சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
தேசிய தொழுநோய் ஒழிப்பு தினத்தையொட்டி மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றினார்
Posted On:
30 JAN 2023 3:23PM by PIB Chennai
நாட்டில் தொழுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வருவதாகவும், அரசு, சமூகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் திட்டமிட்ட காலத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பாகவே 2027-ம் ஆண்டுக்குள் தொழுநோய் இல்லா இந்தியா என்ற இலக்கை நாம் அடைய முடியும் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
தேசிய தொழுநோய் ஒழிப்பு தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி வாயிலாக கலந்து கொண்ட அவர் இதனைத் தெரிவித்தார். தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த மகாத்மா காந்தியின் கவலை குறித்து குறிப்பிட்ட அமைச்சர், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்ற அக்கறை நமது நாட்டின் வரலாற்றில் இருந்து உருவாகியது என்றும் அவர் தெரிவித்தார். அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது மட்டுமல்லாமல் நமது சமூகத்தின் மைய நீரோட்டத்தில் இடம் பெறச் செய்வது அவருடைய தொலைநோக்குப் பார்வையாக இருந்தது என்றும் தெரிவித்தார். தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் இந்த நாட்டில் இருந்து தொழுநோயை முழுமையாக ஒழிப்பது என்ற நமது முயற்சிகள் அவருடைய தொலைநோக்குப் பார்வைக்கு அளிக்கக் கூடிய சிறந்த மரியாதை என்றும் குறிப்பிட்டார். 2005-ம் ஆண்டு தேசிய அளவில் 10,000 பேருக்கு ஒருவர் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் என்ற குறைந்த எண்ணிக்கையை நாம் வெற்றிகரமாக அடைந்ததாக தெரிவித்தார். தொழுநோயை முற்றிலுமாக ஒழிப்பதற்கு இத்தருணத்தில் தொடர் முயற்சிகளை மேற்கொள்வது அவசியம் என்றும் கூறினார். இந்த நோய் குணப்படுத்தக்கூடியது என்றும், இதன் பாதிப்பு குறித்து விரைவில் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் நிரந்தரமான குறைபாடுகள் ஏற்படும் என்று தெரிவித்தார்.
தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டம் குறித்துப் பேசிய இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார், நாட்டில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து இலவசமாக சிகிச்சை அளிக்கும் பணியில் தொழுநோய் ஒழிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.
***
AP/IR/AG/KRS
(Release ID: 1894742)
Visitor Counter : 735