அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் 2022-ம் ஆண்டு செயல்பாடுகள் குறித்த கண்ணோட்டம்

Posted On: 27 DEC 2022 1:55PM by PIB Chennai

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் உலகளவில் இந்தியா தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. 2022-ம் ஆண்டில் இந்த அமைச்சகத்தின் செயல்பாடுகள் மற்றும் குறிப்பிடத்தக்க சாதனைகளில் சில:

· அறிவியல் வெளியீடுகளில் இந்தியா முதல் 3 இடங்களில் தொடர்ந்து நீடித்து வருகிறது. பிஎச்டி எனப்படும் முனைவர் பட்ட ஆய்வுகள், உயர்கல்வி நடைமுறை மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் என அனைத்திலும் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகிறது.

· தொழில்நுட்பம் தொடர்பான தொழில் பாதுகாப்பகங்களை நிறுவுவதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை முன்னோடியாக திகழ்கிறது. இந்த அடிப்படையில் “புதுமைகளை உருவாக்குதல் மற்றும் பயன்படுத்துவதற்கான தேசிய முன்முயற்சி”  (நிதி-NIDHI)  என்ற திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் அறிவியல் மற்றும் தொழில்முனைவோர் பூங்காக்களை இந்த அமைச்சகம் ஏற்படுத்தி உள்ளது.

· நிதி என்ற திட்டத்தின் கீழ், தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த ஆண்டில் இந்தத் திட்டத்தின் கீழ், ஐதராபாதில் உயர்திறன் மையம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

· இளம் மற்றும் ஆர்வமுள்ள தொழில்முனைவோரை ஊக்குவித்தல் என்ற பிரயாஸ் முன்முயற்சியின் கீழ், இந்த ஆண்டில் புதிதாக 13 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

· அதிவேக கணினி திறனில் இந்தியா புதிய உச்சங்களை அடைந்துள்ளது. காரக்பர், குவஹாத்தி, காந்திநகர், மண்டி ஆகிய இடங்களில் உள்ள ஐஐடி-க்களிலும் திருச்சி என்ஐடி-யிலும் புதிதாக 5 உயர்திறன் கணினிகள் நிறுவப்பட்டுள்ளன.

· செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் உள்ளிட்டவற்றில் ஆய்வுகள் அதிகரிக்கப்பட்டு தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்படுகின்றன.

· ஜி-20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள இந்நிலையில், அறிவியல் 20 (S.20) என்ற செயல்பாட்டை ஒருங்கிணைக்கும் பொறுப்பை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் ஏற்றுள்ளது.

· குவாண்டம் கணினி தொடர்பான மையத்தை இந்தியாவும் பின்லாந்தும் இணைந்து நிறுவுகின்றன.

· புவியியல் தரவுகள் அடிப்படையில் பொதுமக்களுக்கு மேம்படுத்தப்பட்ட செய்திகள் வழங்கப்படுகின்றன.

· ஐநா-வின் 2-வது உலகளாவிய புவியியல் தகவல் தரவு மாநாடு ஐதராபாதில் அக்டோபர் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெற்றது.

· தொழில்நுட்பத்தை வணிக மயமாக்குதலுக்கான புதிய நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

· உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ட்ரோன்களை பறக்கவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டினார்.

· குறைந்த செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தி செய்வது, குளிர்சாதனங்களால் ஏற்படும் கார்பன் உமிழ்வைக் குறைப்பது உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களால் கண்டறியப்பட்டுள்ளன.

· பெங்களூருவைச் சேர்ந்த மகளிரால் நிர்வகிக்கப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று கிராமப்புறங்களில் இணையதள இணைப்பு தொடர்பான சிக்கல்களை தீர்க்கும் வகையில், புதிய கண்டுபிடிப்பு தொடர்பான தயாரிப்பு குறித்த முன்மொழிவை வழங்கியுள்ளது. இதனை 90-வது மன் கி பாத் உரையில் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டினார்.

· சுற்றுச்சூழல் மற்றும் எரிசக்தி தொடர்பாக  தொழில்நுட்பங்கள் அடிப்படையில் பல்வேறு திட்டங்களுக்கு அறிவியல் தொழில்நுட்பம்  அமைச்சகம் ஆதரவளித்து வருகிறது.

· அறிவியல் கல்வியில் பெண்களை ஊக்குவிக்கும் நோக்கில் விஞ்ஞான் ஜோதி என்ற முன்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் 30,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் இத்திட்டத்தின்கீழ் பயனடைந்துள்ளனர்.

· அடிப்படை மற்றும் இயற்கை அறிவியல் தொடர்பான படிப்புகளில் உயர்கல்வி பயிலும் 10,000க்கும்  மேற்பட்ட மாணவர்களுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. 

· டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் மூலம், பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் திட்டத்தை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் தமிழகத்தில் சுமார் 20 பாரம்பரிய நெல் வகைகளைக் கண்டறிந்து அவற்றை 10 விதை வங்கிகளை மூலம் பாதுகாக்கிறது. இதன் மூலம் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்துள்ளனர். 

· அறிவியல் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு பகிர்வு, பராமரிப்பு மற்றும் நெட்வொர்க் வழிகாட்டு நெறிமுறைகளும் அறிவியல் சமூகப் பொறுப்புணர்வு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளும் இந்த ஆண்டில் இறுதி செய்யப்பட்டுள்ளன.

· அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புக் கொள்கையும், தேசிய புவி தரவு கொள்கை இந்த ஆண்டில் இறுதி செய்யப்படும் நிலையில் உள்ளன.

------

SM/PLM/KPG/RJ



(Release ID: 1886894) Visitor Counter : 515