பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பெங்களூருவில் ஏரோ இந்தியா 2023-ஐ தொடங்கி வைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி, நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டார்


பாதுகாப்புத் தளவாட உற்பத்தி மையமாக மாறவிருக்கும் இந்தியாவின் பயணத்தின் ஒரு பகுதியாக இருக்குமாறு ஏரோ இந்தியா பங்கேற்பாளர்களுக்கு திரு ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்தார்

Posted On: 13 FEB 2023 12:11PM by PIB Chennai

பெங்களூருவின் யெல கங்காவில் உள்ள விமானப்படை தளத்தில் ஆசியாவின் மிகப்பெரிய வான்வெளி கண்காட்சியான  ஏரோ இந்தியா 2023-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி 2023, பிப்ரவரி 13 அன்று தொடங்கிவைத்தார்.  இந்த நிகழ்வில், நினைவு அஞ்சல் தலை ஒன்றையும் பிரதமர் வெளியிட்டார்.

 இந்த நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், உலகின் அரசியல் மற்றும் பொருளாதார வரைப்படத்தில் இந்தியாவை இடம்பெறச் செய்து வழிகாட்டி வரும் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு பாராட்டு தெரிவித்தார். நாட்டின் தொழில் துறை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான தெளிவான அவரின் உறுதிப்பாடு பற்றியும் பாதுகாப்புத்துறை அமைச்சர் எடுத்துரைத்தார்.

 வணிகத்திற்கு உகந்த சூழ்நிலையையும், விலையில் போட்டித் தன்மையையும் கொண்டிருப்பதன் காரணமாக பொருள் உற்பத்தித் துறையில் மிக முக்கியமானதாக இந்தியா மாறி வருகிறது என்று அவர் கூறினார்.  நமது பிரதமரின் தொலைநோக்குப் பார்வை மற்றும் உறுதி காரணமாக உலகில் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறியுள்ளது. அடுத்த 4-5 ஆண்டுகளுக்குள் 3-வது பெரிய பொருளாதாரமான மாறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.  சர்வதேச தளங்களில் இந்தியாவின் வளர்ந்து வரும் சக்தி அதன் ஜி20 தலைமைத்துவத்திலும் பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார்.

 ஏரோ இந்தியாவின் 14-வது நிகழ்வில் பல்வேறு நாடுகளிலிருந்து பங்கேற்றிருக்கும் பாதுகாப்பு அமைச்சர்கள், முப்படைகளின் தளபதிகள், தலைமை நிர்வாக அதிகாரிகள், அலுவலர்கள், பிரதிநிதிகள் ஆகியோரை திரு ராஜ்நாத் சிங் வரவேற்றார். இந்த 5 நாள் நிகழ்வில் இந்தியாவிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் 800-க்கும் அதிகமான காட்சியாளர்கள் தங்களின் பொருட்களையும், தொழில்நுட்பங்களையும் காட்சிப்படுத்துவதை அவர் பாராட்டினார். இந்தியாவின் வளர்ந்து வரும் வணிக ஆற்றலில் உள்நாட்டு மற்றும் உலகளாவிய வணிக சமூகத்திற்கு புதிய நம்பிக்கைக்கு சான்றாக இந்த மகத்தான பங்களிப்பு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

 பிரமாண்டமான வகையில், இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ள கர்நாடக முதலமைச்சர் திரு பசவராஜ் பொம்மையை பாதுகாப்பு அமைச்சர் பாராட்டினார்.  தொழில் மயமாதலில்  கர்நாடகா முன்னணியில் இருப்பதாக குறிப்பிட்ட அவர், இந்தியாவின்  பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யும் மிக முக்கியமான மாநிலங்களில் ஒன்றாகவும் கர்நாடாக இருப்பதாக கூறினார்.

 கர்நாடக ஆளுநர் திரு தாவர் சந்த் கெலாட், முதலமைச்சர் திரு பசவராஜ் பொம்மை, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு அஜய்பட் உள்ளிடோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1898656

***

AP/SMB/RS/GK


(Release ID: 1898811) Visitor Counter : 174