பிரதமர் அலுவலகம்
கர்நாடகாவின் யாத்கிர் மாவட்டத்தில் உள்ள கோடேகால் பகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டல் மற்றும் திறப்பு விழாவில் பிரதமரின் உரை
Posted On:
19 JAN 2023 4:03PM by PIB Chennai
கர்நாடக ஆளுநர் திரு தாவர் சந்த் கெலாட் அவர்களே, முதலமைச்சர் திரு பசவராஜ் பொம்மை அவர்களே, எனது அமைச்சரவை நண்பர் திரு பகவந்த் கூபா அவர்களே, கர்நாடக மாநில அமைச்சர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, சகோதர சகோதரிகளே!
யாத்கிரி, வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் வகிக்கிறது. ராட்டி ஹள்ளியின் பழமை வாய்ந்த கோட்டை, நமது வரலாறு மற்றும் மூதாதையர்களின் வலிமையின் சின்னமாக விளங்குகிறது. நமது பாரம்பரியம், கலாச்சாரத்துடன் தொடர்புடைய ஏராளமான இடங்கள் இந்தப் பகுதியில் உள்ளன. அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவிற்கும், ஒவ்வொரு இந்தியருக்கும் மிகவும் முக்கியம் வாய்ந்தது. இந்த அமிர்தகாலத்தில் வளர்ந்த இந்தியாவை நாம் கட்டமைக்க வேண்டும். ஒவ்வொரு இந்தியரும், ஒவ்வொரு குடும்பமும், ஒவ்வொரு மாநிலமும் இணைந்தால் மட்டுமே இதை சாத்தியமாக்க முடியும்.
நண்பர்களே,
எங்களது அரசின் முன்னுரிமை வாக்கு வங்கி அல்ல, வளர்ச்சி, வளர்ச்சி, வளர்ச்சி மட்டுமே. நாட்டில் ஒரு மாவட்டம் வளர்ச்சியின் அடிப்படையில் பின்தங்கியதாக இருந்தால் கூட, நாடு முன்னேற முடியாது. எனவே, முந்தைய அரசுகளால் பின்தங்கியவை என்று அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் முன்னேற விரும்புவதை நாங்கள் ஊக்குவித்தோம். யாத்கிர் உட்பட நாடு முழுவதும் இது போன்ற 100 மாவட்டங்களில் முன்னேற விரும்பும் மாவட்டங்கள் திட்டத்தை நமது அரசு தொடங்கியது. இந்த மாவட்டங்களில் சிறந்த ஆளுகைக்கு முக்கியத்துவம் அளித்து, வளர்ச்சியின் ஒவ்வொரு நிலையிலும் பணிகளை தொடங்கினோம்.
சகோதர, சகோதரிகளே,
21-ஆம் நூற்றாண்டு இந்தியாவின் மற்றொரு முக்கிய பிரச்சனை தண்ணீர் பாதுகாப்பு. இந்தியா வளர வேண்டுமானால் எல்லை பாதுகாப்பு, கடலோர பாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு போல தண்ணீர் பாதுகாப்பு சம்பந்தமான சவால்களும் எதிர்கொள்ளப்பட வேண்டும். வசதி மற்றும் சேமிப்பைக் கருத்தில் கொண்டு இரட்டை என்ஜின் அரசு பணியாற்றி வருகிறது. நுண்ணீர் பாசனத்திற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் அதிக முக்கியத்துவத்தை இன்று அளித்து வருகிறோம். கடந்த 6-7 ஆண்டுகளில் 70 லட்சம் ஹெக்டர் நிலங்கள் நுண்ணீர் பாசனத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. நிலத்தடி நீரின் அளவை அதிகரிக்கவும் இரட்டை என்ஜின் அரசு கடுமையாக உழைத்து வருகிறது. அரசு மேற்கொண்டு வரும் சீரிய முயற்சிகளுக்கு ஜல்ஜீவன் இயக்கம் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இந்த இயக்கம் தொடங்கப்பட்ட போது நாட்டில் உள்ள 18 கோடி ஊரக வீடுகளில் 3 கோடி வீடுகளில் மட்டுமே தண்ணீர் குழாய் இணைப்புகள் இருந்தன. இன்று சுமார் 11 கோடி வீடுகள் இந்த வசதியைப் பெற்றுள்ளன.
உள்கட்டமைப்பு மற்றும் சீர்திருத்தங்களுக்கு இரட்டை என்ஜின் அரசு அளித்து வரும் முக்கியத்துவத்தால், கர்நாடக மாநிலம் முதலீட்டாளர்களின் விரும்பத்தக்க தலமாக மாறியுள்ளது. இந்தப் பகுதியின் வளர்ச்சியால் அனைவரும் வளம் பெறட்டும். உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன்.
மிக்க நன்றி!
பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.
***
(Release ID: 1892200)
RB/SMB/KRS
(Release ID: 1892380)
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam