பிரதமர் அலுவலகம்

பேரிடரை எதிர்கொள்வதற்கான நெகிழ்திறன் உள்கட்டமைப்புக்கான 5வது சர்வதேச மாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்


"பேரிடரை தனித்து முயற்சிக்காமல் ஒருங்கிணைந்து எதிர்கொள்ள வேண்டும்"

"உள்கட்டமைப்பு என்பது வருமானம் அளிப்பதாக மட்டுமல்லாமல், நெகிழ்வுத்தன்மை கொண்டதாக அனைவரையும் சென்றடைய வேண்டும் "

"எவரையும் விட்டுவிடாத உள்கட்டமைப்பு அவசியம் "

"ஒரு பேரிடருக்கும் மற்றொரு பேரிடருக்கும் இடைப்பட்ட காலங்களில் விரிவாற்றல் கட்டமைக்கப்படுகிறது"

"உள்ளூர் நுண்ணறிவுகளுடன் கூடிய நவீனத் தொழில்நுட்பம் விரிவாற்றலுக்கு சிறப்பானதாக இருக்கும்"

"நிதி வளங்களின் அர்ப்பணிப்பு, பேரிடரை எதிர்க்கும் முன்முயற்சிகளின் வெற்றிக்கு முக்கியமானது"

Posted On: 04 APR 2023 10:39AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று 5வது சர்வதேச பேரிடரை எதிர்கொள்வதற்கான நெகிழ்திறன் உள்கட்டமைப்பு-2023 மாநாட்டில் காணொலி மூலம் உரையாற்றினார்.

பிரதமர் தமது உரையில், நெருக்கமான தொடர்புடன்  இணைக்கப்பட்ட உலகில், பேரிடர்களின் தாக்கம் உள்ளூர் மட்டத்துடன் நின்று விடாது என்ற உலகளாவிய பார்வையின் அடிப்படையில் இந்த மாநாடு நடைபெறுகிறது,  எனவே, அதனை எதிர்கொள்வதில் தனித்து செயல்படாமல், ஒருங்கிணைந்த முயற்சி அவசியம் என்று வலியுறுத்தினார்.   ஒரு சில ஆண்டுகளில், முன்னேறிய மற்றும் வளரும் நாடுகளில் இருந்து, பெரிய அல்லது சிறிய அல்லது உலகளாவிய தெற்கு அல்லது உலகளாவிய வடக்கில் இருந்து 40 க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த மாநாட்டின் அங்கமாக  மாறியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். அரசுகள்  தவிர, உலகளாவிய நிறுவனங்கள், தனியார் துறைகள் மற்றும் நிபுணர்கள்  இதில் ஈடுபட்டிருப்பது ஊக்கமளிப்பதாக உள்ளது என அவர் கூறினார்.

'விரிவாற்றலை வெளிப்படுத்தும்  உள்ளடக்கிய உள்கட்டமைப்பை வழங்குதல்' என்ற இந்த ஆண்டின் கருப்பொருளின் பின்னணியில் பேரிடரை எதிர்கொள்ளும் உள்கட்டமைப்புக்கான விவாதத்திற்கு தேவையான  சில முன்னுரிமைகளை பிரதமர் சுட்டிக் காட்டினார். உள்கட்டமைப்பு என்பது வருமானம் அளிப்பதாக மட்டுமல்லாமல், நெகிழ்வுத்தன்மை கொண்டதாக அனைவரையும் சென்றடைய வேண்டும். நெருக்கடியான காலத்திலும் உள்கட்டமைப்புகள் யாரையும் விட்டுவிடாமல் மக்களுக்குப் பயன்படுபவையாக இருக்க வேண்டும். போக்குவரத்து உள்கட்டமைப்பைப் போலவே சமூக மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்புகளும் முக்கியமானவை என்பதால், உள்கட்டமைப்பு பற்றிய முழுமையான பார்வையின் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார்.

விரைவான நிவாரணத்துடன், இயல்புநிலையை விரைவாக மீட்டெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார். "ஒரு பேரழிவிற்கும் மற்றொரு பேரழிவிற்கும் இடையில் உள்ள காலங்களில் விரிவாற்றல் கட்டமைக்கப்படுகிறது. கடந்த காலப் பேரிடர்களிலிருந்து  பாடங்களைக் கற்றுக்கொள்வதே இதற்கான வழி” என்று அவர் மேலும் கூறினார்.

பேரிடர்களைத் தாங்கக்கூடிய உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான உள்ளூர் அறிவைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவதை திரு மோடி விளக்கினார். உள்ளூர் நுண்ணறிவுகளுடன் கூடிய நவீனத் தொழில்நுட்பம் நெகிழ்வுத்தன்மையுடைய உள்கட்டமைப்புக்கு  சிறந்ததாக இருக்கும். மேலும், நன்கு ஆவணப்படுத்தப்பட்டால், உள்ளூர் அறிவு உலகளாவிய சிறந்த நடைமுறையாகக்கூட  மாறக்கூடும் என்று பிரதமர் கூறினார்.

இந்த மாநாடு முன்முயற்சிகள் சிலவற்றை உள்ளடக்கியுள்ளதன்  நோக்கத்தை பிரதமர் குறிப்பிட்டார். பல தீவு நாடுகளுக்கு இது பயனளிக்கும் என்று கூறிய அவர், கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட உள்கட்டமைப்பு விரிவாற்றல் நிதி குறித்து  குறிப்பிட்டார். இந்த 50 மில்லியன் டாலர் நிதி வளரும் நாடுகளிடையே பெரும் ஆர்வத்தை உருவாக்கியுள்ளது. "நிதி வளங்களின் அர்ப்பணிப்பு முன்முயற்சிகளின் வெற்றிக்கு முக்கியமானது" என்று பிரதமர் கூறினார்.

இந்தியாவின் ஜி20 தலைமைப் பொறுப்பை குறிப்பிட்டு, பல பணிக்குழுக்களில் இது சேர்க்கப்படும் என்று பிரதமர் தெரிவித்தார். 'நீங்கள் இங்கு ஆராயும் தீர்வுகள் உலகளாவிய கொள்கை வகுப்பின் மிக உயர்ந்த மட்டங்களில் கவனத்தைப் பெறும்' என்று அவர் கூறினார்.

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பூகம்பங்கள் போன்ற சமீபத்திய பேரழிவுகளின் அளவு மற்றும் தீவிரத்தை குறிப்பிட்ட பிரதமர், இச்சூழலில் இந்த மாநாடு  முக்கியத்துவம் பெறுவதாக அவர் கூறினார்.

------

AP/PKV/KPG



(Release ID: 1913539) Visitor Counter : 152