விவசாயத்துறை அமைச்சகம்
உலகம் முழுவதும் சிறுதானிய உற்பத்தி மற்றும் நுகர்வை அதிகரிப்பதற்கான உத்திகளை வகுக்க, முன்னணி சிறுதானிய (ஸ்ரீ அன்னா) நாடுகளின் அமைச்சர்கள் அளவிலான வட்ட மேசை கருத்தரங்கு இந்தியாவில் ஏற்பாடு
Posted On:
18 MAR 2023 5:42PM by PIB Chennai
புது தில்லியில் இன்று நடைபெற்ற உலகளாவிய சிறுதானிய (ஸ்ரீ அன்னா) மாநாட்டின் தொடக்க விழாவிற்குப் பிறகு அமைச்சர்கள் அளவிலான வட்ட மேசை கருத்தரங்கு நடைபெற்றது. கயானா, மொரிஷியஸ், இலங்கை, சூடான், சுரினாம், ஜாம்பியாவைச் சேர்ந்த அமைச்சர்கள், காம்பியா,மாலத்தீவுகள், நைஜீரியா ஆகிய நாடுகளின் உயர் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகளை மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் வரவேற்றார்.
இந்தியாவின் முன்முயற்சியில், 2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. இதனையடுத்து, தில்லியில் 2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடும் வகையில், உலகளாவிய சிறுதானிய (ஸ்ரீ அன்னா) மாநாட்டுக்கு இந்தியா ஏற்பாடு செய்தது. மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், மத்திய அமைச்சர்கள் திரு பியூஷ் கோயல், திரு மன்சுக் மாண்டவியா , இணை அமைச்சர் திரு கைலாஷ் சவுத்ரி ஆகியோர் முன்னிலையில், பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்த உலகளாவிய நிகழ்வைத் தொடக்கி வைத்தார். வருகை தந்த பிற நாடுகளின் அமைச்சர்கள் தொடக்க விழாவில் கலந்து கொண்டு தங்கள் நாடுகளுக்கான செய்திகளை வழங்கினர். தொடக்க விழாவின் போது, ஒரு நினைவு முத்திரை மற்றும் நாணயத்தை பிரதமர் வெளியிட்டார். அவர் சிறுதானிய (ஸ்ரீ அன்னா) தரநிலைகள் குறித்த புத்தகத்தை டிஜிட்டல் முறையில் வெளியிட்டார்.
அமைச்சர்கள் வட்ட மேசை கூட்டத்தில் தனது தொடக்க உரையில், திரு நரேந்திர சிங் தோமர், உலகின் மிகப்பெரிய சிறுதானிய உற்பத்தியாளர் மற்றும் இரண்டாவது பெரிய ஏற்றுமதியாளராக, இந்தியாவின் பங்கை எடுத்துரைத்தார். கடந்த 5 ஆண்டுகளில், இந்தியா 13.71 முதல் 18.02 மில்லியன் டன்கள் வரை சிறுதானிய தினைகளை உற்பத்தி செய்து வருகிறது. 2018-19 முதல். 2022-23 வரை ரூ. 365.85 கோடி மதிப்புள்ள 1,04,146 மெட்ரிக் டன் சிறுதானியங்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது என்றார்.
உணவு, கலாச்சாரம் மற்றும் மரபுகள் போன்ற பழங்கால பழக்கவழக்கங்களின் மதிப்புகளை அங்கீகரிப்பதில் இந்தியா எப்போதும் முன்னோடியாக இருந்து வருகிறது என்று மத்திய விவசாய அமைச்சர் கூறினார். நம் கலாசாரத்தைப் போலவே, சிறுதானியங்களிலும் பலவகைகள் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், ஸ்ரீ அன்னா புரதம், நார்ச்சத்து மற்றும் இரும்பு, கால்சியம் போன்ற தாதுக்கள் மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது என்றார். பலர் இதை சூப்பர்ஃபுட் என்று கூட அழைக்கிறார்கள். தினைக்கு ஒன்றல்ல பல நன்மைகள் உண்டு. உடல் பருமனைக் குறைப்பதோடு, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தையும் குறைக்கின்றன. குறிப்பாக வளர்ந்த மற்றும் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளில் ஊட்டச்சத்து குறைபாடு இன்னும் மனித ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது. தினைகள் ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்த்துப் போராடுவதில் மிகவும் நன்மை பயக்கும், ஏனெனில் அவை ஆற்றல் மற்றும் புரதத்துடன் நிரம்பியுள்ளன என்று அவர் கூறினார். .
இன்று இந்தியாவில் தினைகளை ஊக்குவிக்க நிறைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உற்பத்தியில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்துவதுடன், எப்பிஓ-க்கள் எனப்படும் விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்புகள் ஊக்குவிக்கப்படுகின்றன, இதனால், ஒருங்கிணைப்பு, உற்பத்தி மற்றும் செயலாக்கம் அதிகரிக்க முடியும். அரசின் ஆதரவுடன் பல ஸ்டார்ட் அப்கள் சிறுதானியம் தொடர்பான உணவுத் தயாரிப்புகளில் ஈடுபடுவது குறித்து திரு தோமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
அனைத்து அமைச்சர்களும் கோதுமை பழக்கத்திலிருந்து மக்களை விடுவிப்பதற்காக உள்நாட்டு தினை பயிர்களை தங்கள் நாடுகளில் ஊக்குவிப்பதை ஆதரித்தனர். அனைத்து சர்வதேச கூட்டங்களிலும் தினைகளை முன்னுரிமைப் பயிர்களாக அறிவித்து நிகழ்ச்சி நிரலை அமைக்க வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைத்தனர். கயானா போன்ற பாரம்பரிய தினைகள் அல்லாத சில நாடுகள், சர்வதேச தினை ஆண்டு ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக தினை சாகுபடிக்கு மாறியுள்ளன. அனைத்து அறிவு, தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றை இந்த நாடுகளுக்கு வழங்க இந்தியா உறுதியளித்தது.
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். பல்வேறு சிறுதானிய உற்பத்தி செய்யும் நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் பிற முக்கியஸ்தர்களுக்கு இணைச் செயலாளர் நன்றி தெரிவித்தார்.,”
----
PKV/GS/KPG
(Release ID: 1908403)
Visitor Counter : 258