பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

வீர பாலகர் தினத்தை முன்னிட்டு புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் பிரதமரின் உரை

Posted On: 26 DEC 2022 3:44PM by PIB Chennai

எனது அமைச்சரவை நண்பர்களே, பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களே, மதிப்பிற்குரிய நிறுவனங்களின் தலைவர்களே, தூதர்களே, நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள தாய்மார்களே, அன்பர்களே!

முதலாவது வீர பாலகர் தினத்தை நாடு இன்று அனுசரிக்கிறது. பல தலைமுறையாக நாம் போற்றி வந்த, இந்த தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தியாகங்களுக்கு வீர வணக்கம் செலுத்துவதற்கான புதிய துவக்கமாக இந்நாள் அமைகிறது. ‘ஷஹீதி சப்தா' மற்றும் வீர பாலகர் தினம் ஆகியவை நமது சீக்கிய பாரம்பரியத்துடன் தொடர்புடைய உணர்வுகள் மட்டுமல்ல, அவை நம்மிடையே எழுச்சியையும் ஊட்டுகின்றன. வீரத்தை வெளிப்படுத்துவதற்கு வயது ஒரு பொருட்டல்ல என்பதை வீர பாலகர் தினம் நமக்கு நினைவூட்டுகிறது. நாட்டின் கௌரவத்திற்காக சீக்கிய பாரம்பரியத்தில் இடம்பெற்றுள்ள தியாகத்தின் முக்கியத்துவத்தையும் 10 குருமார்களின் பங்களிப்பையும் இந்த தினம் நமக்கு தொடர்ந்து நினைவுபடுத்தும். நமது கடந்த காலங்களைப் போற்றிடவும், எதிர்காலத்தைக் கட்டமைக்கவும் ஒவ்வொரு ஆண்டும் இந்த புனித தினம் நமக்கு ஊக்கமளிக்கிறது. 

நண்பர்களே,

எதிர்காலத்தில் இந்தியாவை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல விரும்பினால் கடந்த கால குறுகிய மனப்பான்மையை நாம் தகர்த்தெறிய வேண்டும். அதனால்தான் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை என்ற உறுதிப்பாட்டை விடுதலையின் அமிர்த பெருவிழாவில் நாம் மேற்கொண்டுள்ளோம். சீக்கிய பாரம்பரியம் என்பது வெறும் நம்பிக்கை மற்றும் ஆன்மீகத்தின் அடிப்படையிலானது அல்ல. ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற சிந்தனையின் ஆதாரமாகவும் அது திகழ்கிறது. 

நண்பர்களே,

ஒரு நாடு தனது கோட்பாடுகள், மாண்புகள் மற்றும் கொள்கைகளால் அறியப்படுகிறது. ஒரு நாட்டின் மாண்புகள் மாறும்போது உடனடியாக அதன் எதிர்காலமும் மாறும் என்பதை கடந்த காலங்களில் நாம் கண்டுள்ளோம். நாட்டின் கடந்த கால கொள்கைகளில் தற்போதைய தலைமுறையினர் தெளிவாக இருக்கும் போது இந்த மாண்புகள் பாதுகாக்கப்படுகின்றன. இளம் தலைமுறையினர் முன்னேறுவதற்கு முன்மாதிரிகள் எப்பொழுதும் அவசியம். ஊக்கம் பெறுவதற்கு இளைஞர்களுக்கு சிறந்த ஆளுகைகள் தேவை. அதனால்தான் விடுதலையின் அமிர்த பெருவிழாவின் போது சுதந்திர போராட்டத்தின் வரலாற்றை புதுப்பிக்க நாம் முயல்கிறோம். சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் பழங்குடி சமூகத்தின் பங்களிப்பை பெருவாரியான மக்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கிறோம். 

வீர பாலகர் தினத்தின் செய்தியை நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கில் இருக்கும் மக்களுக்கு கொண்டு செல்ல நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். வலுவான மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் நமது இலக்கை அடைவதற்கு இந்தக் கூட்டு முயற்சிகள் ஊக்கமளிக்கும் என்று நான் நம்புகிறேன். உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொறுப்புக் துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1886689 

**************

PKV/RB/GK




(Release ID: 1887013) Visitor Counter : 183