உள்துறை அமைச்சகம்
மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித் ஷா, இன்று சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் நடைபெற்ற மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (CRPF) 84வது நிறுவன நாள் விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்
Posted On:
25 MAR 2023 2:13PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் கடந்த 9 ஆண்டுகளாக இடதுசாரி தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான சண்டையில் பாதுகாப்புப் படைகள் தீர்க்கமான வெற்றியைப் பெற்றுள்ளனர்.
இடதுசாரி தீவிரவாதத்தின் மையப்பகுதியான சத்தீஸ்கரின் பஸ்தாரில் முதன்முறையாக மத்திய ரிசர்வ் போலீஸ் படை(CRPF) தனது நிறுவன நாள் அணிவகுப்பை ஏற்பாடு செய்துள்ளது. இது ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை சேர்க்கும் விசயமாகும்.
உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் அமைதிக்காக சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனர். இது அவர்களின் தைரியம் மற்றும் துணிச்சலால் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள், ஜம்மு & காஷ்மீர் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அமைதியை மீட்டெடுப்பதில் சிஆர்பிஎஃப் மிகவும் பாராட்டத்தக்க பங்களிப்பைக் செய்துள்ளது.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையிலான அரசின் நடவடிக்கைகளால், இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வன்முறைகள் வெகுவாகக் குறைந்துள்ளன. இப்போது இந்தப் பகுதிகளில் அனைவரும் வளர்ச்சி அடைந்து வருகின்றனர்.
பல தசாப்தங்களாக இடதுசாரி தீவிரவாதத்தின் கோட்டையாக இருந்த பீகார் மற்றும் ஜார்கண்டில் உள்ள புத்த பஹாட், சக்ரபந்தா மற்றும் பரஸ்நாத் பகுதிகள் இப்போது இடதுசாரி தீவிரவாதத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
பழங்குடியினப் பகுதிகளின் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்த இடதுசாரி தீவிரவாதத்தை சிஆர்பிஎஃப் வேரோடு பிடுங்கி எறிந்ததுள்ளது
இடதுசாரி தீவிரவாதம் தொடர்பான வன்முறைச் சம்பவங்கள் 2010 இன் உச்சத்தை விட 76% குறைந்துள்ளது. உயிரிழப்புகளும் சுமார் 78% குறைந்துள்ளன.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், நாட்டின் பாதுகாப்புப் படையினருக்கு அனைத்து வசதிகளையும் வழங்குவதற்கும், அவர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும் அரசு உறுதிபூண்டுள்ளது
திரு அமித் ஷா பிரசார்-பாரதியின் செய்தி சேவையை பஸ்தார் பிரிவில் உள்ளூர் ஹல்பி மொழியில் தொடங்கி வைத்தார். பழங்குடி மக்களின் சொந்த மொழியில் முதல் செய்தித் தொகுப்பைத் தொடங்கியதற்காக அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனை வாழ்த்தினார்.
இது நமது உள்ளூர் மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகளை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல் இந்தப் பிராந்தியத்தில் வாழும் மக்கள் உலகெங்கிலும் நடக்கும் நிகழ்வுகளின் செய்திகளைப் பெறவும், நாட்டின் பிற பகுதிகள் மற்றும் உலகத்துடன் இணைக்கவும் முடியும்.
மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு துறை அமைச்சருமான திரு அமித் ஷா, இன்று சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் நடைபெற்ற மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (CRPF) 84வது நிறுவன நாள் விழாவில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பஸ்தார் பிரிவுக்கான உள்ளூர் மொழி ஹல்பியில் பிரசார் பாரதியின் செய்தித் தொகுப்பையும் திரு. அமித் ஷா தொடங்கி வைத்தார்.
திரு அமித் ஷா தனது உரையில், இடதுசாரி தீவிரவாத பிரச்சனை தொடங்கியதிலிருந்து சிஆர்பிஎஃப் நிறுவப்பட்ட பிறகும் முதல் முறையாக சத்தீஸ்கரில் இந்த நாள் கொண்டாடப்படுவது நம் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார். சத்தீஸ்கரில் இடதுசாரி தீவிரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வரும் உத்வேகத்தின் போது 763 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர் என்றும் அவர் கூறினார். இன்று இடதுசாரி தீவிரவாதத்திற்கு எதிரான நமது போராட்டம் ஒரு தீர்க்கமான கட்டத்தில் உள்ளது. அதற்காக வீரமரணம் அடைந்த வீரர்களின் பங்களிப்பு மகத்தானது.
மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா, ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கில் அமைதியைக் கொண்டுவருவது, பழங்குடியினருக்கு வளர்ச்சியைக் கொண்டுவர இடதுசாரி தீவிரவாதத்திற்கு எதிராகப் போராடுவது என சிஆர்பிஎஃப் வீரர்கள் ஒவ்வொரு துறையிலும் இணையற்ற வீரத்தையும் துணிச்சலையும் வெளிப்படுத்தியுள்ளனர் என்றார். உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையில் சிஆர்பிஎஃப்-ன் பொற்கால வரலாறு அனைத்து வீரர்களின் வீரம் மற்றும் தியாகத்தின் உணர்வால் அமைந்துள்ளது என்று அவர் கூறினார். 174 கோடி மதிப்பிலான சிஆர்பிஎஃப்-ன் மூன்று வளர்ச்சித் திட்டங்களும் இன்று இங்கு தொடங்கப்பட்டுள்ளன என்று திரு ஷா கூறினார். பிரசார் பாரதியின் வாராந்திர செய்தித் தொகுப்பை ஆகாஷ்வாணி இன்று முதல் ஹல்பி மொழியில் தொடங்கியுள்ளது என்றார். சத்தீஸ்கரில் பழங்குடியின மொழியில் முதல் செய்தித் தொகுப்பை தொடங்கியதற்காக அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனுக்கு மத்திய உள்துறை அமைச்சர் வாழ்த்து தெரிவித்தார். இதன் மூலம் நமது உள்ளூர் மொழிகள் வலுப்பெறுவது மட்டுமின்றி, இப்பகுதியில் வாழும் மக்கள் உலகம் முழுவதும் உள்ள செய்திகளைப் பெறவும், நாட்டின் பிற பகுதிகள் மற்றும் உலகத்துடன் இணைக்கவும் முடியும்.
இன்று, சிஆர்பிஎஃப் மகளிர் மோட்டார் சைக்கிள் அணியை வரவேற்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது என்று அமித் ஷா கூறினார். 38 மோட்டார் சைக்கிள்களுடன் 75 பெண் வீராங்கனைகள் 2023 மார்ச் 09 அன்று தொடங்கிய 1,848 கிலோமீட்டர் பயணத்தை முடித்து இன்று இங்கு வந்தடைந்துள்ளனர். இந்த பெண் வீராங்கனைகளின் துணிச்சல் பெண் சக்தியின் செய்தியை நாடு முழுவதும் பரப்ப உதவும் என்று கூறினார்.
மத்திய உள்துறை அமைச்சர், CRPF 1939 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி நிறுவப்பட்டது என்றாலும் இந்த படைக்கான அதன் நவீன வடிவத்தை இரும்பு மனிதரும் நாட்டின் முதல் உள்துறை அமைச்சருமான சர்தார் படேல் வழங்கியதாக கூறினார். 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி சர்தார் படேல் மத்திய ரிசர்வ் போலீஸ் படை என்று பெயர் மாற்றம் செய்து 1950ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி இந்தப் படைக்கு அடையாளச் சின்னத்தை வழங்கினார். 246 படைப் பிரிவுகள், 4 மண்டலத் தலைமையகங்கள், 21 துறை தலைமையகங்கள், 2 செயல்பாட்டுத் துறை தலைமையகங்கள், 17 செயல்பாட்டு வரம்புகள், 42 நிர்வாகத் துறைத் தலைமையகங்கள், 25 நிர்வாகப் பிரிவுகள் என ஒரு படைப்பிரிவுடன் தொடங்கிய இந்தப் படை இன்று நாட்டிலேயே மிகப்பெரிய சிஏபிஎஃப் படையாக 3.25 லட்சம் பணியாளர்களோடு உள்ளது என்று திரு அமித் ஷா கூறினார்.
அக்டோபர் 21, 1959 அன்று, லடாக்கில் உள்ள ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்துடன் போரிட்டபோது சிஆர்பிஎஃப் வீரர்கள் அசாத்திய துணிச்சலையும் தியாக உணர்வையும் வெளிப்படுத்தி வீரமரணம் அடைந்ததாக திரு அமித் ஷா கூறினார். அவர்களின் தியாகத்தை அழியாததாக மாற்ற அக்டோபர் 21 ஆம் தேதியை காவல்துறை நினைவு தினமாக அனுசரிக்க தேசம் முடிவு செய்தது. பிரதமர் திரு நரேந்திர மோடி, புதுதில்லியில் உள்ள சாணக்யபுரியில் தேசிய காவல்துறை நினைவிடத்தை அமைத்துள்ளார். அங்கு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21 ஆம் தேதி, வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. ஏப்ரல் 9, 1965 அன்று கட்ச் பாலைவனத்தில் உள்ள சர்தார் போஸ்டில் பாகிஸ்தான் ராணுவத்திற்கு சிஆர்பிஎஃப் தைரியமாக பதிலடி கொடுத்ததாகவும் அந்த நாளைக் குறிக்கும் வகையில் ஏப்ரல் 09 ஆம் தேதி நாடு முழுவதும் வீர தினமாக (Shaurya Diwas) அனுசரிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில், நாட்டின் பாதுகாப்புப் படைகள் கடந்த 9 ஆண்டுகளில் இடதுசாரி தீவிரவாதத்திற்கு எதிராக தீர்க்கமான போரில் ஈடுபட்டு மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளதாக திரு அமித் ஷா கூறினார். இடதுசாரி தீவிரவாதிகளால் வளர்ச்சிப் பாதையில் உள்ள தடைகளை சிஆர்பிஎஃப் அகற்றியுள்ளது என்றும் அவர் கூறினார். பிரச்சனையான அனைத்து பகுதிகளிலும் சிஆர்பிஎஃப், உள்ளூர் காவல் துறையினருடன் இணைந்து அவர்களை ஊக்குவிப்பதன் மூலம் ஒரு அசாத்தியமான படையை உருவாக்கி அதன் அமைப்பு திறனை வெளிப்படுத்தியது என்று திரு அமித் ஷா கூறினார்.
மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித்ஷா, இடதுசாரி தீவிரவாதம் தொடர்பான வன்முறை சம்பவங்கள் 2010ஆம் ஆண்டை விட 76% குறைந்துள்ளதாகவும் உயிர் இழப்புகள் 78% குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார். இது தவிர, இடதுசாரி தீவிரவாதிகள் மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகளை சாதகமாக்குவதைத் தடுக்க பல்வேறு மாநிலங்களின் காவல்துறையுடன் இணைந்து சிஆர்பிஎஃப் ஒரு கூட்டு பணிக்குழுவையும் உருவாக்கியுள்ளது. இன்று புத்த பஹாட், சகர்பண்டா, பரஸ்நாத் ஆகிய மும்முனை சந்திப்புகள் இடதுசாரி தீவிரவாதத்தில் இருந்து விடுபட்டு நாட்டின் பிரதான நீரோட்டத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கு அனைத்து வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார். பீகார் மற்றும் ஜார்கண்டில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் முடிவுக்கு வருவதாகவும் துணிச்சலான சிஆர்பிஎஃப் வீரர்கள் மற்றும் காவல் துறை படைகளின் ஒருங்கிணைந்த பலத்தால் மட்டுமே இது சாத்தியமானது என்றும் திரு அமித்ஷா கூறினார். இடதுசாரி தீவிரவாதிகளின் நிதி ஆதாரத்தைத் தடுக்க, தேசிய பாதுகாப்பு முகமை (NIA) மற்றும் அமலாக்க இயக்குனரகம் (ED) மூலம் வழக்குகளைப் பதிவு செய்வதன் மூலம் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் கூறினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையிலான அரசின் வளர்ச்சிப் பணிகள் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கடைசி நபரையும் சென்றடைகின்றன என்று திரு அமித் ஷா கூறினார். மேம்பாட்டுக்காக அனுமதிக்கப்பட்ட 70,000 கி.மீ சாலைகளில் 11,000 கி.மீ சாலைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 2,343 செல்லிடப்பேசி கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளன. முன்னுரிமை பகுதிகளில் ஏக்லவ்யா பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 5 ஆண்டுகளில் 1,258 வங்கிக் கிளைகள் திறக்கப்பட்டுள்ளன. 1,348 ஏடிஎம்கள் திறக்கப்பட்டுள்ளன. திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 47 ஐடிஐகள் மற்றும் 68 திறன் மேம்பாட்டு மையங்கள் திறக்கும் பணிகளும் நிறைவடைந்துள்ளன. பிரதமர் திரு நரேந்திர மோடி, சிஆர்பிஎஃப் மற்றும் உள்ளூர் காவல்துறையின் கூட்டு முயற்சியால் இந்த பகுதியில் வளர்ச்சி வேகம் அதிகரித்து வருகிறது என்றார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு சிஆர்பிஎஃப் வீரர்களின் நலனுக்காக பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். சத்தீஸ்கர் பஸ்தாரியா படைப்பிரிவில் 400 உள்ளூர் இளைஞர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 398 பெரிய மற்றும் சிறிய பாலங்களை உருவாக்குவதில் CRPF பங்களிப்பு செய்துள்ளது. 25 லட்சத்துக்கும் அதிகமான மூவர்ணக் கொடிகளை ஏற்றி (Har Ghar Tiranga Abhiyan) வெற்றிபெற சிஆர்பிஎஃப் பங்களிப்பை வழங்கியது என்றும் அவர் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில், சிஆர்பிஎஃப் நவீனமயமாக்கலுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றார். 2022-23ல் மட்டும் 14 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றார். ஜக்தல்பூரில் மனவள மையம் மற்றும் படைப்பிரிவுகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்காக 4,309 கோடி ரூபாய் சிஆர்பிஎஃப்-க்கு செலவிடப்பட்டுள்ளது. சுமார் 11,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளன, மேலும் 28,500 வீடுகளை CAPFக்காக கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாதமும் சிறுமிகளுக்கு ரூ.3,000 மற்றும் சிறுவர்களுக்கு ரூ. 2,500 வழங்கப்படுகிறது.
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு, அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் வழங்குவதிலும் அவர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும் அவர்களுடன் நிற்கிறது என்று சிஆர்பிஎஃப் வீரர்களிடம் திரு அமித் ஷா கூறினார். 84 ஆண்டுகால சி ஆர் பி எஃப் இன் புகழ்பெற்ற வரலாற்றை மேலும் வலுப்படுத்தும். அதே வேளையில், இடதுசாரி தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் வரை அர்ப்பணிப்புடன் தேசத்திற்குப் இந்தப்படை தொடர்ந்து சேவை செய்யும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
***
AD/CJL/DL
(Release ID: 1910799)
Visitor Counter : 213