பிரதமர் அலுவலகம்

கர்நாடகாவின் சிக்கபல்லாபூரில் ஸ்ரீ மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை திறந்து வைத்தார் பிரதமர்


சர் எம்.எம் விஸ்வேஸ்வரய்யாவுக்கு அஞ்சலி செலுத்துனார்

"சப்கா பிரயாஸ்' மூலம், இந்தியா ஒரு வளர்ந்த நாடாக மாறும் பாதையில் உள்ளது"

"கர்நாடகம் ஏழைகளுக்கு சேவை செய்யும் மத மற்றும் சமூக நிறுவனங்களைக் கொண்டுள்ளது"

“எங்கள் அரசு ஏழைகளின் நலனுக்காக பாடுபடுகிறது. இது கன்னடம் உள்பட அனைத்து இந்திய மொழிகளிலும் மருத்துவக் கல்வி பயிலும் வசதியை வழங்கியுள்ளது.

"ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சுகாதார நலனுக்கு நாங்கள் முன்னுரிமை அளித்துள்ளோம்"

"சுகாதாரம் தொடர்பான கொள்கைகளில் நாங்கள் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கிறோம்"

Posted On: 25 MAR 2023 1:04PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று சிக்கபல்லாப்பூரில் ஸ்ரீ மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை திறந்து வைத்தார். அனைவருக்கும் மருத்துவக் கல்வி மற்றும் தரமான மருத்துவ சேவையை இந்த மருத்துவமனை முற்றிலும் இலவசமாக வழங்கும். 2023-ம் கல்வியாண்டில் இந்த நிறுவனம் செயல்படத் தொடங்கும்.

 

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், நவீன இந்தியாவின் கட்டிடக் கலைஞர்களில் ஒருவரான சர்.எம்.எம்.விஸ்வேஸ்வரய்யா பிறந்த இடம் சிக்கபல்லாப்பூர் என்றும், அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்கும், அவரது அருங்காட்சியகத்தைப் பார்வையிடவும் வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி தெரிவித்தார். ”இந்த புண்ணிய பூமிக்கு முன் நான் தலை வணங்குகிறேன்" என்றும் பிரதமர் குறிப்பிட்டார். சர் விஸ்வேஸ்வரய்யா புதிய கண்டுபிடிப்புகளைக் கொண்டு வரவும், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்காக புதிய பொறியியல் திட்டங்களை உருவாக்கவும் உத்வேகம் அளித்தது சிக்கபல்லாப்பூர் நிலம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

 

சேவையின் முன்மாதிரியாக சத்ய சாய் கிராம் செயபடுவதாக பிரதமர் கூறினார். கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக அந்நிறுவனம் மேற்கொண்டு வரும் பணியை அவர் பாராட்டினார். இன்றைய மருத்துவக் கல்லூரி திறப்பு விழா அவர்களின் பணியை மேலும் வலுப்படுத்தியுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

 

அமிர்த காலத்தின் போது வளர்ந்த நாடாக இருக்க வேண்டும் என்ற தேசத்தின் தீர்மானத்தையும், இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய தீர்மானத்தை நிறைவேற்றுவது குறித்த மக்களின் ஆர்வத்தையும் பிரதமர் குறிப்பிட்டார். "ஒரே ஒரு பதில் உள்ளது, வலுவான, உறுதியான மற்றும் சமயோசிதமான பதில். அதாவது ஒன்றிணைந்த முயற்சி. நாட்டிலுள்ள ஒவ்வொரு மக்களின் முயற்சியாலும் இது நிச்சயம் நிறைவேறும்” என்றும் பிரதமர் கூறினார்.

 

‘வளர்ச்சியடைந்த இந்தியாவை’ அடைவதற்கான பயணத்தில் சமூக மற்றும் மத நிறுவனங்களின் பங்கையும், துறவிகள், ஆசிரமங்கள் மற்றும் மடங்களின் பாரம்பரியத்தையும் பிரதமர் எடுத்துரைத்தார்.

 

இந்த சமூக மற்றும் மத அமைப்புகள், ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடிகளுக்கு அதிகாரம் அளித்து வருவதாகப் பிரதமர் கூறினார். “உங்கள் நிறுவனம் செய்யும் பணி, ‘அனைவரின் முயற்சி’ என்ற உணர்வை வலுப்படுத்துகிறது,” என்று பிரதமர் கூறினார்.

 

யோகாவின் நிபுணத்துவத்தை மையமாகக் கொண்ட ஸ்ரீ சத்ய சாய் பல்கலைக்கழகத்தின் ‘யோகா கர்மசு கௌசலம்’ என்ற குறிக்கோள் குறித்தும் பிரதமர் விரிவாக எடுத்துரைத்தார்.

 

மருத்துவத் துறையில் அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளையும் பிரதமர் மோடி விளக்கினார். 2014-ம் ஆண்டுக்கு முன்னர் நாட்டில் 380-க்கும் குறைவான மருத்துவக் கல்லூரிகளே இருந்ததாகவும், ஆனால் இன்று 650-க்கும் அதிகமான மருத்துவக் கல்லூரிகள் உள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். ஒரு காலத்தில் வளர்ச்சியில் பின்தங்கியிருந்த மாவட்டங்களில் 40 மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

 

கடந்த 9 ஆண்டுகளில், நாட்டில் மருத்துவ இடங்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டில் உருவாகும் மருத்துவர்களின் எண்ணிக்கை, சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து தற்போது வரை இந்தியாவிலுள்ள மருத்துவர்களின் எண்ணிக்கைக்கு சமமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். நாட்டில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சியின் பலனை கர்நாடகாவும் அறுவடை செய்து வருகிறது என்பதை சுட்டிக் காட்டிய பிரதமர், நாட்டில் சுமார் 70 மருத்துவக் கல்லூரிகள் உள்ள மாநிலம் கர்நாடகா என்றும், சிக்கபல்லாப்பூரில் தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரி இரட்டை இன்ஜின் அரசின் முயற்சிக்கு எடுத்துக்காட்டு என்றும் தெரிவித்தார். இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, நாட்டில் 150-க்கும் மேற்பட்ட செவிலியர் கல்லூரிகளை அமைக்க எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் குறித்து தெரிவித்த பிரதமர், இதனால் செவிலியர் துறையில் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும் எனவும் தெரிவித்தார்.

 

மருத்துவக் கல்வியில் கற்பித்தல் மொழியிலுள்ள சவாலைக் குறிப்பிட்ட பிரதமர், மாநில மொழிகளில் மருத்துவக் கல்வியை கற்பிக்க கடந்த காலங்களில் போதிய முயற்சிகள் எடுக்கப்படவில்லை என்று வருத்தம் தெரிவித்தார். கிராமங்கள் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் இருந்து வரும் இளைஞர்கள் மருத்துவம் மற்றும் பொறியியல் துறையில் இடம் பெறுவதை மற்ற அரசியல் கட்சிகள் விரும்பவில்லை என்றார். “எங்கள் அரசு ஏழைகளின் நலனுக்காக பாடுபடுகிறது. இது கன்னடம் உட்பட அனைத்து இந்திய மொழிகளிலும் மருத்துவக் கல்வியை கற்பதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது” என்று பிரதமர் கூறினார்.

 

ஏழைகளை வாக்கு வங்கிகளாக மட்டுமே கருதும் அரசியல் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளதாக பிரதமர் வேதனை தெரிவித்தார். “எங்கள் அரசு ஏழைகளுக்கு சேவை செய்வதை தனது உயரிய கடமையாகக் கருதுகிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்களின் ஆரோக்கியத்திற்கு நாங்கள் முன்னுரிமை அளித்துள்ளோம்” என்று பிரதமர் மோடி கூறினார். மக்கள் மருந்தகத்தில் குறைந்த விலையில் மருந்துகள் கிடைப்பதை எடுத்துக்காட்டாகக் கூறிய பிரதமர், இன்று நாடு முழுவதும் சுமார் 10 ஆயிரம் மக்கள் மருந்தகங்கள் உள்ளதாகவும்அவற்றில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவை கர்நாடகாவில் உள்ளதாகவும் கூறினார். இதுபோன்ற முயற்சியால் ஏழைகள் மருந்துகளுக்காக செலவிடும் தொகையில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்  சேமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 

ஏழைகள் மருத்துவமனைகளில் எளிதில் சிகிச்சை பெற முடியாத காலம் இருந்ததை பிரதமர் சுட்டிக்காட்டினார். தற்போதைய அரசு ஏழைகளை கவனத்தில் கொண்டுஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் ஏழைக் குடும்பங்களுக்கு மருத்துவமனைகளின் கதவுகளைத் திறந்துவிட்டு இந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். கர்நாடகாவில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர் என்பதை சுட்டிக் காட்டிய பிரதமர், “ஏழைகளுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சைக்கு அரசு உத்தரவாதம் அளித்துள்ளது” என்றார். இதய அறுவை சிகிச்சை, முழங்கால் மாற்று சிகிச்சை மற்றும் டயாலிசிஸ் போன்ற அதிக செலவுடைய அறுவை சிகிச்சைகளின் கட்டணத்தைக் குறைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

 

“சுகாதாரம் தொடர்பான கொள்கைகளில் பெண்களுக்கு முன்னுரிமை அளித்து வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நமது தாய்மார்களின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து மேம்படும்போது ஒட்டுமொத்த தலைமுறையினரின் ஆரோக்கியமும் மேம்படும் என்பதை சுட்டிக் காட்டிய பிரதமர், இதற்காக அரசு சிறப்புக் கவனம் செலுத்தி வருவதாகவும், கழிவறை கட்டுதல், இலவச எரிவாயு இணைப்புகள் வழங்குதல், குழாய் மூலம் குடிநீர் வழங்குதல், ஒவ்வொரு வீட்டிற்கும், இலவச சானிட்டரி நாப்கின்ளை வழங்குதல், சத்தான உணவுக்காக வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் அனுப்புதல் போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் கூறினார். மார்பகப் புற்றுநோய்க்கு அரசு அளித்துள்ள சிறப்புக் கவனத்தை சுட்டிக் காட்டிய அவர், கிராமங்களில் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் திறக்கப்பட்டு, ஆரம்ப நிலையிலேயே இதுபோன்ற நோய்களைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மாநிலத்தில் 9,000க்கும் மேற்பட்ட சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களை அமைத்ததற்காக கர்நாடக முதலமைச்சர் பொம்மை மற்றும் அவரது அரசுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

 

ஏஎன்எம் மற்றும் ஆஷா பணியாளர்களுக்கு அதிகாரம் அளித்ததற்காக கர்நாடக அரசைப் பிரதமர் பாராட்டினார். கர்நாடகாவில் 50 ஆயிரம் ஏஎன்எம் மற்றும் ஆஷா பணியாளர்கள், சுமார் 1 லட்சம் பதிவு செய்யப்பட்ட செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் நவீன கருவிகளைப் பெற்றுள்ளதாகவும், இரட்டை எஞ்சின் அரசு அவர்களுக்கு சாத்தியமான அனைத்து வசதிகளையும் வழங்க முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 

சுகாதாரத்துடன், பெண்களின் பொருளாதார மேம்பாட்டிலும் இரட்டை எஞ்சின் அரசு முழு கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் கூறினார். கர்நாடகாவை பால் மற்றும் பட்டு நிலம் என்று கூறிய பிரதமர், கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கான கிசான் கடன் அட்டை, 12 ஆயிரம் கோடி செலவில் கால்நடைகளுக்கு மாபெரும் தடுப்பூசி போடும் திட்டம் குறித்தும் தெரிவித்தார். இது பால் கூட்டுறவு சங்கங்களில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க இரட்டை எஞ்சின் அரசு மேற்கொண்டுள்ள முயற்சியாகும். கிராமங்களில் உள்ள பெண்களின் சுயஉதவி குழுக்களுக்கும் அதிகாரம் அளிக்கப்படுகிறது என்று பிரதமர் கூறினார். "நாடு ஆரோக்கியமாக இருக்கும் போது, 'அனைவரின் முயற்சியும்' வளர்ச்சிக்காக அர்ப்பணிக்கப்படும் போது, வளர்ந்த இந்தியா என்ற இலக்கை விரைவாக அடைவோம்" என்றும் அவர் கூறினார்.

 

இறுதியில், பகவான் சாய்பாபா மற்றும் இந்நிறுவனத்துடனான தனது நீண்ட தொடர்பை பிரதமர் நினைவு கூர்ந்தார். அவர், “நான் இங்கு விருந்தாளி அல்ல, இதே பகுதியைச் சேர்ந்தவர். ஒவ்வொரு முறையும் நான் உங்கள் மத்தியில் வரும்போது இந்த பந்தம் புதுப்பிக்கப்பட்டு, வலுவான உறவுக்கான ஆசை இதயத்தில் துளிர்கிறது," என்று பிரதமர் தனது உரையை நிறைவு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, குழந்தைகள் இதய பராமரிப்புக்கான ஸ்ரீ சத்ய சாய் சஞ்சீவனி மையத்தின் தலைவர் டாக்டர் சி ஸ்ரீநிவாஸ், சத்குரு ஸ்ரீ மதுசூதன் சாய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னணி

 

சிக்கபல்லாப்பூர் பகுதியில் மாணவர்கள் புதிய வாய்ப்புகளைப் பெறுவதற்கும், குறைந்த செலவில் மக்கள் மருத்துவ சிகிச்சையைப் பெறுவதற்கான முயற்சியாக, ஸ்ரீ மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை (SMSIMSR) பிரதமர் திறந்து வைத்தார். இது சிக்கபல்லாபூர், முத்தேனஹள்ளியில் சத்ய சாய் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் பல்கலைக்கழகத்தால் நிறுவப்பட்டது. கிராமப்புறத்தில் மருத்துவக் கல்வி மற்றும் சுகாதாரத்தை வணிகமயமாதலில் இருந்து மீட்டெடுப்பதற்கான நோக்குடன் நிறுவப்பட்ட எஸ்எம்எஸ்ஐஎம்எஸ்ஆர் நிறுவனம் மருத்துவக் கல்வி மற்றும் தரமான மருத்துவ சேவையை முற்றிலும் இலவசமாக அனைவருக்கும் வழங்கும். 2023ஆம் கல்வியாண்டில் இந்த நிறுவனம் செயல்படத் தொடங்கும்.

***

AD/CR/DL



(Release ID: 1910726) Visitor Counter : 155