தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

மகளிர் சம்மான் சேமிப்புச் சான்றிதழ்கள் அஞ்சல் நிலையங்களில் கிடைக்கும்

Posted On: 01 APR 2023 8:30AM by PIB Chennai

மகளிர் சம்மான் சேமிப்புச் சான்றிதழ்கள், 2023, நாட்டிலுள்ள 1.59 லட்சம் அஞ்சல் நிலையங்களில் கிடைக்கும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வரும் என்ற அறிவிப்புடன், அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. விடுதலையின் அமிர்தப் பெருவிழாவையொட்டி, 2023-24 பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சரால் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், நிதிச் சேர்க்கையுடன் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும்.

இந்த இரண்டு ஆண்டு கால திட்டம்,   7.5 சதவீத நிலையான வட்டி  காலாண்டுக்கு ஒருமுறை அசலுடன் சேர்க்கும் வகையிலான, பகுதியளவை திரும்பப் பெறும் அம்சத்துடன் கூடிய  நெகிழ்வான முதலீடாகும். அதிகபட்ச உச்சவரம்பு ரூ. இரண்டு லட்சமாக இருக்கும்.  இந்தத் திட்டம் மார்ச் 31, 2025 வரையிலான இரண்டு வருட காலத்திற்கு செல்லுபடியாகும்.

தேசிய சேமிப்பு (மாதாந்திர வருமானக் கணக்கு) திட்டம், 2019 தேசிய சேமிப்பு (மாதாந்திர வருமானக் கணக்கு) (திருத்தம்) திட்டம், 2023 மூலம் திருத்தப்பட்டு, 2023 ஏப்ரல் 1 முதல், தனிநபர் கணக்கிற்கான அதிகபட்ச முதலீட்டு வரம்பு  நான்கு லட்சத்து ஐம்பதாயிரத்தில் இருந்து  9 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.  கூட்டுக் கணக்கிற்கு  ஒன்பது லட்சத்திலிருந்து ரூ. 15 லட்சமாக உயர்தப்பட்டுள்ளது. அதேபோல், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், 2019 மூத்த குடிமக்கள் சேமிப்பு (திருத்தம்) திட்டம், 2023 மூலம் திருத்தப்பட்டு, அதிகபட்ச முதலீட்டு வரம்பு ரூ.15 லட்சத்திலிருந்து, ரூ.30 லட்சமாக  உயர்த்தப்பட்டுள்ளது

சேமிப்பு வைப்பு மற்றும் பிபிஎப் தவிர அனைத்து சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்களும் ஏப்ரல் 1, 2023 முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் அஞ்சல் அலுவலக சிறுசேமிப்பு வாடிக்கையாளர்களுக்கு பெரிதும் பயனளிப்பதுடன், அஞ்சல் அலுவலகங்கள் மூலம் இந்தத் திட்டங்களில் அதிக முதலீட்டை ஈர்க்கும். கிராமப்புறங்களில் பெண்கள், விவசாயிகள், கைவினைஞர்கள், மூத்த குடிமக்கள், தொழிற்சாலை ஊழியர்கள், அரசு ஊழியர்கள், சிறு வணிகர்கள் மற்றும் சமூகத்தின் பிற பிரிவுகளில். சிறுசேமிப்புத் திட்டங்களில் அவர்கள் செய்யும் முதலீட்டுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மேலும் விவரங்களுக்கு www.indiapost.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

**********

AD/PKV/DL



(Release ID: 1912789) Visitor Counter : 555