சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
உலக தென்பகுதி நாடுகள் உச்சிமாநாட்டில் சுற்றுச்சூழல் அமைச்சர்களின் அமர்வு
Posted On:
13 JAN 2023 2:05PM by PIB Chennai
உலக தென்பகுதி நாடுகளின் குரல் என்னும் உச்சிமாநாட்டின் இரண்டாவது நாளான இன்று சுற்றுச்சூழல் அமைச்சர்கள் அமர்வு நடைபெற்றது. உச்சிமாநாட்டின் தலைப்பு "வளர்ச்சியை சுற்றுச்சூழல் நட்பு வாழ்க்கை முறைகளுடன் சமநிலைப்படுத்துதல்" என்பதாகும். தென்பகுதியைச் சேர்ந்த பதினான்கு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் அமர்வில் பங்கேற்றனர்.
மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு.பூபேந்தர் யாதவ் தொடக்கவுரையாற்றினார். திரு யாதவ் தனது உரையில், சமத்துவமின்மையைக் குறைப்பதற்கும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் பங்களிக்கும், உள்ளடக்கிய மற்றும் நிலையான கொள்கைகளை உருவாக்குவது அவசியம் என்று கூறினார். பல்வேறு சர்வதேச அரங்குகளில் பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழலைக் கையாள்வதிலும், குரலை எழுப்புவதிலும் இந்தியாவின் பங்கை அவர் குறிப்பிட்டார்.
வளரும் நாடுகளுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதில் வளர்ந்த நாடுகளின் பங்கை திரு யாதவ் எடுத்துரைத்தார். பருவநிலை மாற்றத்தால் சிறு தீவு நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டணி , மீள் தீவு மாநிலங்களுக்கான உள்கட்டமைப்பு , சர்வதேச சூரியக் கூட்டணி போன்ற இந்தியா எடுத்த முன்முயற்சிகள் முதலியனவும் குறிப்பிடப்பட்டன. இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்வதில் இந்தியாவின் அனுபவமும் சிறப்பிக்கப்பட்டது. ஜி 20 தலைமைப் பதவி, நீலப் பொருளாதாரம், சுழற்சிப் பொருளாதாரம் மற்றும் நில மறுசீரமைப்பு ஆகிய தலைப்புகள் அமைச்சர்களிடம் குறிப்பிடப்பட்டன.
***
AP/PKV/RJ
(Release ID: 1890995)
Visitor Counter : 121