பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த எட்டரை ஆண்டுகளில் இளைஞர்களின் சிறப்பான எதிர்காலத்திற்கான பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது: மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
27 DEC 2022 6:05PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த எட்டரை ஆண்டுகளில் இளைஞர்களின் சிறப்பான எதிர்காலத்திற்கான பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் கஜ்ரவுலாவில், வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் “புதிய இளம் வாக்காளர்களுடன் ஒரு கலந்துரையாடல்” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்று 27.12.2022) அவர் இளைஞர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய அமைச்சர், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டுள்ள தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய சீர்திருத்த நடவடிக்கைகள், இளைஞர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
“இந்திய இளைஞர்களை ஒட்டுமொத்த உலகமும் நம்பிக்கையுடன் பார்க்கிறது. ஏனென்றால் நீங்கள்தான் இந்தியாவின் வளர்ச்சிக்காக உந்துசக்தி என்பதுடன் உலகத்திற்கான வளர்ச்சி இயந்திரமாகவும் உள்ளீர்கள்” என பிரதமர் திரு நரேந்திர மோடி பட்டமளிப்பு விழா ஒன்றில் பேசியதை திரு ஜிதேந்திர சிங் சுட்டிக்காட்டினார். புதிய இந்தியா, எதிர்காலத்தை மையமாகக் கொண்டது என்றும் இளைஞர்களின் தோள்களில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் நாட்டில் நிலையற்ற மற்றும் கூட்டணி அரசுகள் பதவி வகித்ததை இளம் வாக்காளர்களுக்கு அவர் சுட்டிக்காட்டினார். இது போன்ற நிலையற்ற தன்மை மக்கள் மத்தியில், குழப்பத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் உலக அரங்கில் இந்தியாவின் வளர்ச்சியைப் பாதிப்பதாக அமைந்தது என்று தெரிவித்தார். எனினும், 2014-ஆம் ஆண்டு மக்கள் நிலையான அரசை தேர்வு செய்ததாக கூறிய அவர், இது கொள்கைகளில் நிலைத்தன்மையையும் மாற்றத்திற்கான வலுவான அடித்தளத்தையும் ஏற்படுத்தியதாகத் தெரிவித்தார்.
2014-ஆம் ஆண்டில் நாட்டில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 350-ஆக இருந்தது என்றும் தற்போது அது 80,000-ஐ கடந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தற்போதைய மத்திய அரசு இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிப்பதையும், புதிய தொழில்பயிற்சி நிலையங்களை ஏற்படுத்துவதையும் உயர் முன்னுரிமையாகக் கொண்டு செயல்படுவதாக அவர் கூறினார். 1950-ம் ஆண்டு நாட்டின் முதல் தொழிற்பயிற்சி நிலையம் (ஐடிஐ) ஏற்படுத்தப்பட்டதாகத் தெரிவித்த அவர், அதன் பின்னர் 2014-ஆம் ஆண்டு வரை மொத்தம் 10,000 தொழிற்பயிற்சி நிறுவனங்கள் திறக்கப்பட்டிருந்ததாக கூறினார். கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் புதிதாக 5,000 தொழிற்பயிற்சி நிலையங்கள் நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இதன் மூலம், கடந்த 8 ஆண்டுகளில் புதிதாக 4 லட்சம் இடங்கள் ஐடிஐ-களில் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நாட்டின் வெற்றியில், தொழிற்பயிற்சி நிலையங்கள் முக்கிய பங்காற்றுவதாக அவர் தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், முப்பரிமாண அச்சிடுதல், ட்ரோன் தொழில்நுட்பம், தொலைமருத்துவம் உள்ளிட்ட புதிய படிப்புகள் ஐடிஐ-களில் கற்பிக்கப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் திரு ஜிதேந்திர சிங் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1886917
**************
SM/PLM/KPG./KRS
(Release ID: 1886950)
Visitor Counter : 251