பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் விரைவு சக்தி தேசியப் பெருந்திட்டத்துடன் சரக்குப் போக்குவரத்துத் திறனை மேம்படுத்துவது குறித்து இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

Posted On: 04 MAR 2023 5:16PM by PIB Chennai

வணக்கம்!

 அடிப்படைக் கட்டமைப்பு குறித்த இந்த இணையவழிக் கருத்தரங்கில் 700க்கும் அதிகமான மேலாண்மை இயக்குனர்கள், தலைமை நிர்வாக அதிகாரிகள் தங்களின் நேரத்தை ஒதுக்கி பங்கேற்றிருப்பதற்கும், இந்த முக்கியமான முன் முயற்சியை மாபெரும் நிகழ்வாக மாற்றுவதற்கும், மதிப்பைக் கூட்டுவதற்கும்   நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருப்பதற்கும் நான் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் பங்கேற்றிருப்பது இந்தக் கருத்தரங்கை மெருகூட்டி பயனுடையதாக மாற்றும் என நான் முழுமையான நம்பிக்கையைக் கொண்டிருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை   நன்றி தெரிவித்து உங்கள் அனைவரையும் நான் அன்புடன் வரவேற்கிறேன்.  2013 – 14-ல் அதாவது எனது ஆட்சிக்காலத்திற்கு முந்தைய ஆண்டுடன்  ஒப்பிடும் போது தற்போது மூலதனச் செலவினம்   5 மடங்கு அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் தேசிய அடிப்படைக் கட்டமைப்பு திட்டத்தில் ரூ.110 லட்சம் கோடி முதலீடு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது என்றும், இந்தச் சூழல் புதிய பொறுப்புகளையும், புதிய வாய்ப்புகளையும், துணிச்சலான முடிவுகளையும், பங்குதாரர்கள் மேற்கொள்வதற்கான தருணமாகும் என்றும் அவர்  கூறினார்.

நண்பர்களே,

எந்த ஒரு நாட்டின் வளர்ச்சியிலும், அதன் எதிர்காலத்தை மனதில் கொள்ளும் நீடித்த வளர்ச்சியிலும், அடிப்படைக் கட்டமைப்பு எப்போதும் முக்கியத்துவம் பெறுகிறது. அடிப்படைக் கட்டமைப்பு சார்ந்த வரலாற்றை ஆய்வு செய்பவர்கள் இதனை நன்கு உணர்வார்கள். சந்திரகுப்த மௌரியர் போன்றவர்கள் 2500 ஆண்டுகளுக்கு முன் உத்தரப்பாதையை அமைத்தனர். இந்தப் பாதை மத்திய ஆசியாவிற்கும், இந்தியத் துணைக்கண்டத்திற்கும் இடையே வணிகத்தை அதிகரிக்க பெரிதும் உதவியது. பின்னர், இந்தப் பாதையில் அசோக சக்ரவர்த்தியும், ஏராளமான மேம்பாட்டுப்பணிகளை செயல்படுத்தினார். 16-ம் நூற்றாண்டில்
ஷேர் ஷா சூரி, இந்தப்பாதையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, புதிய வழிமுறையில் மேம்பாட்டுப்பணிகளை நிறைவேற்றினார். பிரிட்டிஷார்  வந்த பிறகு அவர்கள் இந்தப் பாதையை மேலும் மேம்படுத்திய போது இது, ஜி டி சாலை என்றழைக்கப்பட்டது. இவ்வாறு, பல்லாயிரம் ஆண்டுகளாக நாட்டின் வளர்ச்சிக்கு நெடுஞ்சாலைகளை மேம்படுத்தும் கொள்கை உருவாக்கப்பட்டது. தற்போது மக்கள், ஆறுகள் மற்றும் நீர்வழிப்பாதைகள் பற்றி பேசத் தொடங்கியுள்ளனர். கொல்கத்தா, வாரணாசி ஆகியவற்றுடன் நேரடி நீர்வழிப் போக்குவரத்துத் தொடர்பு காரணமாக பல நூற்றாண்டுகளாக இவை வணிக மையங்களாக இருந்து வருகின்றன.

மற்றும் ஒரு சுவாரஸ்ய உதாரணமாக இருப்பது தமிழ்நாட்டில் உள்ள கல்லணை. இது சோழப் பேரரசு காலத்தில் கட்டப்பட்டது. 2000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த அணை, இப்போதும் செயல்பாட்டில் இருப்பதைக்கண்டு உலக மக்கள் வியப்படைகிறார்கள். இந்தியாவின் பாரம்பரியம் என்ன என்பதை நீங்கள் கற்பனை செய்துகொள்ளலாம்.

நண்பர்களே,

சாலைகள் போன்ற அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு இணையாக நாட்டின் சமூக கட்டமைப்பை வலுப்படுத்துவதும் அவசியமாகும். மிகவும் திறமையான இளைஞர்கள் நமது சமூக கட்டமைப்பை வலுப்படுத்துகிறார்கள். இவர்கள் பணியாற்ற முன்வர முடியும். எனவே திறன்மேம்பாடு, திட்ட மேம்பாடு, நிதி சார்ந்த திறன்கள், தொழில் சார்ந்த திறன்கள் போன்ற பல விஷயங்களுக்கு முன்னுரிமை அளிப்பது அவசியமாகும்.

உங்களின் சிந்தனையும், உங்களின் அனுபவங்களும் சிறந்தமுறையில் பட்ஜெட் அமலாக்கத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கும். இது வேகமான அமலாக்கத்திற்கும், சிறந்த விளைவுகளுக்கும் உதவியாக இருக்கும். இதனை நான் வலுவாக நம்புகிறேன். உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். 

நன்றி.

***

(Release ID: 1904199)

AP/SMB/AG/RR


(Release ID: 1904754) Visitor Counter : 138