குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் 6-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு

Posted On: 10 MAR 2023 1:38PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, புதுதில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் 6-வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், ஜவஹர்லால்  நேரு பல்கலைக்கழகத்தில் இந்தியா முழுவதிலுமிருந்து மாணவர்கள் படித்து வருவதாகக் கூறினார். இந்தப் பல்கலைக்கழகம் வேற்றுமைகளுக்கிடையே இந்தியாவின்  கலாச்சார ஒற்றுமையை உயிர்ப்புடன் பிரதிபலிக்கிறது.  பல்கலைக்கழகத்தில் பல வெளிநாடுகளில் இருந்தும் மாணவர்கள் படித்து வருகின்றனர். எனவே கற்றல் மையம் என்ற வகையில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஈர்ப்பு இந்தியாவுக்கு அப்பால் விரிந்துள்ளது என்று அவர் கூறினார்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் முற்போக்கான நடைமுறைகள் சமுதாய உணர்வுடன்  கூடிய வளமையான பங்களிப்புகள்  அனைவரையும் உள்ளடக்கிய  தன்மை, மகளிருக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றுக்கு பெயர்பெற்றது என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார்.

கல்வி, ஆராய்ச்சி, அரசியல், குடிமைப்பணி, அயலுறவு சேவை, சமூக சேவை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், ஊடகம், இலக்கியம், கலை மற்றும் கலாச்சாரம் போன்ற பல்வேறு துறைகளில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர்களும், ஆசிரியர்களும், செயல்திறன் மிக்க பங்களிப்பை வழங்கியுள்ளதாக குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பின் கீழ் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் கடந்த 2017-ம் ஆண்டு முதல் தொடர்ந்து இரண்டாம் இடத்தை தக்க வைத்து வருவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

 ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தொலைநோக்கு, நோக்கங்கள் ஆகியவை அதன் சட்ட திட்டத்துடன் ஒருங்கிணைந்தவை என்று குடியரசுத் தலைவர் கூறினார். தேசிய ஒருமைப்பாடு, சமூகநீதி, மதச்சார்பின்மை, ஜனநாயக முறையிலான வாழ்க்கை,  சர்வதேச புரிந்துணர்வு, சமுதாயத்தின் பிரச்சனைகளுக்கு அறிவியல் பூர்வமான அணுகுமுறை உள்ளிட்டவை அதன் அடிப்படை கொள்கைகளாகும்.  இந்த அடிப்படை லட்சியங்களை, பல்கலைக்கழக சமூகத்தினர்  தொடர்ந்து உறுதியாக பின்பற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஆளுமையை கட்டமைப்பதும் கல்வியின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என குடியரசுத் தலைவர் கூறினார்.  ஆளுமை பண்பு கட்டமைப்பதற்கான எண்ணற்ற வாய்ப்புகள் அந்த தருணத்துடன் விலகிச்செல்வதாக இருக்கக்கூடாது என அவர் வலியுறுத்தினார். 

இளம் மாணவர்களிடம் ஆர்வம், கேள்வி கேட்பது தர்க்கத்தைப் பயன்படுத்துவது போன்ற இயல்பான போக்கு காணப்படுவது வழக்கம் தான் என்று கூறியுள்ள அவர், இந்தப் போக்கு எப்போதும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இளைய தலைமுறையினரின் அறிவியல் சாராத  வழக்கமான கொள்கைகளுக்கு எதிர்ப்பும் ஊக்குவிக்கப்பட வேண்டும். யோசனைகளை ஏற்றுக்கொள்வதோ, அல்லது நிராகரிப்பதோ விவாதம் மற்றும் பேச்சுவார்த்தையின் அடிப்படையிலேயே இருக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் கூறினார்.

பல்கலைக்கழகத்தின் மாணவர்களும், ஆசிரியர்களும் உலகம் முழுவதும் உள்ள சமுதாயத்தை பற்றி சிந்திக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் வலியுறுத்தினார். பருவநிலை மாற்றம், மாசு, போர் மற்றும் அமைதியின்மை, பயங்கரவாதம், மகளிரின் பாதுகாப்பற்ற நிலை, சமத்துவமற்ற தன்மை போன்ற  பல விஷயங்கள் மனித குலத்தின் முன்னே சவால்களாக உருவெடுத்துள்ளன. பழைய காலத்தில் இருந்து இன்று வரை உலகின் முன்னணி பல்கலைக்கழகங்கள் தனிநபர் மற்றும் சமுதாயத்தின் பிரச்சனைகளுக்கு தீர்வுகளை கண்டுவந்துள்ளதுடன், சமுதாயத்தின் இலக்குகளை எட்டுவதற்கு பங்களித்துள்ளன.  இந்தப் பிரச்சனைகள் குறித்து எச்சரிக்கையுடனும், தீவிரத்துடனும் இருக்க வேண்டியது பல்கலைக்கழகங்களின் பொறுப்பாகும் என்று அவர் கூறினார்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகங்கள், நமது விடுதலைப் போராட்டத்தின் லட்சியங்களை நிலைநிறுத்துவதிலும், அரசியல் சாசனத்தின் மாண்புகளை பாதுகாப்பதிலும், நாட்டு நிர்மாணத்தின் இலக்குகளை எட்டுவதிலும் செயல்திறனுடன் பங்களிக்கும் என்று குடியரசுத் தலைவர் நம்பிக்கை தெரிவித்தார்.

***

AP/PKV/AG/KPG




(Release ID: 1905587) Visitor Counter : 139