பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
சத்ரபதி சம்பாஜிநகரில் 2 நாட்கள் நடைபெற்றமகளிர் 20-ன் முதல் கூட்டம் இன்று நிறைவடைந்தது
Posted On:
28 FEB 2023 2:24PM by PIB Chennai
சத்ரபதி சம்பாஜிநகரில் 2 நாட்கள் நடைபெற்ற மகளிர்-20-ன் முதல் கூட்டம் இன்று நிறைவடைந்தது. இதில் ஜி-20 உறுப்புநாடுகள் மற்றும் விருந்தினர் நாடுகளிலிருந்து 150-க்கும் மேற்பட்ட மகளிர் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

2-வது நாளான இன்று தடைகளை உடைத்தல்- மரபுகளுக்கு அப்பாற்பட்ட பெண்களின் கதைகள் என்ற கருப்பொருளில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் சோனல் மன்சிங், இதில் பங்கேற்று உரையாற்றினார்.
இந்திய கடற்படையில், பெண்களின் பங்களிப்புக் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. கடற்படையைச் சேர்ந்த ஷாசியா கான். திஷா அம்ரித், தவிசி சிங் உள்ளிட்டோர் இதில் பங்கேற்று விளக்கம் அளித்தனர்.

முன்னதாக நேற்று (பிப்ரவரி 27-ம் தேதி திங்கட்கிழமை) நடைபெற்ற தொடக்கவிழா நிகழ்ச்சியில் பேசிய மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிர்தி இரானி, உலகம் முழுவதும் மகளிருக்கு மேலும் அதிகாரம் அளிப்பது குறித்து உறுப்பு நாடுகள் செயல்திட்டங்களை வகுத்து செயலாற்ற வேண்டும் என்று கூறினார். இந்தியாவில், மகளிருக்கு அதிகாரம் அளிக்கும் நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் தெரிவித்தார். இந்தியாவில் 230 மில்லியன் மகளிர் பிரதமரின் முத்ரா கடன் திட்டத்தில் பயனடைந்துள்ளதாக அவர் கூறினார். 100 மில்லியனுக்கும் மேற்பட்ட பெண்கள், வேளாண் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். புதிய தேசிய கல்விக் கொள்கையில் பெண் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஜி-20-ன் ஷெர்பா திரு அமிதாப்காந்த், நிதித்துறை இணை அமைச்சர் திரு பகவத் காரத், ரயில்வே இணை அமைச்சர் திரு ராவ் சாஹேப் தன்வே பாட்டீல் உள்ளிட்டோரும் துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

முதல் நாளில், நானோ குறு மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் மகளிருக்கு அதிகாரம் அளித்தல், பருவநிலை மாற்றத்தைத் தடுக்கும் செயல்பாட்டில் பெண்களின் பங்கு, கல்வி மற்றும் திறன் பயிற்சிகள் மூலம் பெண்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தல் உள்ளிட்ட அமர்வுகளில் விவாதங்கள் நடைபெற்றன.

மகளிர்-20 கூட்டத்தின் விவாதங்கள் மற்றும் ஆலோசனைகள் ஜி-20 தலைவர்கள் மாநாட்டில் தாக்கம் செலுத்தும் என்பதுடன் மகளிர் மேம்பாடு மற்றும் பாலின சமத்துவத்துக்கான முயற்சகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.


***
AP/PLM/KPG/KRS
(Release ID: 1903157)