பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆசியாவின் மிகப்பெரிய விமானக் காட்சி நிகழ்வான ஏரோ இந்தியா 2023-ஐ பிப்ரவரி 13-ம் தேதி பெங்களூரில் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்


புதிய இந்தியாவின் வளர்ச்சி மற்றும் உற்பத்தித் திறனை ஏரோ இந்தியா 2023 வெளிப்படுத்தும் : பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங்

Posted On: 12 FEB 2023 6:28PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி ஆசியாவின் மிகப்பெரிய விமானங்கள் மற்றும் விமான பாகங்கள் காட்சியின் 14வது பதிப்பான –– ஏரோ இந்தியா 2023-ஐ பிப்ரவரி 13 அன்று கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் தொடங்கி வைக்கிறார். '100 கோடி வாய்ப்புகளுக்கான ஓடுபாதை' என்ற கருப்பொருளில் ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வு விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைத் திறன்களில் இந்தியாவின் வளர்ச்சியை வெளிப்படுத்தும். பாதுகாப்பான மற்றும் வளமான எதிர்காலத்திற்கு இந்தியாவில் உற்பத்தி செய்வோம், உலகுக்காக உற்பத்தி செய்வோம் (‘மேக் இன் இந்தியா, மேக் ஃபார் தி வேர்ல்ட்) என்ற நோக்கத்திற்கு ஏற்ப, உள்நாட்டு உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டு செயல்பாடுகளை உருவாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும்.

இது தொடர்பாக இன்று (பிப்ரவரி 12, 2023) பெங்களூரில் அறிமுக நிகழ்ச்சியாக செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய பாதுகப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், ஏரோ இந்தியா 2023, தற்சார்பு இந்தியா திட்டத்தை செயல்படுத்துவதில் அடைந்துள்ள முன்னேற்றத்தை வெளிப்படுத்தும் என்று கூறினார். இந்த நிகழ்வு விண்வெளி மற்றும் விமானத் துறையின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

மிகப் பெரிய ஏரோ இந்தியா:

 

பிப்ரவரி 13 முதல் 15 வரை வணிகம் தொடர்பான நாட்களாக இருக்கும். 16 மற்றும் 17 ஆம் தேதிகள் மக்கள் பங்கேற்புகளைக் கொண்டதாக பொது மக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்படும். இந்த 5 நாள் நிகழ்வுகளின்போது பாதுகாப்பு அமைச்சர்களின் மாநாடும் நடைபெறும்.  ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான நிகழ்ச்சி, பெரிய கண்காட்சி, இந்திய அரங்கம் மற்றும் விண்வெளி நிறுவனங்களின் வர்த்தக கண்காட்சி ஆகியவையும் நடைபெறும்.

 

யெலஹங்காவின் விமானப்படை நிலையத்தில் மொத்தம் 35,000 சதுர மீட்டர் பரப்பளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில் இதுவரை இல்லாத அளவில் 98 நாடுகள் பங்கேற்க உள்ளன. 32 நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள், 29 நாடுகளின் விமானப் படைத் தளபதிகள் மற்றும் உலகளாவிய மற்றும் இந்திய அசல் சாதன உற்பத்தி நிறுவனங்களின் (OEM) 73 தலைமைச் செயல் அதிகாரிகள் இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

முக்கிய கண்காட்சியாளர்கள் மற்றும் நிறுவனங்கள்:

ஏர்பஸ், போயிங், டசால்ட் ஏவியேஷன், லாக்ஹீட் மார்ட்டின், இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரி, பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ், ஆர்மி ஏவியேஷன், எச்.சி. ரோபோடிக்ஸ், சாப், சஃப்ரான், ரோல்ஸ் ராய்ஸ், லார்சன் அண்ட் டூப்ரோ, பாரத் ஃபோர்ஜ் லிமிடெட், ஹிந்துஸ்தான் ஏரோனா, ஹிந்துஸ்தான் ஏரோபாட்டிக்ஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL), பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL)  உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்கள் கண்காட்சிகளில் பங்கேற்கும். இந்த கண்காட்சி நிகழ்வில் சுமார் ஐந்து லட்சம் பார்வையாளர்கள் கலந்துகொண்டு பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல லட்சம் மக்கள் தொலைக்காட்சி மற்றும் இணையம் மூலம் இதைப் பார்வையிடுவார்கள்.

 

பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாடு:

பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு பிப்ரவரி 14 அன்று நடைபெறும். ‘பாதுகாப்பில் மேம்படுத்தப்பட்ட ஈடுபாடுகள் மூலம் பகிரப்பட்ட வளம்’ என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த மாநாட்டில் நட்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர்.

 

இருதரப்பு சந்திப்புகள்:

ஏரோ இந்தியா 2023-ஐ ஒட்டி, பாதுகாப்பு அமைச்சர், இணை அமைச்சர், முப்படைகளின் தளபதி, மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரது நிலைகளில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளுடன் இருதரப்பு சந்திப்புகள் நடைபெறும். இதன்மூலம் நட்பு நாடுகளுடன் பாதுகாப்பு மற்றும் விண்வெளி உறவுகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும்.

 

பந்தன் விழா:

பந்தன் விழா என்ற பெயரில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், தொழில்நுட்பங்களின் பரிமாற்றம், மற்றும் பிற முக்கிய ஒத்துழைப்புகளில் கையெழுத்திடுதல் நிகழ்ச்சிகள் பிப்ரவரி 15-ம் தேதி நடைபெறும்.

 

 

மந்தன்:

பாதுகாப்புத் துறையில் புதுமைக் கண்டுபிடிப்பு வருடாந்திரக் கண்காட்சி நிகழ்வான மந்தன், பிப்ரவரி 15 அன்று நடைபெறும்.

 

இந்திய அரங்கம்:

நிலையான சிறகுத் தளம் (ஃபிக்ஸட் விங் பிளாட்ஃபார்ம்) என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட இந்திய அரங்கம் இந்தத் துறையில் இந்தியாவின் வளர்ச்சியைக் எடுத்துக் காட்டும். மொத்தம் 115 நிறுவனங்கள், 227 தயாரிப்புகளைக் கொண்டதாக இது இருக்கும்.

 

கருத்தரங்குகள்:

ஐந்து நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பல கருத்தரங்குகள் நடத்தப்படும். 'இந்திய பாதுகாப்புத் தொழிலுக்கு முன்னாள் ராணுவ வீரர்களின் திறன்களைப் பயன்படுத்துதல், இந்தியாவின் பாதுகாப்பு விண்வெளி முன்முயற்சி, இந்திய தனியார் விண்வெளி சூழலை வடிவமைப்பதற்கான வாய்ப்புகள், விமான இன்ஜின்கள் உட்பட எதிர்கால விண்வெளி தொழில்நுட்பங்களில் உள்நாட்டு வளர்ச்சி என பல தலைப்புகளில் கருத்தரங்கங்கள் நடைபெறும்.

 

கர்நாடக அரங்கம் - வாய்ப்புகள் மற்றும் சாத்தியங்கள்:

ஏரோ இந்தியா 2023-ல் ஒரு தனி கர்நாடக அரங்கம் இருக்கும். இது பங்கேற்பாளர்களுக்கு, மாநிலத்தில் உள்ள வாய்ப்புகளை எடுத்துரைக்கும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் முன்னணி மாநிலமாக கர்நாடகா உள்ளது என பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சிகளுக்கு விரிவான முக்கியத்துவத்தை வழங்கி நிகழ்வுகளை மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என ஊடகங்களை திரு ராஜ் நாத் சிங் கேட்டுக் கொண்டார்.

இன்றைய செய்தியாளர் சந்திப்பின்போது கர்நாடக முதலமைச்சர் திரு பசவராஜ் பொம்மை, பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் திரு அஜய் பட், பாதுகாப்புத் துறைச் செயலாளர் திரு கிரிதர் அரமனே, கர்நாடக அரசின் தலைமைச் செயலாளர் திருமதி. வந்திதா சர்மா மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

***

AP / PLM / DL


(Release ID: 1898569) Visitor Counter : 688