பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவை மிகப் பெரிய ராணுவ சக்தியாக உலகம் அங்கீகரித்துள்ளது : பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

Posted On: 30 DEC 2022 5:54PM by PIB Chennai

இந்தியாவை மிகப் பெரிய ராணுவ சக்தியாக உலகம் அங்கீகரித்துள்ளது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். கேரள மாநிலம் சிவகிரி மடத்தில் நடைபெற்ற  தீர்த்ததான மகோத்சவ் நிகழ்ச்சியில் துறவிகள் மற்றும் ஆன்மீக பெரியோர்கள் மத்தியில் அவர் இன்று உரையாற்றினார். அரசின் தற்சார்பு இந்தியா கொள்கை தொழில் மூலம் வளம் என்பதை ஊக்குவிப்பதாகவும், இதன் காரணமாகவே நாட்டின் ராணுவ பலம் அதிகரித்து வருவதாகவும், உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா தற்போது திகழ்வதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டின் எல்லைகளை துணிச்சலுடனும் தைரியத்துடனும் ராணுவ வீரர்கள் பாதுகாத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

கல்வி, தூய்மை போன்ற விஷயங்களில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த ஸ்ரீ நாராயண குரு அறிவுறுத்தியதாகவும் இது அவரது தொலைநோக்குப் பார்வையை எடுத்துக் காட்டுவதாகவும் அமைச்சர் கூறினார். இந்த விஷயங்களில் அரசும் அதிக கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்தார்.

தற்சார்பு என்பது இந்திய கலாச்சாரத்தில் ஒருங்கிணைந்த பகுதி என்று அவர் தெரிவித்தார். தற்சார்பு தொடர்பான  தகவல்களை ஸ்ரீ நாராயண குரு பரப்பியதாகவும் தற்போது அந்தப் பணியை சிவகிரி மடமும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதாகவும் அவர் கூறினார். நாராயண குரு நவீனத்திற்கு ஆதரவாக மட்டுமேயல்லாமல்,  பழங்கால கலாச்சாரம் மற்றும் நவீனத்திற்கு இடையே  சமநிலையைப் பராமரித்ததாகவும், இது தற்போதும் நாட்டுக்கு பொருத்தமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

சமத்துவம், விடுதலை மற்றும் சகோதரத்துவம் ஆகியவை மேற்கத்திய தத்துவம் என கருதப்படுவதாகக் கூறிய  அவர், உண்மையில் இவை பழங்கால இந்திய இலக்கியங்கள் மற்றும் பாரம்பரியத்தில் பரவலாகக் காணப்படுகின்றன என்றார். மேற்கத்திய நாடுகள் சமத்துவம், விடுதலை மற்றும் சகோதரத்துவம் எனப் பேசும் நிலையில், இந்திய பாரம்பரியத்தில்  வசுதைவ குடும்பகம் என்று நாம் கூறுவதாக அவர் குறிப்பிட்டார். வேதங்கள்,  உபநிடதங்கள், பகவத் கீதை, ராமாயணம் உள்ளிட்டவற்றின் சமத்துவம் மற்றும் ஒற்றுமை குறித்து விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளதையும் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் எடுத்துரைத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1887581

**********


(Release ID: 1887624) Visitor Counter : 208