சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
சுகாதாரத் தொழில்நுட்ப மதிப்பீடு தொடர்பான சர்வதேச மாநாட்டை குடியரசுத் துணைத் தலைவர் திரு.ஜெக்தீப் தன்கர் தொடங்கி வைத்தார் – சுகாதாரத்துறை அமைச்சர் திரு. மன்சுக் மாண்டவியா பங்கேற்பு
Posted On:
10 MAR 2023 2:03PM by PIB Chennai
மக்களுக்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி திறம்பட்ட சேவைகளை வழங்குவதில் உலகத்திற்கு சிறந்த உதாரணமாக இந்தியா திகழ்கிறது என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு.ஜெக்தீப் தன்கர் கூறியுள்ளார். சுகாதார தொழில்நுட்ப மதிப்பீடு தொடர்பான இரண்டாவது சர்வதேச மாநாட்டை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு.மன்சுக் மாண்டவியா முன்னிலையில் இன்று குடியரசுத் துணைத் தலைவர் தொடங்கி வைத்தார்.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் சுகாதார ஆராய்ச்சித் துறையின் உலக சுகாதார அமைப்பும் இணைந்து இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தன. உலகளாவிய சிறந்த சுகாதார சேவைகளுக்காக உருவாக்கப்பட்ட சுகாதாரத் தொழில்நுட்ப மதிப்பீட்டின் மூலம் குறைந்த செலவில் சுகாதாரத் தொழில்நுட்பங்களை வழங்குவது தொடர்பான கருப்பொருளுடன் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் துணைத் தலைவர் திரு. ஜெக்தீப் தன்கர், சுகாதார கட்டமைப்புகளை இந்தியா வலுப்படுத்தி வருவதாக கூறினார். அனைவருக்கும் குறைந்த செலவில் தரமான மருத்துவ வசதிகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் புரட்சிகரமான நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது என்று அவர் தெரிவித்தார். நாட்டில் 9100க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் உள்ளதாக கூறிய அவர் இது போன்ற நடவடிக்கைகள் ஏழைகள் மற்றும் பின்தங்கிய மக்களின் சுமைகளைக் குறைக்கும் என்றார். உலகின் மிகப் பெரிய, வெளிப்படையான மற்றும் நம்பகமான திட்டமான ஆயூஷ்மான் பாரத், மக்களின் உடல்நலத்தைக் காப்பதுடன் வேலைவாய்ப்புகளையும் உருவாக்குவதாக அவர் தெரிவித்தார்.
கொவிட் பாதிப்பை இந்தியா வெற்றிகரமாக கையாண்டதுடன் பிறநாடுகளுக்கும் மருத்துவ உதவிகளை வழங்கியதாக அவர் கூறினார். உலகளாவிய சிறந்த சுகாதார சேவைகளை வழங்குவதில், சுகாதார தொழில்நுட்ப மதிப்பீட்டு உத்தி மற்றொரு புதுமையான அணுகுமுறை என்று குடியரசுத் துணைத் தலைவர் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பொதுமக்கள் நலனுக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் மீது மதிப்பீடு அவசியமானது என்று கூறினார். இதன் மூலம் ஆலோசனைகளைப் பெற்றுத் திட்டங்களையும் முன் முயற்சிகளையும் சிறப்பாக மேற்கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்தார். சுகாதாரத் தொழில்நுட்ப மதிப்பீடு தொடர்பான இஷ்டா – 2023 என்ற இந்த மாநாடு சுகாதாரத் துறையில் பன்னாட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்த உதவும் என்று அவர் கூறினார். இந்தச் சுகாதார தொழில்நுட்ப மதிப்பீடு, மருத்துவ சேவைகள் துறையில் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை எட்ட உதவும் என்றும் திரு. மன்சுக் மாண்டவியா கூறினார்.
நித்தி ஆயோக்கின் உறுப்பினர் திரு. விகே பால், 23 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், காம்பியா, மொராக்கோ உள்ளிட்ட நாடுகளின் தூதர்கள் பூட்டான், நேபாளம், இலங்கை உள்ளிட்ட நாடுகளின் உயர் அதிகாரிகள் உட்பட பல இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.
-----
AP/PLM/SG/KPG
(Release ID: 1905589)