சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பருவகால வைரஸ் காய்ச்சல் குறித்த தகவல்கள்


காய்ச்சல் தொடர்பாக ஒருங்கிணைந்த நோய்க் கட்டுப்பாட்டு திட்டத்தின் மூலம் மத்திய சுகாதார அமைச்சகம் அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்கின்றன

மார்ச் மாத இறுதியில் பருவகால வைரஸ் காய்ச்சல் பாதிப்புக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Posted On: 10 MAR 2023 4:21PM by PIB Chennai

பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பருவகால வைரஸ் காய்ச்சல் தொடர்பாக ஒருங்கிணைந்த நோய்க் கண்காணிப்புத் திட்டத்தின் மூலம் மத்திய சுகாதார அமைச்சகம் தீவிர கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளது. ஹெச்3என்2 வகை காய்ச்சல் தொடர்பாகவும், இணை நோய்கள், உயிரிழப்புகள் குறித்தும் சுகாதார அமைச்சகம் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. இணை நோய்களைக் கொண்ட சிறு குழந்தைகள் மற்றும் முதியோர் இந்த பருவகால வைரஸ் காய்ச்சலால் அதிகம் பாதிக்கபடக்கூடியவர்களாக உள்ளனர். ஹெச்3என்2 காய்ச்சலால் இதுவரை கர்நாடகா மற்றும் ஹரியானாவில் தலா ஒருவர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பாதிப்பால் ஏற்படும் இந்தக் காய்ச்சல் குறிப்பிட்ட மாதங்களில் உலகளவில் அதிகரிக்கிறது. இந்தியாவில் இரு பருவ காலங்களில் காய்ச்சல் பாதிப்பு உச்சத்தை எட்டுகிறது. மழைக் காலத்துக்குப் பின்பும் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலத்திலும் இந்தியாவில் காய்ச்சல் பாதிப்பு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் காணப்படுகிறது. இந்த பருவகால வைரஸ் காய்ச்சல் மார்ச் இறுதியிலிருந்து குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பொது சுகாதார சவாலை எதிர்கொள்ள கண்காணிப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

பொது சுகாதார நடவடிக்கைகள்:

நோயாளிகளை வகைப்படுத்துதல், சிகிச்சை முறைகள் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் வழங்கியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணையதளமான www.mohfw.nic.in மற்றும் தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் இணையதளமான www.ncdc.gov.in ஆகியவற்றிலும் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஒசெல்டாமிவிர் என்ற மருந்து இந்தக் காய்ச்சலுக்கு உலக சுகாதார அமைப்பால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து பொது சுகாதார மையங்களில் இலவசமாகக் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் காய்ச்சல் தொடர்பாக ஆலோசனைகளை மேற்கொள்ள அமைச்சகங்களுக்கிடையிலான கூட்டத்திற்கு 2023 மார்ச் 11 அன்று நித்தி ஆயோக் ஏற்பாடு செய்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் உள்ள காய்ச்சல் பரவும் தன்மை, மாநிலங்களுக்கு இது தொடர்பாக வழங்கப்பட வேண்டிய உதவிகள் உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும்.

                                                                                                                            ***

AP/PLM/SG/KPG


(Release ID: 1905709) Visitor Counter : 800