பிரதமர் அலுவலகம்

பில் கேட்ஸை சந்தித்தார் பிரதமர்


சுகாதாரம், மேம்பாடு மற்றும் பருவநிலை ஆகியவற்றில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம் குறித்த பிரதமர் நரேந்திர மோடியுடனான எனது உரையாடல், முன்னெப்போதையும் விட அதிக நம்பிக்கையை எனக்கு ஏற்படுத்தியது: பில் கேட்ஸ்

கோ-வின் உலகிற்கு ஒரு முன்மாதிரி என்று பிரதமர் மோடி நம்புகிறார், நான் அதை ஒப்புக்கொள்கிறேன்: பில் கேட்ஸ்

புத்தாக்க நடவடிக்கைகளில் முதலீடு செய்தால் ஏற்படும் முன்னேற்றத்தை இந்தியா காட்டுகிறது: பில் கேட்ஸ்

Posted On: 04 MAR 2023 11:56AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, புது தில்லியில் திரு பில்கேட்ஸை வெள்ளிக்கிழமை சந்தித்தார்.

 திரு கேட்ஸ் தனது சமீபத்திய இந்தியப் பயணம் குறித்து பகிர்ந்து கொண்டுள்ள ட்விட்டருக்குப் பதிலளிக்கும் விதமாக, பிரதமர் கூறியிருப்பதாவது:

" பில் கேட்ஸை சந்தித்து  முக்கியப் பிரச்சனைகள் பற்றி விரிவான விவாதம் நடத்தியது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.  பூமியை ஒரு சிறந்த, நீடித்த கிரகமாக  உருவாக்குவது தொடர்பான அவரது உணர்வும்  ஆர்வமும் தெளிவாகத் தெரிகிறது’’.

 

 “இந்த வாரம் நான் இந்தியாவில் இருந்தேன், இங்கு சுகாதாரம், பருவநிலை மாற்றம், பிற முக்கியமான பகுதிகளில் நடக்கும் புதுமையான பணிகளைப் பற்றி அறிந்துகொண்டேன். உலகம் பல சவால்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், இந்தியா போன்ற ஆற்றல்மிக்க, ஆக்கப்பூர்வமான நாட்டைப் பார்ப்பது ஊக்கமளிக்கிறது’’ என்று திரு பில் கேட்ஸ் கூறியுள்ளார்.

பிரதமருடனான தனது சந்திப்பை அவரது பயணத்தின் சிறப்பம்சமாகக் கூறியுள்ள திரு கேட்ஸ், “பிரதமர் மோடியும் நானும் தொடர்பில் இருந்தோம், குறிப்பாக கோவிட்-19 தடுப்பூசிகளை உருவாக்குவது, இந்தியாவின் சுகாதார அமைப்புகளில் முதலீடு செய்வது குறித்து நாங்கள் உரையாடினோம். கேட்ஸ் அறக்கட்டளையால் ஆதரிக்கப்படும் பல பாதுகாப்பான, பயனுள்ள, மலிவு விலையில் தடுப்பூசிகளை தயாரிப்பதில் இந்தியா அற்புதமான திறனைக் கொண்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் தொற்றுநோய்களின் போது கோடிக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ளதுடன் உலகம் முழுவதும் உள்ள பிற நோய்களைத் தடுக்கின்றன’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தொற்றுநோயை இந்தியா கையாளும் முறை பற்றிக் குறிப்பிட்டுள்ள அவர், “புதிய உயிர்காக்கும் கருவிகளை தயாரிப்பதோடு, இந்தியாவும் அவற்றை வழங்குவதில் சிறந்து விளங்குகிறது - அதன் பொது சுகாதார அமைப்பு 2.2 பில்லியனுக்கும் அதிகமான கொவிட் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. அவர்கள் கோ-வின் எனப்படும் திறந்த இணைய தளத்தை உருவாக்கினர், இது கோடிக்கணக்கான தடுப்பூசிகளை செலுத்த  மக்களை அனுமதித்தது மற்றும் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு டிஜிட்டல் சான்றிதழ்களை வழங்கியது. இந்தியாவின் உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டத்தை ஆதரிக்க இந்தத் தளம் இப்போது விரிவுபடுத்தப்படுகிறது. கோ-வின் உலகிற்கு ஒரு முன்மாதிரி என்று பிரதமர் மோடி நம்புகிறார், நானும் அதை  ஒப்புக்கொள்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் இந்தியாவின் முன்னேற்றத்தை திரு பில் கேட்ஸ் பாராட்டியுள்ளார்.“தொற்றுநோய் பரவலின்  போது 200 மில்லியன் பெண்கள் உட்பட 300 மில்லியன் மக்களுக்கு அவசர டிஜிட்டல் கட்டணங்களை இந்தியாவால் மாற்ற முடிந்தது. ஆதார் எனப்படும் டிஜிட்டல் ஐடி மூலம்  புதுமையான தளங்களை உருவாக்கி, இந்தியா முன்னுரிமை அளித்துள்ளதால் மட்டுமே இது சாத்தியமானது. " என்று அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் விரைவு சக்தி பெருந்திட்டம்ஜி20 தலைமைப் பொறுப்பு , கல்வி, புதிய கண்டுபிடிப்பு, நோய்களை எதிர்த்து போராடுதல் போன்ற இந்தியாவின் சாதனைகள் குறித்தும் திரு கேட்ஸ் விளக்கியுள்ளார்.

 “பிரதமர் உடனான எனது உரையாடல், சுகாதாரம், மேம்பாடு மற்றும் பருவநிலை ஆகியவற்றில் இந்தியா அடைந்து வரும் முன்னேற்றம் குறித்து முன்னெப்போதையும் விட எனக்கு நம்பிக்கையை அளித்தது. நாம் புதிய கண்டுபிடிப்புகளில் முதலீடு செய்தால் என்ன சாத்தியம் என்பதை நாடு காட்டுகிறது. இந்தியா இந்த முன்னேற்றத்தைத் தொடருவதுடன் அதன் கண்டுபிடிப்புகளை உலகத்துடன் பகிர்ந்து கொள்ளும் என்று நம்புகிறேன்’’ என்று திரு கேட்ஸ் கூறியுள்ளார்.

***

AP/PKV/DL



(Release ID: 1904171) Visitor Counter : 161