பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
மகளிர் மற்றும் குழந்தைநல அமைச்சகத்தின் ஜி-20 அதிகாரமளித்தல் குழுவின் முதலாவது கூட்டம் ஆக்ராவில் நாளை தொடங்குகிறது
Posted On:
10 FEB 2023 11:51AM by PIB Chennai
பெண்களின் பொருளாதார பிரதிநிதித்துவத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான ஜி20 கூட்டணி (எம்பவர்) என்பது தனியார் துறையில் பெண்களின் தலைமை மற்றும் வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கத்தோடு இயங்கும் ஜி20 வர்த்தக தலைவர்கள் மற்றும் அரசுகளின் கூட்டணி ஆகும். இந்தக் கூட்டணியின் முதல் கூட்டம், உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் பிப்ரவரி 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
ஜி20 எம்பவர் கூட்டணியின் முதன்மை அமைச்சகமாக மத்திய மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகம் செயல்படுகிறது. ஜி20 இந்திய தலைமைத்துவத்தின் போது அப்பல்லோ மருத்துவமனை நிறுவனத்தின் இணை மேலாண் இயக்குநர் டாக்டர் சங்கீதா ரெட்டி இந்த கூட்டணிக்குத் தலைமை வகிப்பார். பிப்ரவரி, ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் முறையே ஆக்ரா, திருவனந்தபுரம் மற்றும் போபாலில் மூன்று கூட்டங்கள் நடத்தப்படும். இந்தக் கூட்டங்களில் ஆலோசிக்கப்படும் முக்கிய விஷயங்கள், ஜி20 தலைவர்களின் பரிந்துரைகளுக்கு அனுப்பிவைக்கப்படும்.
மத்திய மகளிர் மற்றும் குழந்தை மேம்பாடு, சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி சுபின் இரானி தொடக்கக் கூட்டத்தில் கலந்து கொண்டு, பெண்களால் வழிநடத்தப்படும் வளர்ச்சி குறித்த தமது கருத்துக்களை முன்வைப்பார். மத்திய மகளிர் மற்றும் குழந்தை மேம்பாடு, ஆயுஷ் துறை இணையமைச்சர் டாக்டர் முஞ்சபாரா மகேந்திரபாய், பெண்களின் வளர்ச்சிக்காக இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்முயற்சிகள் குறித்து சிறப்பு விருந்தினர்களிடையே எடுத்துரைப்பார்.
ஜி20 இந்திய தலைமைத்துவத்தின் பிரதிநிதி திரு அமிதாப் காந்த், மத்திய மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சக செயலாளர் திரு இந்தேவர் பாண்டே, ஜி20 நாடுகள், விருந்தினர் நாடுகள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த பெண் தலைவர்கள் மற்றும் பலர் முதல் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள். “பல்வேறு துறைகளை வழி நடத்துவதற்கு பெண்களுக்கு அதிகாரமளித்தல்: டிஜிட்டல் திறன் வளர்ப்பு மற்றும் எதிர்கால திறன்களின் பங்களிப்பு” என்பது இதன் கருப்பொருளாகும். பெண்களால் வழிநடத்தப்படும் குறு நிறுவனங்கள், பெண் கைவினைக் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட பொருட்களின் கண்காட்சியும் நடைபெறும்.
***
SMB/RB/RJ/KPG
(Release ID: 1897914)
Visitor Counter : 425