பாதுகாப்பு அமைச்சகம்
அக்னி வீரர்களின் முதல் குழுவினரிடம் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்; அக்னிபத் திட்டத்தின் முன்னோடிகளாக திகழும் அக்னிவீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்
வலுவான, வளமான ‘புதிய இந்தியாவை’ கட்டமைப்பதை நோக்கிய நடவடிக்கையில் முதன்மையானது இந்தத் திட்டம் என்று பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்
Posted On:
16 JAN 2023 2:33PM by PIB Chennai
அடிப்படைப்பயிற்சியை தொடங்கியுள்ள முப்படையின் அக்னி வீரர்களின் முதல் குழுவினருடன் காணொலி காட்சி வாயிலாக, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (16.01.2023) உரையாற்றினார்.
நமது ஆயுதப்படையை வலுப்படுத்தவும், அதன் எதிர்காலத்தை தயார் செய்யவும், இந்த முன்னோடி கொள்கை முக்கியத்துவம் பெற்று விளங்கும் என்று பிரதமர் எடுத்துரைத்தார். இளைய அக்னி வீரர்கள் ஆயுதப்படையை மேலும் இளமையானதாகவும், தொழில்நுட்ப அறிவு சார்ந்ததாகவும் ஆக்குவார்கள் என்று பிரதமர் உறுதிபட தெரிவித்தார்.
அக்னி பத் திட்டம் எவ்வாறு மகளிருக்கு அதிகாரம் அளிக்கும் என்பது குறித்தும் பிரதமர் விவாதித்தார். கடற்படையில் இணைந்து பெருமை சேர்த்துள்ள மகளிர் அக்னி வீரர்கள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர், முப்படையிலும் மகளிர் அக்னி வீரர்களை காண்பதை தாம் எதிர்நோக்கி இருப்பதாக தெரிவித்தார். ஆயுதப்படையின் பல்வேறு பிரிவுகளில் மகளிர் முன்னிலை வகிப்பதை பிரதமர் நினைவுகூர்ந்தார். சியாச்சின் பகுதியில் மகளிர் வீரர் பணியமர்த்தப்பட்டது மற்றும் நவீன போர் விமானங்களை மகளிர் ஓட்டுவது ஆகியவற்றை அவர் உதாரணங்களாக குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றிய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், தேசத்தை வலுப்படுத்த பாதுகாப்பு அமைச்சகம் பல முடிவுகளை மேற்கொண்டிருப்பதாகவும், அவற்றில் அக்னி பத் திட்டம் மிகவும் முக்கியமானதும், முன்னெப்போதும் காணப்படாத சீர்திருத்தங்களில் ஒன்றாகும் என்றும் தெரிவித்தார்.
அக்னி வீரர்கள் ராணுவத்தில் மட்டுமின்றி தங்களின் பலம் மற்றும் அறிவின் மூலம் சமூகத்திற்கும் சேவை செய்வார்கள் என்று அவர் குறிப்பிட்டார். வலுவான, வளமான ‘புதிய இந்தியாவை’ கட்டமைப்பதை நோக்கிய நடவடிக்கையில் முதன்மையானது இந்தத் திட்டம் என்று பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சகத்தின் பல்வேறு துறைகளிலும், மத்திய ஆயுதப்படைப்பிரிவுகளிலும், ரயில்வே அமைச்சகத்திலும் ஏராளமான பணியிடங்களில் அக்னி வீரர்களுக்கு இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். அக்னி வீரர்களுக்கு முறைப்படியான கல்வியை உத்தரவாதப்படுத்த பாதுகாப்புத் துறையும், கல்வி அமைச்சகமும் இணைந்து ஏற்பாடுகளை செய்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
ராணுவ சேவைகளுக்குப் பின் ஏதாவது தொழில் தொடங்க அல்லது சுயவேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளவிரும்பும் அக்னி வீரர்களுக்கு நியாயமான வட்டி விகிதத்தில் கடன் வழங்க நிதி அமைச்சகத்துடன் சேர்ந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் திரு ராஜ்நாத் சிங் கூறினார்.
பிரதமரின் உரை அக்னி வீரர்கள் பயிற்சி மையங்கள் அனைத்திலும் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்வில் முப்படைகளின் தலைமைத் தளபதி ஜென்ரல் அனில் சௌஹான், விமானப்படை தளபதி ஏர்சீஃப் மார்ஷல் வி ஆர் சௌதாரி, கப்பற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார், ராணுவத் தளபதி ஜென்ரல் மனோஜ்பாண்டே மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
***
SG/SMB/AG/KRS
(Release ID: 1891587)
Visitor Counter : 229