பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
இந்தியாவின் தலைமை தகவல் ஆணையர் (சிஐசி) திரு.யஷ்வர்தன் குமார் சின்ஹா மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்தார்
Posted On:
04 APR 2023 3:23PM by PIB Chennai
இந்தியாவின் தலைமை தகவல் ஆணையர் யஷ்வர்தன் குமார் சின்ஹா இன்று மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கைச் சந்தித்து ஜம்மு - காஷ்மீர் உட்பட நாடு முழுவதும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களின் நிலை குறித்து விளக்கமளித்தார். கொரோனா தொற்றினால் இடையூறுகள் இருந்தபோதிலும், தகவல் அறியும் உரிமைச் சட்ட விண்ணப்பங்களின் தீர்வு விகிதம் படிப்படியாக மேம்படுத்தப்படுவது குறித்து அமைச்சருடனான இந்த ஒரு மணி நேர சந்திப்பின் போது தலைமை தகவல் ஆணையர் சுருக்கமாகத் தெரிவித்தார்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) அளிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு தீர்வளிப்பது அதிகரிப்பதுடன், நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் குறைந்து வருவதற்கும் மத்திய தகவல் ஆணையத்தை டாக்டர் ஜிதேந்திர சிங் பாராட்டினார். கடந்த ஆண்டு 29,000 வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், தற்போது 19,000 வழக்குகளாக குறைந்துள்ளதாகவும், அதே நேரத்தில் 2021-22 இல் 28,793 விண்ணப்பங்களுக்கு தீர்வு அளித்த நிலையில், இந்த எண்ணிக்கை 2022-23-ல் 29,104 ஆக உயர்ந்துள்ளதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
2020-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் கொரோனா தொற்று இருந்தபோதிலும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு பதிலளிப்பது அதற்கு முந்தைய ஆண்டை விட அதிகமாக இருந்ததாகவும், ஆன்லைன், மெய்நிகர் முறை மூலம் மத்திய தகவல் ஆணையம் கொரோனா காலத்திலும் இடையூறு இல்லாமல் தனது பணியை மேற்கொண்டதால் இது சாத்தியமானது என்றும் அவர் கூறினார்.
2020-ம் ஆண்டு மே மாதம் கொரோனா தொற்றின் சவாலான நேரத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட யூனியன் பிரதேசமான ஜம்மு & காஷ்மீரில் இருந்து ஆர்டிஐ விண்ணப்பங்களை மெய்நிகர் வழிமுறைகள் மூலம் பெறத் தொடங்கியதை டாக்டர் ஜிதேந்திர சிங் சுட்டிக்காட்டினார். ஜம்மு - காஷ்மீரில் சுமார் 300 ஆர்டிஐ விண்ணப்பங்கள் மட்டுமே நிலுவையில் உள்ளதாகவும், விரைவில் அவையும் தீர்வு காணப்படும் என்றும் சின்ஹா உறுதியளித்தார். அரசின் தொடர்ச்சியான ஆதரவுக்கும், பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் (DoPT) ஒருங்கிணைப்புக்கும் அவர் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். அரசின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை மற்றும் குடிமக்கள்-பங்கேற்பு குறித்த பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப வாழ மத்திய தகவல் ஆணையத்தின் பங்கு முக்கியமானது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் மீண்டும் வலியுறுத்தினார்.
-------
AP/CR/KPG
(Release ID: 1913609)
Visitor Counter : 760