747-ல் சாலைத் திட்டப்பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டுவார். ரூ.2,400 கோடிக்கும் அதிக மதிப்பிலான இந்தத் திட்டம் தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் இடையே சாலை இணைப்பை மேம்படுத்தும். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், கேரளாவில் உள்ள சபரிமலை ஆகியவற்றுக்கு பக்தர்கள் வசதியாக பயணம் செய்வதை  இது உறுதிசெய்யும்.

கர்நாடகத்தில் பிரதமர்

பந்திப்பூர் புலிகள் சரணாலயத்திற்கு காலையில் பிரதமர் பயணம் மேற்கொள்கிறார். புலிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சுயஉதவிக் குழுக்கள் மற்றும் முன்னணி ஊழியர்களுடன் அவர் கலந்துரையாடுவார். முதுமலை புலிகள் சரணாலயத்தில் அமைந்துள்ள தெப்பக்காடு யானைகள் முகாமுக்கும் செல்லும் அவர் அங்கு யானைப்பாகன்கள் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடுவார். அண்மையில் முடிவடைந்த 5-வது மேலாண்மைத் திறன் பயிற்சிகளில் வெற்றி பெற்ற புலிகள் சரணாலயத்தின் கள இயக்குனர்களுடனும் பிரதமர் கலந்துரையாடுவார்.

சர்வதேச புலிகள் கூட்டணியை பிரதமர் தொடங்கிவைப்பார். 2019 ஜூலையில் பிரதமர் ஆசியாவில் வனவிலங்கு சட்டவிரோத வர்த்தகம், வேட்டையாடுதல் ஆகியவற்றை உறுதியுடன் தடுப்பதற்கான உலகத்தலைவர்கள் கூட்டணி அமைய வேண்டுமென பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார்.  பிரதமரின் இந்த அழைப்பை முன்னெடுத்துச் சென்று கூட்டணி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணி, புலி, சிங்கம், சிறுத்தை, பனிச்சிறுத்தை, ஜாகுவார், புமா, சீட்டா போன்ற 7 வகையான பூனை இனத்தைச் சேர்ந்த விலங்குகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் 50-ம் ஆண்டை குறிக்கும் நிகழ்ச்சியையும் பிரதமர் தொடங்கிவைப்பார். இந்த நிகழ்ச்சியின் போது அவர் புலிகள் பாதுகாப்புக்கான அமிர்தகால தொலைநோக்கை வெளியிடுவார்.  மேலும் புலிகள் சரணாலயங்களில் மேலாண்மை திறன் மதிப்பீட்டு அறிக்கையையும் அவர் வெளியிடுவார். புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் 50 ஆண்டை குறிக்கும் நினைவு நாணயத்தையும் பிரதமர் வெளியிடுவார்.

***

AP/PKV/AG/KPG



(Release ID: 1913997) Visitor Counter : 254