ஆயுஷ்
9-வது சர்வதேச யோகா தினத்தின் 100 நாள் கவுண்ட் டவுன், யோகாப் பெருவிழா 2023 உடன் தொடங்கியது
யோகா ஊக்குவிப்பு நடவடிக்கைகள், உலகளாவிய சுகாதார மற்றும் ஆரோக்கியத் துறையில் இந்தியாவை முன்னணி நாடாக நிலைநிறுத்தியுள்ளன: மத்திய அமைச்சர் திரு.சர்பானந்த சோனோவால்
Posted On:
13 MAR 2023 5:58PM by PIB Chennai
9-வது சர்வதேச யோகா தினத்திற்கான 100 நாள் கவுண்டவுன், யோகப் பெருவிழா 2023 என்ற நிகழ்ச்சியுடன் புதுதில்லியில் இன்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறவுள்ள இந்த யோகாப் பெருவிழா 2023 நிகழ்ச்சியை மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால் தொடங்கி வைத்தார். அதிகப் பணிச்சுமை உள்ளவர்களுக்காக “ஒய் பிரேக்” (Y – Break) என்ற செயலியில் ஒரு நிமிட வீடியோ ஒன்றையும் அமைச்சர் வெளியிட்டார். பணிச் சுமை உள்ளவர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் யோகாவை பின்பற்றுவது தொடர்பாக இந்த வீடியோ பதிவில் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு.சர்பானந்த சோனோவால், பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தொடர் நடவடிக்கைகளின் காரணமாக யோகா, ஆயுர்வேதம் மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகளில் இந்தியா முன்னணி இடத்தைப் பெற்றுள்ளது என்று கூறினார். யோகாவை ஊக்குவிப்பதன் மூலம் உலகளாவிய சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத் துறையில் இந்தியா முன்னணி இடத்தை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். பெருநிறுவனங்கள் தங்களது அலுவலகங்களில் யோகாப் பிரிவை ஏற்படுத்தி தங்களது ஊழியர்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சர்பானந்த சோனோவால் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் திரு. கிஷன் ரெட்டி, மக்களை இணைக்கும் ஒரு கலாச்சார தூதரைப் போல யோகாவை பிரதமர் திரு. நரேந்திர மோடி கருதுவதாகத் தெரிவித்தார். யோகா பிரபலமடைந்து வருவதை அடுத்து தனது அமைச்சகம் மருத்துவம் மற்றும் ஆரோக்கிய சுற்றுலாத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். இது யோகா மற்றும் ஆரோக்கிய நடைமுறைகளில் கவனம் செலுத்துவதாக திரு.கிஷன் ரெட்டி குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய ஆயுஷ் துறை இணை அமைச்சர் திரு. முஞ்ச்ப்பாரா மகேந்திர பாய், முந்தைய ஆண்டுகளில் ஒவ்வொரு யோகா தின நிகழ்ச்சிகளும் பெரிய வரவேற்பைப் பெற்றதாக கூறினார். இந்தாண்டும் மக்களை ஊக்குவிக்கும் வகையில் 100 நாள் கவுண்ட் டவுன் நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய கலாச்சாரத் துறை இணை அமைச்சர் திருமதி. மீனாட்சி லேகி, மன அழுத்தத்தைக் குறைத்து ஆரோக்கியமான மற்றும் நோய்களற்ற வாழ்க்கைக்கு யோகா மிகப் பெரிய பங்களிப்பை வழங்கும் என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மணிப்பூர் முதலமைச்சர் திரு. பைரன் சிங், ஆயுஷ் துறை செயலாளர் திரு. வைத்திய ராஜேஷ் கொட்டேச்சா, தடகள வீராங்கனை ஹிமாதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
யோகா தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள யோகப் பெருவிழா 2023 என்ற 3 நாள் நிகழ்ச்சி தில்லி தல்கதோரா உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதில் யோகா வல்லுநர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் பங்கேற்கும் ஆயுஷ் உச்சி மாநாடு, யோகா பயிற்சி நிகழ்ச்சிகள், விநாடி வினாப் போட்டிகள் உள்ளிட்டவை நடைபெறுகின்றன.
யோகா தினத்திற்கு இன்னும் 100 நாட்கள் உள்ள நிலையில் அனைவரும் அதனை உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும் என்றும் யோகாவை வாழ்வில் ஒரு அங்கமாக்கிக்கொள்ள வேண்டும் என்றும் முன்னதாக இன்று காலை பிரதமர் திரு. நரேந்திர மோடி வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
***
AP/PLM/SG/KPG
(Release ID: 1906570)
Visitor Counter : 193