குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

காதியுடன் தொடர்புடைய தொழிலாளர்களின் வருமானத்தை அதிகரிக்க காதி கிராமத் தொழில் ஆணையம் முடிவு

Posted On: 09 FEB 2023 2:02PM by PIB Chennai

கடந்த மாதம் 30-ம் தேதி குஜராத் மாநிலம் கட்ச்சில் நடைபெற்ற காதி கிராமத் தொழில் ஆணையத்தின் (கேவிஐசி) 694-வது கூட்டத்தில் பிரதமர் விடுத்த அழைப்பை கருத்தில் கொண்டு, தொழிலாளர்களின் சம்பளத்தை நூல் சுருளுக்கு ரூ.7.50-லிருந்து ரூ.10-ஆக உயர்த்த, திரு மனோஜ் குமாரின் தலைமையில் இயங்கும் கேவிஐசி முடிவு செய்துள்ளது.  இதன்மூலம் கைவினைஞர்களின்  மாதாந்திர வருமானம் 33 சதவீதமும், நெசவாளர்களின் வருமானம் 10 சதவீதமும் உயரும்.  இந்த முடிவு ஏப்ரல் ஒன்றாம் தேதிமுதல் செயல்பாட்டுக்கு வருகிறது.

உள்நாட்டு பொருட்களை ஊக்குவிக்க வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.  தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் கேவிஐசி உற்பத்தி பொருட்களை வாங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். கைவினைஞர்களின் வருமானத்தை பெருக்கவும், ஏழைகளுக்கு வேலை வழங்கவுமான நோக்கத்துடன் அவர் இந்த வேண்டுகோளை விடுத்திருக்கிறார்.

பிரதமர் தமது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியிலும் பலமுறை காதி பொருட்களை வாங்குமாறு மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு பலமுறை வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் பயனாக காதி பொருட்கள் விற்பனை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. காதி, பொருட்கள் உற்பத்தி, விற்பனை ஆகியவற்றில் மாற்றம் விளைவிக்கும் முறைகளை கேவிஐசி பின்பற்றி வருகிறது.

2021-22 ஆம் நிதியாண்டில் கேவிஐசி பொருட்கள் உற்பத்தி 84,290 கோடியாகவும், விற்பனை 1,15,415 கோடியாகவும் இருந்ததாக கேவிஐசி தலைவர் திரு மனோஜ் குமார் தெரிவித்துள்ளார்.  அக்டோபர் 2-ம் தேதி காதி விற்பனையில் புதிய சாதனையைப் படைத்துள்ளது.  அன்று ஒருநாள் மட்டும் ரூ.1.34 கோடி அளவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.  இதன் பெருமை பிரதமரையே சாரும் என அவர் கூறியுள்ளார்.

கடந்த 9 ஆண்டுகளில் காதி மீதான ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது. காதியை உலகளவிலான உள்நாட்டுப் பொருள் என்ற வகையில் மாற்ற பிரதமர் திரு நரேந்திர மோடி அறைகூவல் விடுத்தார். இதன் பயனாக காதி உள்ளிட்ட இந்தியாவின் உள்நாட்டுப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனையில் பெரும் ஊக்குவிப்பு இருக்கும் என்றும், இதன்மூலம் காதி பிரிவில் அதிக வேலைவாய்ப்பை உருவாக்க முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  694-வது கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, கேவிஐசியுடன் தொடர்புடைய தொழிலாளர்களின் கையில் அதிக பணத்தை வழங்கி அவர்களது பொருளாதார நிலையை முன்னேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.  இந்த வரலாற்று சிறப்புமிக்க முடிவு, வலுவான, முன்னேற்றமான, தன்னிறைவு கொண்ட இந்தியாவை கட்டமைக்க உதவும். 

                                                                                                                                        ***

PKV/UM/KPG


(Release ID: 1897654) Visitor Counter : 401