ரெயில்வே அமைச்சகம்

‘ஒரே பாரதம், உன்னத பாரதம்' திட்டத்தின் கீழ் குஜராத்தில் பாரத் கௌரவ் டீலக்ஸ் சுற்றுலா ரயில் சேவை

Posted On: 05 FEB 2023 9:48AM by PIB Chennai

குஜராத் மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில் பாரத் கௌரவ் டீலக்ஸ் குளிர்சாதன சுற்றுலா ரயில் சேவையை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனத்தால் இயக்கப்படும் இந்த சிறப்பு சுற்றுலா ரயில், தில்லி சாஃப்தார்ஜங் ரயில் நிலையத்திலிருந்து 8 நாள் பயணத்தை பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கும். பயணிகளின் வசதிக்காக குருகிராம், ரேவாரி, ரிங்காஸ், ஃபுல்லேரா மற்றும் ஆஜ்மீர் ரயில் நிலையங்களில் இந்த சிறப்பு ரயில் நின்று செல்லும்.

போற்றுதலுக்குரிய சுதந்திர போராட்ட வீரர் சர்தார் வல்லபாய் பட்டேலின் வாழ்க்கையின் அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசு இந்த சிறப்பு சுற்றுலா ரயில் தொகுப்பை உருவாக்கியுள்ளது. ஒற்றுமை சிலை அமைந்துள்ள கெவாடியா, இந்த ரயிலின் முதல் நிறுத்தமாக இருக்கும். 8 நாட்கள் பயணத்தின் போது மொத்தம் சுமார் 3500 கிலோமீட்டர் தூரத்தை ரயில் கடக்கும்.

சபர்மதி ஆசிரமம், மோதெரா சூரியன் ஆலயம் போன்ற புகழ்பெற்ற சுற்றுலா தலங்களுக்குச் செல்லும் இந்த ரயிலுக்கான கட்டணம் இரண்டாம் வகுப்பு குளிர்சாதன பெட்டிக்கு ரூ. 52,250 (ஒரு நபருக்கு), முதல் வகுப்பிற்கு ரூ. 67,140 (ஒரு நபருக்கு) விதிக்கப்படும். உணவு, தங்கும் வசதி உள்ளிட்ட அனைத்தும் இதில் அடங்கும். கூடுதல் விவரங்களுக்கு https://www.irctctourism.com/ என்ற இணையதளத்தைத் தொடர்பு கொண்டு முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இத்தளம் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

                                                                                                                      ------

PKV/BA/KPG



(Release ID: 1896431) Visitor Counter : 229