பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கர்நாடகாவின் சிக்கபல்லாபூரில் ஸ்ரீ மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் திறப்பு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 25 MAR 2023 2:22PM by PIB Chennai

கர்நாடக முதல்வர் திரு பசவராஜ் பொம்மை அவர்களே, சத்குரு ஸ்ரீ மதுசூதன் சாய் அவர்களே, மேடையில் வீற்றிருக்கும் பிரமுகர்களே, தாய்மார்களே, அன்பர்களே!

கர்நாடகாவின் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம்!

சிக்கபல்லாபூர், நவீன இந்தியாவின் கட்டமைப்பாளர்களுள் ஒருவரான சர் எம். விஸ்வேஸ்வரய்யாவின் பிறப்பிடமாகும். சத்ய சாய் கிராம வடிவத்தில் நாட்டிற்கு அற்புதமான சேவையை இந்த நகரம் வழங்கி உள்ளது.

சகோதர, சகோதரிகளே,

விடுதலையின் அமிர்த பெருவிழாவில் வளர்ந்த நாடாக மாறுவதற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது. ஒவ்வொரு இந்தியரின் கூட்டு பங்களிப்போடு இது சாத்தியமாகும். எனவே அனைவரின் பங்களிப்பு என்பதை பா.ஜ.க அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைவதில் நமது சமூக மற்றும் ஆன்மீக நிறுவனங்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது.

கடந்த 9 ஆண்டுகளில் சுகாதார சேவை துறையில் நாடு செயல்திறன் வாய்ந்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. மருத்துவக் கல்வி சம்பந்தமான பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் வாயிலாக மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளை நிறுவ அரசுக்கும் பல்வேறு நிறுவனங்களுக்கும் வசதியாக உள்ளது. 2014 வரை நாட்டில் 380 மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. தற்போது இந்த எண்ணிக்கை 650ஆக அதிகரித்துள்ளது. இதில் 40 மருத்துவக் கல்லூரிகள் முன்னேற விரும்பும் மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நாட்டில் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களும் கடந்த 9 ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது.

நண்பர்களே,

ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மருத்துவம் பயில்வது மிகவும் கடினமாக இருந்தது. சில கட்சிகள் தங்களது அரசியல் நலனுக்காக வாக்கு வங்கியைக் கருத்தில் கொண்டு இதில் மொழி சார்ந்த விளையாட்டில் ஈடுபட்டன. எனினும் மருத்துவம், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி, கன்னட மொழியில் வழங்கப்படுவதற்கு முந்தைய அரசுகள் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. நமது அரசு கன்னடம் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் மருத்துவம் பயிலும் வாய்ப்பை மாணவர்களுக்கு வழங்கியுள்ளது.

நாடு ஆரோக்கியமாக இருக்கும் போது, நாட்டின் வளர்ச்சியில் அனைவரும் பங்கேற்கும் போது, வளர்ந்த இந்தியா என்ற இலக்கை மிக வேகமாக நம்மால் அடைய முடியும். மீண்டும் ஒரு முறை உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக்க நன்றி.

பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1910679

***

 (Release ID: 1910679)

AD/RB/RR


(Release ID: 1911355) Visitor Counter : 154