தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

இந்தியாவின் ஜி 20 தலைமையின் கீழ் தொழிலாளர் 20-ன் தொடக்கக் கூட்டத்திற்காக 20 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், நிபுணர்கள் அமிர்தசரஸ் வந்து சேர்ந்தனர்

Posted On: 18 MAR 2023 5:48PM by PIB Chennai

உலகின்  வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் குழுவான ஜி 20-ன் முக்கிய செயல்பாட்டுக்  குழுவான தொழிலாளர்20 (எல்20)-ன் தொடக்க நிகழ்வுக்காக, இந்தியாவைச் சேர்ந்த தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் தொழிலாளர் வல்லுநர்கள் தவிர 20 நாடுகளைச் சேர்ந்த தொழிற்சங்கப் பிரதிநிதிகள், வல்லுநர்கள் மற்றும் தொழிலாளர் தலைவர்கள் பஞ்சாபின் அமிர்தசரஸ் வந்துள்ளனர்.

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை  அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், பஞ்சாப் முதலமைச்சர் திரு பகவந்த் மான் ஆகியோர் எல் 20-ன் தொடக்கக் கூட்டத்தில் பிரதிநிதிகளுடன் உரையாடுவார்கள். 2023-ல் ஜி 20-க்கு இந்தியா தலைமை தாங்குவது, முக்கியமான உலகளாவிய பிரச்சினைகளில் உலகத்துடன் ஒத்துழைப்பதற்கான ஒரு முக்கிய தருணமாகும்.

இந்தியாவின் மிகப்பெரிய தொழிலாளர் அமைப்பான பாரதிய மஸ்தூர் சங்கம் (பிஎம்எஸ்), லேபர்20 ஈடுபாட்டுக் குழுவை நடத்துகிறது.  பிஎம்எஸ் தேசியத் தலைவர் திரு ஹிரண்மய் பாண்டியா எல் 20 -ன் தலைவராக இருப்பார். நகரில் நடைபெறும் துவக்க விழாவிற்கு அவர் தலைமை தாங்குவார். இந்தியாவில் உள்ள பல முன்னணி தொழிற்சங்கங்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளன.

நாளை தொடங்கும் எல் 20 கூட்டத்தின் விவரங்களை இன்றைய செய்தியாளர் சந்திப்பின் போது, பிஎம்எஸ் தேசியத் தலைவர் திரு ஹிரண்மய் பாண்டியா எடுத்துரைத்தார். அனைவருக்குமான சமூகப் பாதுகாப்பு; முறைசாரா தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு; திறன் பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு: பணி வழங்குவோர், பணியாளர்கள் மற்றும் அரசுகளின் பங்கு மற்றும் பொறுப்புகள் உட்பட நிலையான வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான முக்கிய விஷயங்கள் பற்றி தொடக்கக் கூட்டத்தில் விவாதிக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்

தொழிலாளர் பிரச்சனைகள் குறித்து நன்கறிந்த நிபுணர்களான பேராசிரியர் சந்தோஷ் மெஹ்ரோத்ரா, டாக்டர் பிரவின் சின்ஹா, பேராசிரியர் ரவி ஸ்ரீவஸ்தவ், வழக்கறிஞர் சி.கே. சாஜி நாராயணன், தமிழ்நாட்டின்  டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்  பேராசிரியர் என். சந்தோஷ் குமார், பிலாஸ்பூர் பல்கலைகழகத் துணைவேந்தர் பேராசிரியர் ஏ.டி.என் வாஜ்பாய் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை செழுமைப்படுத்துவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட நட்பு நாடுகளைத் தவிர, பல்வேறு ஜி 20 நாடுகள் மற்றும் அமைப்புகளின் தொழிலாளர்துறை  வல்லுநர்கள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் மேற்குறிப்பிட்ட  விஷயங்கள் பற்றி விவாதிப்பார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1908371

-----

AD/SMB/KPG



(Release ID: 1908426) Visitor Counter : 123