பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கொவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொது சுகாதார தயார் நிலை மற்றும் சூழ்நிலை குறித்த உயர்நிலை ஆய்வுக் கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார்

முன்னெச்சரிக்கையாகவும், விழிப்புடனும் இருக்க பிரதமர் அறிவுரை

ஆய்வக கண்காணிப்பை மேம்படுத்துதல், அனைத்து கடும் சுவாச நோய்கள் தொடர்பான பரிசோதனை மற்றும் இந்த தொற்றுக்கான மரபியல் கூறுகளை கண்டறிதலின் அவசியம் குறித்து வலியுறுத்தல்

தயார் நிலையை உறுதிசெய்வதற்கு மருத்துவமனைகளில் மீண்டும் மாதிரி ஒத்திகைகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்

சுவாசத்தூய்மை, கொவிட் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு பிரதமர் அறிவுரை

Posted On: 22 MAR 2023 7:17PM by PIB Chennai

நாடு முழுவதும் கொவிட்-19  மற்றும் இன்ஃப்ளூயன்சா   நோய் குறித்த சூழல்களை எதிர்கொள்வதற்கான தயார் நிலை குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் புதுதில்லியில் இன்று  உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கொவிட்-19 தொற்று பரவலை எதிர்கொள்வதற்கான சுகாதார உள்கட்டமைப்பு வசதிகள், தடுப்பூசி முகாம்கள், கொவிட்-19 அவசரகால நடவடிக்கைகள் மற்றும் இன்ஃப்ளூயன்சாவை எதிர்கொள்வதற்கான பொது சுகாதார நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.  கடந்த 2 வாரங்களில்  கொவிட்-19 தொற்று பாதிப்பு நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், இந்த உயர்மட்ட ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை செயலாளர், சர்வதேச அளவிலான கொவிட்-19 சூழ்நிலை குறித்தும், இந்தியாவில் தொற்று அதிகரிப்பு குறித்தும் உரையாற்றினார்.  இந்தியாவில் கொவிட்-19 தொற்று சற்று அதிகரிப்பது குறித்து பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டது. அதாவது, 2023, மார்ச் 22ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவில்  நாள்தோறும் சராசரியாக புதியதாக  கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 888- ஆக இருந்ததாகவும், வாரந்திர தொற்று பாதிப்பு  0.98 சதவீதமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே வாரத்தில் உலக நாடுகளில் நாள் தோறும் சராசரியாக  1.08 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி கடைசியாக நடைபெற்ற கொவிட்-19  தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பிரதமர் அளித்த அறிவுரைகளின்படி, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும்  விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும் முக்கியமான 20  கொவிட் தடுப்பு மருந்துகள், இதர 12 மருந்துகள், 8 தடுப்பு மருந்துகள், இன்ஃப்ளூயன்சா தடுப்பு மருந்துகள் ஆகியவற்றின்  கையிருப்பு மற்றும் அவற்றின் விலை விவரம் குறித்து கண்காணிப்பது பற்றியும் பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது. கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி 22 ஆயிரம் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட மாதிரி ஒத்திகை குறித்தும் மருத்துவமனைகள் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் விளக்கப்பட்டது.

கடந்த சில மாதங்களில் ஹெச்1என்1 மற்றும்  ஹெச்3என்2 காய்ச்சல் தொற்று பாதிப்புகள்  அதிகரித்துள்ள நிலையில், நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்சா சூழ்நிலையை எதிர்கொள்ள மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்துப் பிரதமர் பாராட்டுத் தெரிவித்தார்.

ஐஎன்எஸ்ஏசிஓஜி ஆய்வகங்களில் தொற்றுக்கான மரபியல் கூறுகளை கண்டறிதலின் அவசியம் குறித்து பிரதமர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதன் மூலம் உரிய நேரத்தில் புதிய நோய் உருமாற்றங்களை  கண்டறிய முடியும்.

மருத்துவமனை வளாகங்களில் நோயாளிகள், சுகாதார நிபுணர்கள், சுகாதார ஊழியர்கள் ஆகியோர் முக கவசங்களை அணிதல் உள்ளிட்ட கொவிட் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.  கூட்டம் உள்ள பகுதிகளுக்கு செல்லும் மூத்த குடிமக்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஐஆர்ஐ/எஸ்ஏஆர்ஐ பாதிப்புகளை திறம்பட கண்காணித்தல், இன்ஃப்ளூயன்சா, சார்ஸ்-சிஓவி-2, அடினோவைரஸ் ஆகியவற்றுக்கான பரிசோதனைகளை மாநிலங்களுடன் இணைந்து கண்காணிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். இன்ஃப்ளூயன்சா, கொவிட்19-க்கான போதிய மருந்துகள் மற்றும் விநியோகத்தை உறுதி செய்வதன் அவசியம் குறித்தும் போதுமான மருத்துவ படுக்கைகள், சுகாதார மனித வளங்கள் ஆகியவற்றை உறுதிசெய்தல் குறித்தும் பிரதமர் வலியுறுத்தினார்.

கொவிட் -19 தொற்றுநோய் இன்னும் முழுவதுமாக விலகவில்லை. எனவே நாடு முழுவதும் நிலவும் சூழ்நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக அவர் எடுத்துரைத்தார். பரிசோதனை, கண்காணித்தல், சிகிச்சை, தடுப்பூசி மற்றும் கொவிட்  வழிகாட்டு நெறிமுறை, ஆய்வக கண்காணிப்பு மற்றும் அனைத்து கடுமையான சுவாச நோய் (எஸ்ஏஆர்ஐ) ஆகிய 5-மடங்கு திட்டங்களில் தொடர்ந்து கவனம் செலுத்துமாறு பிரதமர் அறிவுறுத்தினார். நமது மருத்துவமனைகள் அனைத்துத் தேவைகளுக்கும் தயாராக இருப்பதை உறுதிசெய்ய, மாதிரி ஒத்திகைகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

சுவாசத்தின் தூய்மையை கடைப்பிடிக்கவும், கூட்டம் நிறைந்த பொது இடங்களில் கொவிட்  வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்கவும் பிரதமர் வலியுறுத்தினார்.

இக்கூட்டத்தில் பிரதமரின் முதன்மைச் செயலர் திரு பிகே மிஸ்ரா, நித்தி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி கே பால் அமைச்சரவை செயலாளர் திரு. ராஜீவ் கௌபா, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் திரு ராஜேஷ் பூஷண், பிரதமரின் ஆலோசகர் திரு  அமித் கரே உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

***

(Release ID: 1909665)

MS/ES/IR/RS/AG/KRS

 


(Release ID: 1909701) Visitor Counter : 224