நிதி அமைச்சகம்

ஜவுளி மற்றும் வேளாண் தவிர்த்து இதர பொருட்கள் மீதான அடிப்படை சுங்கவரி விகிதங்கள் 21 முதல் 13 ஆக குறைப்பு

Posted On: 01 FEB 2023 12:54PM by PIB Chennai

ஏற்றுமதிகளை ஊக்குவிப்பது, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது, உள்நாட்டு மதிப்பு கூட்டலை மேம்படுத்துவது, பசுமை எரிசக்தி மற்றும் இயங்கு தன்மையை ஊக்குவிப்பது ஆகிய நோக்கங்களோடு 2023-24 ஆம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி மற்றும் பெரு நிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

இதன்படி ஜவுளி மற்றும் விவசாயம் அல்லாத இதர பொருட்கள் மீதான அடிப்படை சுங்கவரி விகிதங்கள் 21 முதல் 13ஆகக் குறைக்கப்பட உள்ளது. இதனால் விளையாட்டுப் பொருட்கள், சைக்கிள்கள், வாகனங்கள் உள்ளிட்ட சில பொருட்களின் அடிப்படை சுங்கவரி, செஸ் வரி முதலியவற்றில் சிறு மாற்றங்கள் தேவைப்படுகின்றன.

மின்சார வாகனங்களின்  மின்கலத்திற்குத் தேவையான லித்தியம்-அயான்  செல்களின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பொருட்களின் இறக்குமதி மீதான சுங்கவரிக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. சமையலறையில் பயன்படுத்தப்படும் மின்சார புகை போக்கியின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்படும்.

எரிசக்தி மாற்றத்திற்கு வலு சேர்க்கும் வகையிலும், எத்தனால் கலப்பு திட்டத்திற்கு ஆதரவளிக்கவும், வீரியமிக்க எதைல் ஆல்கஹால் மீதான அடிப்படை சுங்கவரி விலக்கப்படும். கடல்சார் பொருட்களின் ஏற்றுமதி போட்டித் தன்மையை அதிகரிக்க உள்நாட்டு இறால் தீவன உற்பத்திக்கான முக்கிய உள்ளீடுகளில் அடிப்படை சுங்க வரி குறைக்கப்படும் என்று நிதி அமைச்சர் அறிவித்தார்.

(Release ID: 1895283)(Release ID: 1895642) Visitor Counter : 186