உள்துறை அமைச்சகம்
கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இன்று பி.வி.பூமரடி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் பவள விழா கொண்டாட்டத்தில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு.அமித் ஷா தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்
Posted On:
28 JAN 2023 5:52PM by PIB Chennai
கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இன்று பி.வி.பூமரடி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் பவள விழா கொண்டாட்டத்தில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு.அமித் ஷா தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்
இவ்விழாவில், மத்திய அமைச்சர் பிரலாத் ஜோஷி, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, திருப்பதி விஸ்வ தர்ம சேத்னா மஞ்ச் சுவாமி பிரம்மரிஷி குருதேவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் லாலா லஜபதி ராய்க்கு இன்று பிறந்தநாள் என்றும், அவரது பங்களிப்பை நாடு ஒருபோதும் மறக்க முடியாது என்றும் திரு அமித் ஷா தமது உரையில் குறிப்பிட்டார். இன்று சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவ தளபதி கே.எம். கரியப்பாவுக்கும், இன்று பிறந்தநாள் என்று கூறிய அவர், இந்திய ராணுவத்திற்கு பல இலக்குகளை நிர்ணயித்தது மட்டுமின்றி, தமது துணிச்சலின் மூலம் அவற்றை சாதித்தவர் என்றார். சுதந்திரம் அடைந்ததில் இருந்து இதுவரை 75 ஆண்டுகால பயணத்தில், இந்தியா தனது நிலையை மறுக்க முடியாத வகையில் வலுப்படுத்தி, முழு உலகிற்கும் தனது திறனை வெளிப்படுத்தியுள்ளது என்று திரு ஷா கூறினார். கடந்த 107 ஆண்டுகளாகக் கர்நாடக லிங்காயத் கல்விச் சங்கம் (கேஎல்இ) கல்வியின் மூலம் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
1916 ஆம் ஆண்டு ஒரு சிறிய பள்ளியில் இருந்து தொடங்கிய கேஎல்இ சங்கத்தின் பயணம் இன்று 294 கல்வி நிறுவனங்களை எட்டியுள்ளது என்றும் இவற்றில் சுமார் 1,38,000 மாணவர்கள் படிக்கின்றனர் என்றும் திரு அமித் ஷா கூறினார். இந்தச் சங்கத்தை 107 ஆண்டுகளாக மிகவும் ஜனநாயகமாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் நடத்துவது ஒட்டுமொத்த நாட்டின் கல்வி முறைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். கேஎல்இ சங்கம் இன்று, 4000 க்கும் அதிகமான படுக்கைகள் கொண்ட உள்கட்டமைப்புடன் சுகாதாரத் துறையில் பெரும் பங்களிப்பைச் செய்து வருகிறது. இதில், 1700 சுகாதார வசதிகள் உள்ளன, இதில் ஏழை எளிய மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. கேஎல்இ தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் 1947 முதல் இன்றுவரை பிரகாசமான வரலாற்றைக் கொண்டுள்ளது என்றும், அதன் மாணவர்கள் பல துறைகளில் நாட்டிற்கும் உலகிற்கும் பங்களிப்பு செய்துள்ளனர் என்றும் திரு ஷா கூறினார்.
சுமார் 25 கோடி ரூபாய் செலவில் 3500 பேர் அமரும் வசதிகொண்ட உள்விளையாட்டு அரங்கம் இன்று திறந்து வைக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்தார். இதில் பேட்மிண்டன் மற்றும் ஸ்குவாஷ் விளையாட்டிற்கு தலா இரண்டு மைதானங்களும், கூடைப்பந்து, கைப்பந்து, டேபிள் டென்னிஸ் ஆகியவற்றிற்கு தலா ஒரு மைதானமும் உள்ளன. சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கான இரண்டு தனித்தனி உடற்பயிற்சி கூடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. தனது மாணவர்களில் ஒருவரை ஒலிம்பிக் போட்டிகளுக்கு அனுப்புவதாகப் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு கேஎல்இ சங்கம் அளித்த வாக்குறுதி வெகு விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறினார்.
சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழா ஆண்டில், நாம் அனைவரும் நம் வாழ்வில் எவ்வளவு வெற்றி பெற்றாலும், சிறந்த இந்தியாவை உருவாக்கி, இந்தியாவை உலகில் முதல் இடத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொள்ள உறுதியேற்க வேண்டும். இங்கு படிக்கும் தொழில்நுட்ப மாணவர்கள் உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப வல்லுனர்களாக மாற வேண்டும். அதே நேரத்தில் உலக அளவில் தொழில்நுட்பத் துறையில் இந்தியா முதலிடத்தில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தையும் கொண்டிருங்கள் என்று திரு அமித் ஷா கூறினார்.
*****
SMB / DL
(Release ID: 1894352)
Visitor Counter : 221