வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்திய - அமெரிக்க வர்த்தகக் கொள்கை அமைப்பு குறித்த கூட்டறிக்கை
Posted On:
12 JAN 2023 10:53AM by PIB Chennai
வாஷிங்டனில் இந்திய - அமெரிக்க வர்த்தகக் கொள்கை அமைப்பின் 13-வது அமைச்சர்கள் அளவிலான கூட்டம் நேற்று நடைபெற்றது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி தூதர் திருமிகு கேத்ரின் தாய் ஆகியோர் இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கினர்.
இந்தக் கூட்டத்தின் முடிவில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி திருமிகு கேத்ரின் தாய் ஆகியோர் கூட்டறிக்கையில் கையெழுத்திட்டனர்.
இரு நாடுகளிலும் உள்ள உழைக்கும் மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில், வலுவான இருதரப்பு வர்த்தக உறவுகளை உருவாக்குவதிலும், இருதரப்பு பொருளாதார உறவை மேம்படுத்துவதிலும் இந்திய - அமெரிக்க வர்த்தகக் கொள்கை அமைப்பின் முக்கியத்துவத்தை அமைச்சர்கள் கூட்டறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளனர். பொருட்கள் மற்றும் சேவைகளில் இருதரப்பு வர்த்தகம் வேகமாக உயர்ந்து 2021-ல் சுமார் 160 பில்லியன் டாலரை எட்டியதை இருதரப்பினரும் பாராட்டினர்.
12-வது இந்திய - அமெரிக்க வர்த்தகக் கொள்கை அமைப்பின் கூட்டத்திற்குப் பின் மேற்கொள்ளப்பட்ட பணிகளை இரு தரப்பினரும் எடுத்துரைத்தனர்.
இந்தோ-பசிபிக் பொருளாதார செழுமைக்கான கட்டமைப்பில் (ஐபிஇஎஃப்) இந்தியா பங்கேற்றதை அமெரிக்கா வரவேற்றது. இந்த அமைப்பை முழுமையாக ஆதரிப்பதோடு, இத்திட்டம் இப்பகுதிக்கு உறுதியான பலன்களைத் தரும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
உலக வர்த்தக அமைப்பின் 12-வது அமைச்சர்கள் அளவிலான மாநாட்டில் எட்டப்பட்ட முடிவுகளை இரு தரப்பினரும் வரவேற்றதோடு, உறுதியான மற்றும் அர்த்தமுள்ள வளர்ச்சியை எட்டுவதற்கு, உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டு முடிவுகள் உட்பட, உலக வர்த்தக அமைப்பில் ஆக்கப்பூர்வமாக தொடர்ந்து பணியாற்றுவதற்கான தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினர்.
இந்தியாவின் ஜி-20 தலைமையை வரவேற்ற அமெரிக்க பிரதிநிதி, வர்த்தகம் மற்றும் முதலீட்டு பணிக்குழுவில் இணைந்து பணியாற்ற அமெரிக்கா ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளதாகக் கூறினார். ஆக்கபூர்வமான உரையாடலைத் தொடங்குவதற்கும், உலகளாவிய வர்த்தகப் பிரச்சினைகளில் உறுப்பு நாடுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் ஜி-20 ஒரு பயனுள்ள அமைப்பாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்கும் இடையே நிலுவையில் உள்ள உலக வர்த்தக அமைப்பு குறித்த கருத்துவேறுபாடுகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அதிகாரிகள் மேற்கொண்ட பணிகளை இருதரப்பு அமைச்சர்களும் வரவேற்றனர். இனி வரும் மாதங்களில் திருப்திகரமான முடிவுகள் வரும் என்ற நோக்கில் பணிகளைத் தொடருமாறு அதிகாரிகளுக்கு அவர்கள் அறிவுறுத்தினர்.
மருந்துகள், மருத்துவ சாதனங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களுக்கான வரைவுச் சட்டம் குறித்து பொது ஆலோசனை பெறும் இந்தியாவின் முயற்சியை அமெரிக்கா பாராட்டிய நிலையில், இந்த மசோதா மீதான கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துவதற்கான விதிமுறைகளின்படி ஆராயப்படுவதாக இந்தியா குறிப்பிட்டது.
வணிகம் செய்வதை எளிதாக்க தொலைத்தொடர்பு உபகரணங்களின் கட்டாயச் சோதனை மற்றும் சான்றளிப்பு, கட்டாயப் பதிவு ஆணை ஆகியவற்றின் கீழ் சில மின்னணு சாதனங்களில் ஒழுங்குமுறைகளை ஒழுங்குபடுத்தும் முயற்சிகளை அமெரிக்கா வரவேற்றுள்ளது. எலக்ட்ரானிக்ஸ் துறையில் சர்வதேச தரநிலைகள் மற்றும் நடைமுறைகள் குறித்த தகவல்களைப் பரிமாறிக் கொள்வதில் இரு தரப்பினரும் தங்கள் ஆர்வத்தை எடுத்துரைத்தனர்.
அறிவுசார் சொத்துரிமை மீதான தொடர்ச்சியான ஈடுபாட்டை அமைச்சர்கள் வரவேற்றனர். மேலும், அறிவுசார் சொத்துகளின் பாதுகாப்பு புதுமையான கண்டுபிடிப்புகளுக்கும், இருதரப்பு வர்த்தத்தை மேம்படுத்துவதற்கு பங்களிக்கும் எனவும் வலியுறுத்தினர்.
நோயாளிகளுக்கு அதிநவீன மருத்துவ தொழில்நுட்பம் மலிவு விலையில் கிடைக்கும் வகையில், மருத்துவத்துக்கு தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலையை நிர்ணயிப்பது தொடர்பான கருத்துகளை தொடர்ந்து பரிமாறிக்கொள்ளவும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
***
(Release ID : 1890606 )
SM/CR/PK
(Release ID: 1890719)