பிரதமர் அலுவலகம்

இந்தியா-வங்கதேசம் நட்புறவு குழாய்ப்பாதை கூட்டு மெய்நிகர் தொடக்க விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் கருத்துகளின் முக்கிய அம்சங்கள்

Posted On: 18 MAR 2023 7:12PM by PIB Chennai

மாண்புமிகு பிரதமர் ஷேக் ஹசீனா அவர்களே, அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா அவர்களே,  எனது அமைச்சரவை தோழர்கள் திரு ஹர்தீப் பூரி, திரு ராமேஸ்வர் டெலி, வங்கதேச அரசின்  அமைச்சர்களே, அனைவருக்கும் வணக்கம்!

இந்தியா – வங்கதேச  உறவுகளின் வரலாற்றில் இன்று புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. இந்தியா- வங்கதேசம்  நட்புறவு குழாய்ப்பாதை திட்டத்தின் அடிக்கல் 2018 செப்டம்பரில் நம்மால் நாட்டப்பட்டது. மேலும் இன்று பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் இணைந்து அதைத் திறந்து வைக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

கோவிட் 19 பெருந்தொற்றுக்கு மத்தியிலும் இந்தத் திட்டத்தின் பணிகள் தொடர்ந்தது திருப்தியளிக்கும் விசயமாகும். இந்தக் குழாய் மூலம், வடக்கு வங்கதேசத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு 1 மில்லியன் மெட்ரிக் டன் அதிவேக டீசல் வழங்க முடியும். குழாய் மூலம் சப்ளை செய்வது செலவைக் குறைப்பது மட்டுமின்றி,  கார்பன் பாதிப்பையும்  குறைக்கும். நம்பகமான மற்றும் செலவு குறைந்த டீசல் சப்ளை விவசாயத் துறைக்கு குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும். உள்ளூர் தொழிற்சாலைகளும் இதன் மூலம் பயனடையும்.

இன்றைய உலகளாவிய சூழ்நிலையில் பல வளரும் பொருளாதாரங்கள் தங்கள் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த போராடி வருகின்றன. இந்நிலையில் இன்றைய நிகழ்வு முக்கியத்துவம் பெறுகிறது.

நண்பர்களே,

கடந்த சில ஆண்டுகளில், பிரதமர் ஷேக் ஹசீனாவின் திறமையான தலைமையின் கீழ், வங்கதேசம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது, மேலும் ஒவ்வொரு இந்தியரும் அதில் பெருமிதம் கொள்கிறார்கள். மேலும் வங்கதேசத்தின் வளர்ச்சிக்கான இந்தப் பயணத்தில் எங்களால் பங்களிக்க முடிந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தக் குழாய் வங்காளதேசத்தின் வளர்ச்சியை மேலும் விரைவுபடுத்தும், மேலும் இரு நாடுகளுக்கு இடையேயான தொடர்பை அதிகரிப்பதற்கு சிறந்த உதாரணமாகவும் இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நமது இணைப்பின் ஒவ்வொரு தூணையும் வலுப்படுத்துவது அவசியம். நமது இணைப்பு எந்த அளவுக்குப் பெருகுகிறதோ, அந்த அளவுக்கு நமது மக்களின்உறவுகள் வலுப்பெறும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் ஷேக் ஹசீனா, 1965-க்கு முந்தைய ரயில் இணைப்பை மீட்டெடுப்பதற்கான தனது தொலைநோக்குப் பார்வையைப் பற்றிப் பேசியது எனக்கு நினைவிருக்கிறது. அதன் பின்னர் இரு நாடுகளும் அந்தத் துறையில் அதிக முன்னேற்றம் அடைந்துள்ளன. அதன் விளைவாக, கோவிட் 19 தொற்றுநோயின் போது, அந்த ரயில் கட்டமைப்பு  மூலம் வங்கதேசத்துக்கு ஆக்ஸிஜனை அனுப்ப முடிந்தது. பிரதமர் ஷேக் ஹசீனாவின் இந்த தொலைநோக்கு பார்வையை நான் மனதார வாழ்த்த விரும்புகிறேன்.

நண்பர்களே, மின்சாரத் துறையில் எங்கள் பரஸ்பர ஒத்துழைப்பு மிகவும் வெற்றிகரமாக உள்ளது. இன்று இந்தியா வங்காளதேசத்திற்கு 1,100 மெகா வாட் மின்சாரத்தை வழங்குகிறது. எரிசக்தி ஒத்துழைப்பைப் பொறுத்தவரை, நமது பெட்ரோலிய வர்த்தகம் 1 பில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது. ஹைட்ரோகார்பன்களின் முழு மதிப்புச் சங்கிலியிலும் நமது ஒத்துழைப்பு உள்ளது என்பது பெருமைக்குரிய விசயம்.

இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து அதிகாரிகளுக்கும், குறிப்பாக நுமாலிகர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் வங்கதேச பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகியவற்றை நான் வாழ்த்த விரும்புகிறேன்.

மாண்புமிகு பிரதமர் அவர்களே, இந்தியா-வங்கதேசத்தின் ஒத்துழைப்பின் ஒவ்வொரு அம்சமும் உங்கள் வழிகாட்டுதலால் பயனடைந்துள்ளது. அதில் இந்தத் திட்டமும் ஒன்று. இந்த நிகழ்வில் என்னுடன் இணைந்ததற்கு மிக்க நன்றி. மேலும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் அனைத்து மக்களுக்கும் நல்வாழ்த்துக்கள்.

நன்றி!

பொறுப்புத்துறப்பு  - இது பிரதமர் கருத்துகளின் தோராயமான மொழிபெயர்ப்பு. அசல் கருத்து இந்தியில் வழங்கப்பட்டது.

                                                               ----- 

AD/PKV/KPG



(Release ID: 1908520) Visitor Counter : 141