பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஹவுராவுக்கும் புதிய ஜல்பைகுரிக்கும் இடையேயான வந்தேபாரத் ரயிலை பிரதமர் காணொலி காட்சி மூலம் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்


கொல்கத்தா மெட்ரோவின் ஜோகா – தரதலா இடையேயான நீல (பர்பிள்) வழித்தடப் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்

Posted On: 30 DEC 2022 1:20PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி ஹவுராவையும் புதிய  ஜல்பைகுரியையும் இணைக்கும் வந்தேபாரத் ரயிலை காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்து இன்று (30.12.2022) தொடங்கிவைத்தார்கொல்கத்தா மெட்ரோவின் ஜோகா – தரதலா இடையேயான நீள வழித்தடப் போக்குவரத்தையும் பிரதமர், தொடங்கி வைத்தார்.

பொயின்சி - சக்திகர் 3-வது வழித்தடம்,  தன்குனி – சந்தன்பூர் இடையேயான 4-வது வழித்தட திட்டம், நிம்திதா – புதிய ஃபராக்கா இரட்டை வழித்தடத் திட்டம் மற்றும் அம்பாரி ஃபலகட்டா -  புதிய மைனாகுரி – குமானிஹாத் இரட்டை வழித்தடத் திட்டம் ஆகிய 4 ரயில்வே திட்டங்களை நாட்டுக்கு அவர் அர்ப்பணித்தார். புதிய ஜல்பைகுரி ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட உள்ள மறுசீரமைப்புத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், தாம் நேரடியாக வரமுடியாததற்கு வருத்தம் தெரிவித்தார். வங்கத்தின் ஒவ்வொரு பகுதியிலும் சுதந்திரப் போராட்ட வரலாறு நிறைந்துள்ளதாகவும், மேற்கு வங்கத்திற்கு தலை வணங்குவதாகவும் அவர் கூறினார்.  வந்தே மாதரம் என்ற முழக்கம் தொடங்கிய நிலத்திலிருந்து இன்று வந்தே பாரத் ரயிலை கொடியசைத்துத் தொடங்கிவைப்பதாக அவர் தெரிவித்தார்.   1943ஆம் ஆண்டு இதே டிசம்பர் 30ம் தேதி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மூவண்ணக்  கொடியை ஏற்றி, தேசத்தின் விடுதலைப் போராட்டத்தை மேலும் விரைவுப்படுத்தியதாகத் கூறினார். விடுதலைப் பெருவிழாவின் 75-வது ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக 475 வந்தே பாரத் ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய பிரதமர், அதில் ஒன்றுதான் இன்று ஹவுராவிலிருந்து புதிய ஜல்பைகுரி வரை, கொடியசைத்துத் தொடங்கிவைக்கப்பட்டுள்ள ரயில் என்று குறிப்பிட்டார். இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ள மற்றும் தொடங்கிவைக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து பேசிய பிரதமர், இந்தத் திட்டங்களை நிறைவேற்ற ரூ.5,000 கோடிக்கும் அதிகமாக அரசு செலவிட்டுள்ளது என்றார்.

இன்று பிற்பகலில்  தூய்மை கங்கை இயக்கம்  தொடர்பான திட்டங்கள் மற்றும் மேற்கு வங்கத்திற்கான குடிநீர் திட்டங்களை  தொடங்கி வைக்கும் வாய்ப்பை தாம் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். தூய்மை கங்கை திட்டத்தின் கீழ் மேற்கு வங்க மாநிலத்தில் 25 கழிவு நீர் சுத்திகரிப்புத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். 11 திட்டங்கள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், 7 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். புதிதாக 5 திட்டங்களுக்கான  பணிகள்  ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் இன்று தொடங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இவற்றில் மிக முக்கியமானதாக ஆதி கங்கை திட்டம் என்று கூறிய அவர், ரூ.600 கோடி மதிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார்.

நதிகளை தூய்மைப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவற்றில் கழிவுநீர் கலக்காமல், சுற்றியுள்ள பகுதிகளில் நவீன நீர் சுத்திகரிப்பு நிலையங்களை உருவாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.  அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளுக்கான தேவைகளைக் கருத்தில் கொண்டு இவை மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

ரயில்வேத் துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு தேசத்தின் வளர்ச்சியுடன் தொடர்புடையது என்று அவர் கூறினார்.  எனவேதான் மத்திய அரசு  நவீன ரயில்வே கட்டமைப்புகளை உருவாக்க அதிக அளவில் முதலீடுகளை மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார். ரயில்வேத்துறையை மாற்றியமைக்க தேசிய அளவிலான இயக்கம் நடைபெறுவதாகவும் பிரதமர் கூறினார். வந்தே பாரத் தேஜாஸ், ஹம் சஃபர் போன்ற நவீன ரயில்களும் விஸ்டாடோன் பெட்டிகளும், ஜல்பைகுரி உள்ளிட்ட ரயில் நிலையங்களை நவீனமயமாக்குதலும், ரயில்வே வழித்தடங்களை மின்மயமாக்குதல் மற்றும் இரட்டைப்பாதைகள் ஆக்குவதும், இந்தத் துறையை நவீனப்படுத்துவதற்கான சில உதாரணங்கள் என்று பிரதமர் தெரிவித்தார். கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு வழித்தட திட்டங்கள், சரக்குப்போக்குவரத்துத் துறையில் புரட்சிகரமான  மாற்றங்களை ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார். ரயில்வே பாதுகாப்பு, தூய்மை, ஒருங்கிணைப்பு, திறன், நேரம் தவறாமை மற்றும் சிறந்த வசதிகள் போன்றவற்றிலும் ரயில்வே துறை அண்மைக்காலத்தில் சிறப்பாக தடம் பதித்துள்ளது என்று கூறினார்.  கடந்த 8 ஆண்டுகளில் நவீனமயமாக்குதலுக்கான அடித்தளத்தை ரயில்வே  ஏற்படுத்தியுள்ளதாகவும் வரும் ஆண்டுகளில் இந்த நவீனமயமாக்கல் பயணம் புதிய இலக்கை நோக்கி நகரும் என்றும் அவர் தெரிவித்தார். நாடு விடுதலை அடைந்து 70 ஆண்டுகளில் 20,000 கிலோ மீட்டர்  நீள ரயில்பாதைகள் மின்மயமாக்கப்பட்டதாகத் தெரிவித்த பிரதமர், கடந்த 2014ஆம் ஆண்டுக்கு பின்னர் மட்டும் 32,000 கிலோமீட்டருக்கும் அதிகமான ரயில்பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன என்று சுட்டிக்காட்டினார்.  தற்போதைய மெட்ரோ ரயில் நடைமுறை தேசத்தின் வேகம் மற்றும் வளர்ச்சியின் அளவீட்டிற்கு உதாரணமாகத் திகழ்கிறது என்று பிரதமர் கூறினார். 2014-ஆம் ஆண்டுக்கு முன்னர் மெட்ரோ ரயில் கட்டமைப்புகள் 250  கிலோ மீட்டருக்கும் குறைவாகவே இருந்தது என்றும் தில்லி நகரம் மட்டுமே அதிகமான மெட்ரோ ரயில் தடங்களைக் கொண்டிருந்ததாகவும் அவர் கூறினார். கடந்த 7 முதல் 8 ஆண்டுகளில் 20-க்கும் மேற்பட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், தற்போது நாட்டின் பல்வேறு நகரங்களில் 800 கிலோ மீட்டருக்கும் அதிகமான நீளத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவதாக கூறினார். இதை விரைவில் 1,000 கிலோ மீட்டராக அதிகரிக்க வேண்டும் என்ற நோக்குடன் பணிகள் நடைபெறுவதாக பிரதமர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில்  உள்கட்டமைப்புத் திட்டங்களில் நிலவிய சவால்கள் குறித்துப் பேசிய பிரதமர், இது நாட்டின் வளர்ச்சியில் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கூறினார். தேசத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் பல்வேறு அரசு அமைப்புகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாதது முக்கிய சவாலாக இருந்தது என்று அவர் தெரிவித்தார். முறையாகவும், நேர்மையாகவும் வரிசெலுத்துவோர் மத்தியில் இது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியதாக அவர் கூறினார். கடுமையாக உழைத்து ஈட்டப்பட்ட பணம் ஏழைகளுக்கு சென்றடையாமல் ஊழல்வாதிகளுக்கு சென்றடைந்தது இயற்கையாகவே அதிருப்தியை ஏற்படுத்தக்கூடியதாக அமைந்தது என்று பிரதமர் தெரிவித்தார்.  உள்கட்டமைப்புத் திட்டங்களில் பல்வேறு அமைப்புகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு இடைவெளியை நீக்கும் நோக்கத்திலேயே பிரதமரின் விரைவுசக்தி பெருந்திட்டம் தொடங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். பல்வேறு மாநில அரசுகள், கட்டுமான நிறுவனங்கள், தொழில்துறை வல்லுநர்கள் என யாராக இருந்தாலும் விரைவுசக்தி பெருந்திட்ட தளத்தில், ஒருங்கிணைந்து செயல்படுவதாக கூறினார். பலதரப்பட்ட அமைப்புகளை ஒருங்கிணைப்பதோடு நின்றுவிடாமல், பன்னோக்குத் திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதற்கான வழிவகையையும் பிரதமரின் விரைவுசக்தி பெருந்திட்டம் உருவாக்கியிருப்பதாகத் தெரிவித்தார். புதிய விமான நிலையங்கள்நீர்வழித்தடங்கள்துறைமுகங்கள் மற்றும் சாலைகள் போன்றவை பொதுமக்களுக்கு தடையற்ற போக்குவரத்து இணைப்பை உறுதி செய்வதற்காக கட்டமைப்படுகின்றன என்று அவர் கூறினார்.

21-ம் நூற்றாண்டில நமது திறன்களை சரியாகப் பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் செல்லவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.  நாட்டின் நீர்வழித்தடங்கள் குறித்து பேசிய பிரதமர் ஒரு காலத்தில் நீர்  வழித்தடங்கள் மக்களின் அன்றாட போக்குவரத்து, வணிகப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாவுக்கு பயன்பட்டதாகவும், அடிமைப்பட்டிருந்த காலங்களில் அது மறைந்ததாகவும் கூறினார். முந்தைய அரசுகள் நீர்வழித்தடங்களை மேம்படுத்த போதுமான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார். தற்போது இந்தியா நீர் ஆற்றலை  மேம்படுத்த இந்தியா செயலாற்றிவருகிறது என்று குறிப்பிட்டார். தற்போது 100-க்கும் மேற்பட்ட நீர்வழித்தடங்கள் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும், நவீனரக பயணக்கப்பல்கள், வணிகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில், அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியா – பங்களாதேஷ் இடையே கங்கை – பிரம்மபுத்ரா நீர்வழித்தடம் செயல்படுத்தப்படுவதை சுட்டிக்காட்டிய  பிரதமர், இது இரு நதிகளுக்கு இடையே நீர்வழித்தடத்தை உருவாக்கும் என்று கூறினார். ஜனவரி 13-ம் தேதி காசியிலிருந்து திப்ருகர் வரை பங்களாதேஷ் வழியாக சுற்றுலாப் போக்குவரத்து தொடங்க உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 3,200 கிலோ மீட்டர் தூரப்பயணம் ஒட்டுமொத்த உலகத்திற்குமே இப்பிரிவில் முதலாவதாக திகழும் என்பதுடன் நாட்டின் சுற்றுலாப் படகுபோக்குவரத்து வளர்ச்சியை எதிரொலிப்பதாகவும் அமையும் என்று பிரதமர் கூறினார்.

நிலத்தின் மீது மேற்கு வங்க மக்களுக்கு உள்ள அன்பைக் குறிப்பிட்ட பிரதமர், இம்மாநில மக்கள் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குச் சென்று அதன் மூலம் பல்வேறு விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வமாக உள்ளனர் என்று தெரிவித்தார்.

மேற்கு வங்க மக்கள், தேசமே முதன்மையானது என்ற கொள்கையை சுற்றுலாவிலும் பின்பற்றுகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார். நாட்டின் போக்குவரத்து வசதிகள் வலுப்படும் போது ரயில்வே, நீர்வழித்தடங்கள், நெடுஞ்சாலைப் போக்குவரத்து என அனைத்தும் நவீனமயமாகி பயணம் எளிதாகும் என்றும் மேற்கு வங்க மக்களும் இதன் மூலம் பயனடைவார்கள் என்றும் திரு நரேந்திர மோடி தெரிவித்தார்.

பிரதமர் தமது உரையை நிறைவு செய்வதற்கு முன்பாக ரவீந்தர்நாத் தாகூரின் எனது தேசத்தின் நிலமே நான் உனக்குத் தலை வணங்குகிறேன் என்ற வரிகளை எடுத்துரைத்தார். விடுதலைப் பெருவிழாவின் 75-வது ஆண்டில்  தேசத்தை முதன்மையாகக் கொண்டு அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை மிகப் பெரிய நம்பிக்கையுடன் பார்க்கிறது என்று அவர் கூறினார். இந்த நம்பிக்கையை தொடர்ந்து பராமரிக்க ஒவ்வொரு இந்தியரும் தங்கள் முழு பலத்தையும் செலுத்தி உழைக்க வேண்டும் என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

இந்நிகழ்ச்சியில், மேற்கு வங்க ஆளுநர் திரு சி வி ஆனந்த போஸ், முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி,  மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், மத்திய இணை அமைச்சர்கள் திரு ஜான் பர்லா, திரு சுபாஸ் சர்க்கார், திரு நிசித் பிரமாணிக், நாடாளுமன்ற உறுப்பினர் திரு பிரசூன் பானர்ஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னணி

ஹவுரா ரயில் நிலையத்தில்ஹவுரா - புதிய ஜல்பைகுரியை இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கிவைத்தார். பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய இந்த ரயில்மால்டா டவுன்பர்சோய்கிஷான்கஞ்ச் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

ஜோகா- எஸ்பிளனேடு மெட்ரோ திட்டத்தின் (பர்பிள் லைன்) ஜோகா-தரதாலா பிரிவில் பிரதமர் தொடங்கிவைத்தார். 6.5 கி.மீ. தூரப் பாதையில்தாக்கூர்புக்கூர்சாகர்பசார்பேஹாலா சௌராஷ்டிராபேஹாலாபசார்தரத்தாலா ஆகிய 6 ரயில் நிலையங்கள் இருக்கும்.  இந்தத் திட்டம் ரூ.2475 கோடிக்கும் அதிகமான செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. சர்சுனாதாக்கர்முச்சிப்பாராதெற்கு 24 பர்கானாஆகிய கொல்கத்தா நகரத்தின் தென்பகுதிகளைச் சேர்ந்த பயணிகள் இத்திட்டத்தின் மூலம் பெரும் பயனடைவார்கள்.

ரூ.405 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள பொயின்சி-சக்திகர் 3-வது லைன்ரூ.565 கோடியில் கட்டப்பட்டுள்ள தான்குனி-சந்தன்பூர் 4-வது லைன்ரூ.254 கோடி செலவில் உருவாக்கப்பட்ட நிம்டிடா-நியூ பராகா இரட்டை வழித்தடத் திட்டம், ரூ.1080 கோடிக்கும் அதிகமான செலவில் உருவாக்கப்பட்டுள்ள அம்பாரி ஃபலகட்டா-நியூமைனாகுரி-குமானிஹத் இரட்டைப்பாதை திட்டம் ஆகிய  நான்கு ரயில் திட்டங்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார். ரூ.335 கோடிக்கும் அதிகமான செலவில் சீரமைக்கப்படவுள்ள நியூ ஜல்பைகுரி ரயில் நிலையப்பணிக்கு  பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

 ------ 

 

AP/PLM/KPG/KRS


(Release ID: 1887563) Visitor Counter : 239