தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

ஜோத்பூரில் முதலாவது ஜி20 வேலைவாய்ப்புப் பணிக்குழுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் உரை

Posted On: 03 FEB 2023 1:01PM by PIB Chennai

ஜோத்பூரில் முதலாவது ஜி20 வேலைவாய்ப்புப் பணிக்குழுக் கூட்டம் நடைபெற்றது.  இதில் உரையாற்றிய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், இந்த ஆலோசனைக் கூட்டம் அனைவருக்குமான வளர்ச்சியை உள்ளடக்கிய கண்ணியமான வேலைவாய்ப்பை உருவாக்குவது குறித்த சர்வதேச சமுதாயத்தின் முனைப்பான நடவடிக்கைகளை ஆலோசிப்பதாக அமைய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இந்தக் கூட்டத்தை ஜோத்பூரில் நடத்த  ஏற்பாடு செய்த மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் திரு பூபேந்திர யாதவுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.  உலக நாடுகளில் தற்போது நிலவும் வேலைவாய்ப்பின்மையை முடிவுக்கு கொண்டுவர கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றும், அதற்கு இந்த ஜி20 கூட்டம் உதவும் என்றும் குறிப்பிட்டார்.

உலகின் இரண்டாவது முன்னணி நாடான இந்தியா, எதிர்காலத்தில் வேலைவாய்ப்பை உருவாக்குவதன் மூலம் வளர்ச்சியை உறுதிப்படுத்த முடியும் என்று தாம் நம்புவதாக கூறினார்.

உலக நாடுகள் தற்போது சந்தித்து வரும் வேலைவாய்ப்பின்மை மற்றும் சமூக பாதுகாப்பின்மைக்கு கொரோனா பெருந்தொற்றே காரணம் என்று குறிப்பிட்ட ஷெகாவத், உலக நாடுகள் பலவற்றின் பொருளாதாரம் மந்த நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும் கவலை தெரிவித்தார்.

ஏராளமான மக்கள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், வேலைவாய்ப்பை அதிகரிப்பதுடன் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதில் உள்ள சவால்களை முறியடிப்பதற்கு உலக நாடுகள் ஒருங்கிணைந்து தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார்.  கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மத்திய அரசு மேற்கொண்ட சில முனைப்பான நடவடிக்கைகள் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உதவியதாகவும், பெருமிதம் தெரிவித்தார். 

குறிப்பாக, 80 கோடி மக்களுக்கு இன்று வரை இலவச உணவுதானியங்கள் விநியோகம், உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீடுத் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் பல திட்டங்களை அமைச்சர் பட்டியலிட்டார்.  வேலைவாய்ப்பு இன்மையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், ஆத்ம நிர்பர் பாரத் ரோஸ்கார் யோஜனா மூலம் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டதையும் அமைச்சர் எடுத்துரைத்தார்.

இதேபோல், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மத்திய அரசின் பங்களிப்புடன் பிரதமரின் ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா மூலம்  முதியோர் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதையும், இதற்காக இ-ஷ்ரம் இணைய தளம் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும், அதில் இதுவரை 29 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்கள் தங்கள் பெயரை பதிவு செய்திருப்பதாகவும் அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தார்.

------ 

AP/ES/PK/RJ(Release ID: 1895996) Visitor Counter : 204