பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இந்தியா எரிசக்தி வாரம் 2023-ல் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

Posted On: 06 FEB 2023 3:17PM by PIB Chennai

கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அவர்களே, எனது அமைச்சரவை தோழர்கள் ஹர்தீப் சிங் பூரி அவர்களே, ராமேஸ்வர் தெலி அவர்களே, மற்ற அமைச்சர்களே, தாய்மார்களே, பெரியோர்களே வணக்கம்.

துருக்கியிலும் அண்டை நாடுகளிலும் ஏற்பட்டுள்ள பேரழிவுகள் மற்றும் உயிரிழப்புக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். சாத்தியமான உதவிகளை வழங்குவதற்கு இந்தியா தயார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே, தொழில்நுட்பம், திறமை, புதிய கண்டுபிடிப்பு ஆகியவற்றால் நிறைந்துள்ள நகரம் பெங்களூரு. இங்குள்ள அனைவரும் அந்த ஆற்றலை அனுபவமாக கொண்டிருக்கிறார்கள். ஜி-20 செயல்திட்டத்தின் கீழ் இந்தியா எரிசக்தி வாரம் என்பது குறிப்பிடத்தக்க முதலாவது எரிசக்தி நிகழ்வாகும். இந்த நிகழ்வில் பங்கேற்ற அனைவரையும் வரவேற்கிறேன்.

21ம் நூற்றாண்டின் உலக எதிர்கால திசையை அமைப்பதில் எரிசக்தி துறையில் மிகப்பெரிய பங்களிப்பு முக்கியமானது.  எரிசக்தி பரிமாற்றத்திற்கும், புதிய எரிசக்தி வளங்களை உருவாக்குவதற்கும் உலகில் வலுவாக குரலெழுப்பும் நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. இந்தியாவில் எரிசக்தி துறையின் வளர்ச்சி முன் எப்போதும் இல்லாத வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது. இது மேம்படுத்தப்பட்ட இந்தியா தீர்மானத்தை நிறைவேற்றுகிறது

நண்பர்களே, வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதாரத்தில் ஒன்றாக இந்தியா இருப்பதை அண்மையில் வெளியிடப்பட்ட ஐஎம்எஃப் அறிக்கை தெரிவித்துள்ளது. பெருந்தொற்று மற்றும் போரால் பாதிக்கப்பட்டுள்ள உலகில் உலகளாவிய பிரகாச இடமாக இந்தியா தொடர்கிறது. வெளிநாட்டு சக்திகளின் தடைகளை மீறி தேசத்தை சக்திமிக்கதாக மாற்றுகின்ற உள்நாட்டு உறுதிப்பாடு பாராட்டுதலுக்குரியது. இதில் முதலாவதாக இருப்பது, நிலையான உறுதிமிக்க அரசாகும். இரண்டாவது, நீடித்த சீர்திருத்தங்கள் மூன்றாவது, அடித்தள நிலையில் சமூக பொருளாதார அதிகாரமளித்தல். வங்கிக் கணக்குகள் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய நிதிமுறை, கட்டணமில்லாத சுகாதார வசதிகள், கோடிக்கணக்கான மக்களை சென்றடையும் வகையில் பாதுகாப்பான துப்புரவு முறை, மின்சாரம், வீட்டு வசதி, குழாய் மூலம் குடிநீர் உள்ளிட்ட சமூக அடிப்படையில் கட்டமைப்பு திட்டங்கள் ஆகியவையும் இதில் அடங்கும். இதனால் பல பெரிய நாடுகளில் மக்கள் தொகையை விட அதிகமான மக்களைக் கொண்ட இந்திய மக்களின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

6 லட்சம் கிலோமீட்டர் தொலைவுக்கு கண்ணாடி இழை கேபிள் பதிக்கப்பட்டதால் ஒவ்வொரு கிராமமும் இணைய வசதியை பெற்றுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் அகண்ட அலைவரிசையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 13 மடங்கும், இணையதள இணைப்புகளை பெற்றிருப்போர், எண்ணிக்கை 3 மடங்கும், அதிகரித்துள்ளது  உலகில் செல்பேசி உற்பத்தியில் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. உலகில் முன்னேற விரும்பும் வகுப்பினரில் அதிக எண்ணிக்கையை அது கொண்டுள்ளது.

நண்பர்களே, உலகளாவிய எண்ணெயின் தேவையில் இந்தியாவின் பங்கு 5 சதவீதத்தில் இருந்து 11 சதவீதமாகவும் எரிவாயுவின் தேவை 500 சதவீதம் அளவுக்கும், உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய எரிசக்தி துறையின் விரிவாக்கத்தால் முதலீடு மற்றும் ஒத்துழைப்பில் புதிய வாய்ப்புகள் உருவாகும்.

எரிசக்தித் துறைக்கான நான்கு முக்கிய உத்திகளில், முதலாவது உள்நாட்டில் எண்ணெய் கண்டுபிடிப்பு மற்றும் உற்பத்தியை அதிகரித்தல், இரண்டு விநியோகத்தை பன்முகப்படுத்துதல், மூன்று உயிரி எரிபொருள், எத்தனால், சூரிய மின்சக்தி அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு போன்ற எரிசக்திகளை விரிவுப்படுத்துதல், நான்காவது மின்வாகனங்கள் மற்றும் ஹைட்ரஜன் மூலம், கரியமில வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்துதல்.

2030க்குள் நமது எரிசக்திக் கலவையை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்த இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்க இயக்க மாதிரியில் நாம் பாடுபட்டு வருகிறோம்.  'ஒரே நாடு ஒரே மின் தொகுப்பு' என்பதன் மூலம் அடிப்படைக் கட்டமைப்பை வழங்குவது தேவைப்படுகிறது. நகர்ப்புறங்களில் எரிவாயு விநியோகம் 9 மடங்கு அதிகரித்துள்ளது. 2014ல் 900 என்றிருந்த அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு நிலையங்களில் எண்ணிக்கை தற்போது 5000 மாக உயர்ந்துள்ளது. 2014ல் 14,000 கிலோமீட்டர் தொலைவு என்பதிலிருந்து குழாய் மூலம் எரிவாயு விநியோகம் 22,000 கிலோமீட்டர் அளவுக்கு உயர்ந்துள்ளது. அடுத்த 4 - 5 ஆண்டுகளில் இது 35,000 கிலோமீட்டராக விரிவடையும்.

நண்பர்களே, இந்தியக் குடிமக்கள் புதுப்பிக்கவல்ல எரிசக்தி ஆதாரங்களை வெகுவேகமாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர். வீடுகள், கிராமங்கள், விமான நிலையங்கள், சூரிய மின்சக்தியில் இயங்குவதே உதாரணம். வேளாண் பணிகளும் சூரிய மின் சக்தியால் இயங்கும், பம்புசெட்டுகளைக் கொண்டு செயல்படுத்தப்படுகின்றன. கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவில் 19 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு தூய்மையான சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சூரிய சக்தியில் இயங்கும் சமையல் அடுப்பு இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது புதிய பரிணாமத்தை கொண்டுவரும். அடுத்த 2 - 3 ஆண்டுகளில்  3 கோடிக்கும் அதிகமான வீடுகள் இந்த சூரிய சமையல் அடுப்புகள் பயன்படுத்தப்படும். இது சமையல் அறையில் ஒரு புரட்சியை கொண்டுவரும்.

இந்தியாவின் எரிசக்தி துறை தொடர்பான அனைத்து வாய்ப்புகளையும் கண்டறிந்து அவற்றில் ஈடுபாடு காட்ட வேண்டும். உங்களின் முதலீட்டுக்கு மிகவும் பொருத்தமான இடமாக இந்தியா உள்ளது. நன்றி.

***

(Release ID: 1896609)

PKV/RR


(Release ID: 1896891) Visitor Counter : 164