பிரதமர் அலுவலகம்

உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தல் மற்றும் அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழ் மொழியாக்கம்

Posted On: 24 MAR 2023 5:01PM by PIB Chennai

ஹர ஹர மகாதேவ்!

 

அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!

 

உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் அவர்களே, முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களே, மாநில அரசின் அமைச்சர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, பிற உயரதிகாரிகளே மற்றும் காசியின் என் அன்பு சகோதர சகோதரிகளே!

 

இது மங்களகரமான நவராத்திரி காலம். இன்று மாதா சந்திரகாந்தாவை  வழிபடும் நாள். இன்று காசியில் நடக்கும் இந்த மங்களகரமான நிகழ்வில் நான் உங்கள் மத்தியில் இருப்பது எனது அதிர்ஷ்டம். மாதா  சந்திரகாந்தாவின் ஆசியுடன், இன்று பனாரஸின் மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கு மற்றொரு அத்தியாயம் சேர்க்கப்படுகிறது. இன்று இங்கு கம்பிவடப் பாதை  பொது போக்குவரத்துக்கு  அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

பனாரஸின் அனைத்துத் துறை மேம்பாடு தொடர்பாக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான பிற திட்டங்கள் துவக்கப்பட்டுள்ளன அல்லது அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. குடிநீர், சுகாதாரம், கல்வி, கங்கையின் தூய்மை, வெள்ளக் கட்டுப்பாடு, காவல்துறை வசதி, விளையாட்டு வசதி மற்றும் இதுபோன்ற பல திட்டங்கள் இதில் அடங்கும். இன்று, 'மெஷின் டூல்ஸ் டிசைனில் உள்ள சிறப்பு மையத்தின்' அடிக்கல்லும் ஐ ஐ டி ஹிந்து பனாரஸ் பல்கலையில் நாட்டப்பட்டுள்ளது. பனாரஸ் மற்றொரு உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனத்தைப் பெறப் போகிறது. அனைத்து திட்டங்களுக்கும் பனாரஸ் மற்றும் பூர்வாஞ்சல் மக்களுக்கு வாழ்த்துக்கள். 

 

சகோதர சகோதரிகள்,

இன்று காசியின் வளர்ச்சி குறித்து நாடு மற்றும் உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. காசிக்கு வருபவர் புதிய ஆற்றலுடன் திரும்பிச் செல்கிறார். சுமார் 8-9 ஆண்டுகளுக்கு முன்பு காசி மக்கள் தங்கள் நகரத்தை புத்துயிர் பெறச் செய்ய உறுதிமொழி எடுத்தபோது பலர் தயங்கினர் என்பது உங்களுக்கு நினைவிருக்கும். பனாரஸில் எந்த மாற்றமும் இருக்காது காசி மக்கள் வெற்றி பெற மாட்டார்கள் என்று பலர் நினைத்தார்கள். ஆனால் காசி மக்கள் இன்று தங்கள் கடின உழைப்பால் அந்த அச்சம்  தவறு என்பதை நிரூபித்துள்ளனர்.

 

நண்பர்களே,

இன்று காசியில் பழமை மற்றும் புதுமையின் வடிவங்கள் இரண்டும் ஒரே நேரத்தில் காணப்படுகின்றன. இந்தியாவிலும் வெளிநாட்டிலும் என்னைச் சந்திக்கும் மக்கள் விஸ்வநாதர் ஆலயப் புனரமைப்பைக் கண்டு மயங்கிக் கிடப்பதாகச் சொல்கிறார்கள். கங்கா காடில் பல்வேறு திட்டங்களால் மக்கள் ஈர்க்கப்படுகிறார்கள். சமீபத்தில், காசியில் இருந்து தொடங்கப்பட்ட  உலகின் மிக நீளமான நதிக் கப்பல் பயணம் பலரது கவனத்தை ஈர்த்தது.  இதையெல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத காலம் ஒன்று இருந்தது. ஆனால் பனாரஸ் மக்கள் இதையும் சாத்தியமாக்கினர். ஆண்டுக்கு ஏழு கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் காசிக்கு வருவது இந்த மக்களின் முயற்சியால் தான். இங்கு வரும் ஏழு கோடி மக்கள், பனாரஸில் தங்குவது மட்டுமின்றி, 'பூரி கச்சோரி', 'ஜிலேபி-லாங்க்லதா', 'லஸ்ஸி', 'தண்டை ' போன்றவற்றையும் உண்டு மகிழ்கின்றனர். மேலும் பனாரசி பான், மர பொம்மைகள், பனாரசி புடவைகள், தரைவிரிப்புகள் போன்றவற்றிற்காக மாதந்தோறும் 50 லட்சத்திற்கும் அதிகமான வர்த்தகர்கள் பனாரஸுக்கு வருகிறார்கள். மகாதேவனின் ஆசியுடன் இது ஒரு பெரிய பணியாக இங்கு நிறைவேற்றப்பட்டுள்ளது. பனாரஸுக்கு வரும் இவர்கள் பனாரஸின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் வருமானம் தரும் வழிகளைக் கொண்டு வருகிறார்கள். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் புதிய வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றனர்.

 

நண்பர்களே,

கடந்த எட்டு ஒன்பது ஆண்டுகளில் பனாரஸ் வளர்ந்து வரும் வேகத்திற்கு ஒரு புதிய முன்னேற்றம் தேவை. இன்று, சுற்றுலா மற்றும் நகரத்தை அழகுபடுத்துதல் தொடர்பான பல திட்டங்கள் துவக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. சாலை, பாலம், ரயில், விமான நிலையம் என அனைத்து புதிய இணைப்பு சாதனங்களாலும் காசிக்கு பயணம் செய்வது மிகவும் எளிதாகிவிட்டது. ஆனால் இப்போது நாம் ஒரு படி மேலே செல்ல வேண்டும். வரவிருக்கும் புதிய கம்பிவடப் பாதை மூலம் காசியில் வசதியும் ஈர்ப்பும்   மேலும் அதிகரிக்கும். கம்பிவடப் பாதை அமைக்கப்பட்டதும் பனாரஸ் கான்ட் ரயில் நிலையத்திற்கும் காசி விஸ்வநாதர் வளாகத்திற்கும் இடையிலான தூரம் சில நிமிடங்களாகக் குறைக்கப்படும். இது பனாரஸ் மக்களின் வசதியை மேலும் மேம்படுத்தும். இது கான்ட் ரயில் நிலையம்  மற்றும் கோடோவ்லியா இடையே போக்குவரத்து நெரிசல் பிரச்சனையை பெரிய அளவில் தீர்க்கும்.

 

நண்பர்களே,

 அருகிலுள்ள நகரங்கள் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வெவ்வேறு நோக்கங்களுக்காக வாரணாசிக்கு வருகிறார்கள். பல ஆண்டுகளாக அவர்கள் வாரணாசியின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு வந்து தங்கள் வேலையை முடித்துவிட்டு ரயில்வே அல்லது பேருந்து நிலையத்திற்குச் செல்கிறார்கள். பனாரஸைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் போக்குவரத்து நெரிசல் அவர்களுக்குத் தடையாக இருக்கிறது. அவர்கள் தங்கள் ஓய்வு நேரத்தை ஸ்டேஷனிலேயே கழிக்க விரும்புகிறார்கள். அத்தகையவர்களும் இந்த  கம்பிவடப் பாதை மூலம் பெரிதும் பயனடைவார்கள்.

 

சகோதர சகோதரிகளே,

இந்த கம்பிவடப் பாதை திட்டம் வெறும் போக்குவரத்துத் திட்டம் மட்டுமல்ல. கான்ட் ரயில் நிலையத்திற்கு மேலே ஒரு கம்பிவடப் பாதை நிலையம் கட்டப்படும். மக்கள் உடனடியாக அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தானியங்கிப் படிக்கட்டுகள், மின்தூக்கிகள் (LIFT) சக்கர நாற்காலி சரிவு, ஓய்வறை மற்றும் வாகன நிறுத்தத்திற்கான வசதிகளும் அங்கு கிடைக்கும். கம்பிவடப் பாதை நிலையங்களில் உணவு குளிர்பான வசதிகள் மற்றும் ஷாப்பிங் வசதிகளும் இருக்கும். இது காசியின் மற்றொரு வணிக மற்றும் வேலைவாய்ப்பு மையமாக உருவாகும்.

 

நண்பர்களே,

பனாரஸின் விமான இணைப்பை வலுப்படுத்தும் திசையில் முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பாபத்பூர் விமான நிலையத்தில் புதிய ஏடிசி டவர் இன்று திறக்கப்பட்டது. இதுவரை, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமார் 50 விமானங்களைக் கையாளும் திறன் கொண்டது புதிய ஏடிசி டவர் அமைப்பதன் மூலம் இந்த திறன் அதிகரிக்கும். எதிர்காலத்தில் விமான நிலையத்தை விரிவுபடுத்துவது எளிதாக இருக்கும்.

 

சகோதர சகோதரிகளே,

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் காசியில் பல வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும். காசியில் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் சிறிய தேவைகளை கருத்தில் கொண்டு மிதக்கும் ஜெட்டி உருவாக்கப்பட்டு வருகிறது. நமாமி கங்கை இயக்கத்தின் கீழ் கங்கையை ஒட்டிய நகரங்களில் கழிவுநீர் சுத்திகரிப்புக்கான ஒரு பெரிய ஒருங்கிணைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நீங்கள் கடந்த 8-9 ஆண்டுகளில் கங்கையின் புத்துயிர் பெற்ற மலைப் பகுதிகளைப் பார்க்கிறீர்கள்.  இப்போது கங்கையின் இருபுறமும் சுற்றுச்சூழல் தொடர்பான மிகப்பெரிய பிரச்சாரம் தொடங்கப்பட உள்ளது. கங்கை நதியின் இருபுறமும் 5 கிலோமீட்டர் நீளத்திற்கு இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையிலும் இதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. உரம் மற்றும் இயற்கை விவசாயத்திற்கு புதிய மையங்கள் அமைக்கப்படுகின்றன.

 

நண்பர்களே,

பனாரஸுடன் ஒட்டுமொத்த கிழக்கு உத்தரப்பிரதேசமும் விவசாயம் மற்றும் விவசாய ஏற்றுமதியின் முக்கிய மையமாக மாறி வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இன்று, பழங்கள் மற்றும் காய்கறிகளை பதப்படுத்துதல், சேமித்தல் மற்றும் போக்குவரத்து தொடர்பான பல நவீன வசதிகள் வாரணாசியில் வந்துள்ளன. இன்று, பனாரஸின்  'லாங்டா' மாம்பழம், காஜிபூரின் ஓக்ரா மற்றும் பச்சை மிளகாய், ஜான்பூரின் முள்ளங்கி மற்றும் முலாம்பழம் வெளிநாட்டுச் சந்தைகளை அடையத் தொடங்கியுள்ளன. இந்த சிறிய நகரங்களில் விளையும் பழங்கள் மற்றும் காய்கறிகள் இப்போது லண்டன் மற்றும் துபாய் சந்தைகளில் கிடைக்கின்றன. அதிக ஏற்றுமதி செய்தால் விவசாயிகளின் கைகளில் அதிக பணம் கிடைக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். கார்க்கியான் உணவுப் பூங்காவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேக் ஹவுஸ் விவசாயிகளுக்கும், பூ வியாபாரிகளுக்கும் பெரிதும் உதவப் போகிறது. இன்று காவல் படை தொடர்பான திட்டங்களும் இங்கு ஆரம்பித்து வைக்கப்பட்டன. இது காவல் துறையினரின் மன உறுதியை உயர்த்துவதுடன் சட்டம் ஒழுங்கு நிலையும் மேம்படும் என்று நான் நம்புகிறேன்.

 

நண்பர்களே,

நாம் தேர்ந்தெடுத்த வளர்ச்சிப் பாதையில் வசதி மற்றும் உணர்திறன் இரண்டும் உண்டு. இப்பகுதியில் குடிநீர் பிரச்சினை ஒரு சவாலாக இருந்து வருகிறது. இன்று குடிநீர் தொடர்பான பல திட்டங்கள் துவக்கப்பட்டு புதிய திட்டப்பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. ஏழைகளின் பிரச்சினைகளைத் தணிக்க 'ஹர் கர் நல்' என்ற தண்ணீர் பிரச்சாரத்தை நமது அரசு நடத்தி வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் நாடு முழுவதும் எட்டு கோடி புதிய வீடுகளுக்குக் குழாய் நீர் வந்து சேரத் தொடங்கியுள்ளது. காசி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் இதனால் பயனடைந்துள்ளனர். பனாரஸ் மக்களும் உஜ்வாலா யோஜனா மூலம் நிறைய பயனடைந்துள்ளனர். சேவாபுரியில் அமைக்கப்பட்டுள்ள புதிய எரிவாயு நிரப்பும் ஆலையும் இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு உதவும். இது கிழக்கு உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு பீகாரில் எரிவாயு சிலிண்டர்களை வழங்குவதற்கு வசதியாக இருக்கும்.

 

நண்பர்களே,

இன்று மத்தியிலும் உத்தரப்பிரதேசத்திலும் உள்ள அரசு, ஏழைகள் மீது அக்கறை கொண்ட அரசாக உள்ளது. நீங்கள் என்னை பிரதமர் என்றோ அல்லது அரசு என்றோ அழைக்கலாம். ஆனால் மோடி தன்னை உங்கள் சேவகன் என்று கருதுகிறார். இந்த சேவை உணர்வோடு காசி, உத்திரபிரதேசம் மற்றும் நாட்டிற்கு சேவை செய்கிறேன். சிறிது நேரத்திற்கு முன்பு, அரசின் திட்டங்கள் பற்றிப் பல்வேறு பயனாளிகளிடம் பேசிக்கொண்டிருந்தேன். ஸ்வஸ்த் திருஷ்டி திட்டத்தின் கீழ் சிலர் கண்பார்வை பெற்றனர், சிலர் 'ஸ்வஸ்த் த்ரிஷ்டி சம்ரித் காஷி' பிரச்சாரத்தின் மூலம் அரசாங்க உதவியுடன் தங்கள் வாழ்வாதாரத்தை  மேம்படுத்தியுள்ளனர். நான் ஒரு மனிதரைச் சந்தித்தேன், அவர் 'ஐயா, ஸ்வஸ்த் த்ரிஷ்டி திட்டத்தின் கீழ் சுமார் 1,000 பேருக்கு கண்புரைக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது' என்று கூறினார். இன்று பனாரஸில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் அரசின் திட்டங்களின் பலன்களைப் பெறுகிறார்கள் என்பதில் நான் திருப்தி அடைகிறேன். 2014-க்கு முந்தைய நாட்களை நினைத்துப் பாருங்கள். அப்போது வங்கிக் கணக்குகளைத் திறப்பது கூட கடினமான பணியாக இருந்தது. வங்கிகளில் கடன் வாங்குவதைப் பற்றி சாதாரண குடும்பத்தால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இன்று ஏழ்மையான குடும்பங்களில் கூட ஜன்தன் வங்கிக் கணக்கு வேண்டும். அரசின் உதவி இன்று அவரது வங்கிக் கணக்கில் நேரடியாக வந்து சேரும். இன்று, சிறு விவசாயியாக இருந்தாலும் சிறு தொழிலதிபராக இருந்தாலும் நமது சகோதரிகளின் சுயஉதவி குழுக்களாக இருந்தாலும் அனைவருக்கும் முத்ரா போன்ற திட்டங்களின் கீழ் எளிதாக கடன் கிடைக்கிறது. நாம் முத்ரா போன்ற திட்டங்களின் கீழ் கிசான் கிரெடிட் கார்டுகளுடன் கால்நடை வளர்ப்பவர்கள் மற்றும் மீன்வளர்ப்பில் ஈடுபடுபவர்களையும் இணைத்துள்ளோம். முதன்முறையாக, எங்கள் தெருவோர வியாபாரிகளும் பிரதமர் ஸ்வாநிதி யோஜனா திட்டத்தின் கீழ் வங்கிகளில் கடன் பெறத் தொடங்கியுள்ளனர். எங்கள் விஸ்வகர்மா சக ஊழியர்களுக்கு உதவும் வகையில் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில்  பிரதமர் விஸ்வகர்மா திட்டத்தையும் கொண்டு வந்துள்ளோம். அமிர்த காலத்தில் வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்ப ஒவ்வொரு இந்தியனும் பங்களிக்க வேண்டும் என்பதும், யாரும் பின் தங்கிவிடக் கூடாது என்பதே நமது  முயற்சி.

 

சகோதர சகோதரிகளே,

கேலோ பனாரஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களிடம் இப்போதுதான் பேசினேன். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்றனர். எனது பனாரஸ் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள அனைவரையும் வாழ்த்துகிறேன். பனாரஸ் இளைஞர்கள் விளையாடுவதற்கான அதிகபட்ச வாய்ப்புகளைப் பெறும் வகையில் புதிய வசதிகளும் இங்கு உருவாக்கப்பட்டு வருகின்றன. சிக்ரா விளையாட்டு அரங்கத்தின் மறுமேம்பாட்டின் முதல் கட்டம் கடந்த ஆண்டு தொடங்கியது. இன்று கட்டம்-2 மற்றும் கட்டம்-3க்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இப்போது இங்கு பல்வேறு விளையாட்டு மற்றும் விடுதிகளுக்கான நவீன வசதிகள் உருவாக்கப்படும். இப்போது வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியமும் கட்டப்பட உள்ளது. இந்த அரங்கம் தயாரானதும், காசி இன்னும் கவனம் பெறும்.

 

சகோதர சகோதரிகளே,

இன்று உத்தரபிரதேசம் ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சியின் புதிய பரிமாணங்களை அமைத்து வருகிறது. நாளை அதாவது மார்ச் 25-ம் தேதி யோகிஜியின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கி ஓராண்டு நிறைவடைகிறது. இரண்டு மூன்று நாட்களுக்கு முன், யோகிஜி, உத்தரப்பிரதேசத்தில் அதிக காலம் முதல்வராக இருந்தவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். விரக்தியின் பழைய பிம்பத்திலிருந்து வெளியே வந்து, உத்தரப்பிரதேசம் பாதுகாப்பும் வசதியும் எங்கு அதிகரிக்கிறதோ அங்கே நிச்சயம் செழிப்பு இருக்கும். இன்று உத்தரபிரதேசத்தில் இதுதான் நடக்கிறது. இன்று தொடங்கப்பட்டுள்ள புதிய திட்டங்களும் செழிப்பின் பாதையை வலுப்படுத்துகின்றன. மீண்டும் ஒருமுறை, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். நான் உங்களை வாழ்த்துகிறேன். ஹர ஹர மகாதேவ்!

 

நன்றி.

 

இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். அசல் உரை ஹிந்தியில் நிகழ்த்தப்பட்டது.

***

SRI/CJL/DL



(Release ID: 1910955) Visitor Counter : 127