சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இந்திய மருத்துவ சங்கத்தின் மருத்துவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா ஆலோசனை

Posted On: 26 DEC 2022 6:23PM by PIB Chennai

கொவிட் தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா வலியுறுத்தியுள்ளார். இந்திய மருத்துவ சங்கத்தின் மருத்துவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் இன்று  திரு மன்சுக் மாண்டவியா ஆலோசனை மேற்கொண்டார். கொவிட் தொடர்பான நம்பகமான தகவல்களை மட்டும் பகிருமாறு அப்போது அவர் இந்திய மருத்துவ சங்கத்தின் மருத்துவர்கள் மற்றும் உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார்.  கொவிட் சிகிச்சையின் சுகாதார பணியாளர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய சேவைகளையும், பங்களிப்பையும் தலைவணங்கி பாராட்டுவதாக அவர் கூறினார்.

ஊகத்தின் அடிப்படையிலான தகவல்களை பகிர வேண்டாம் என்றும் துல்லியமான தகவல்களை மட்டும் மக்களுக்கு தெரிவிக்குமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டார். உலகளவில் கொவிட் பாதிப்பு அதிகரித்து வரும் இந்த சூழலில் வதந்திகளையும், தேவையற்ற அச்சங்களையும் தடுக்கும் வகையில் சரியான தகவல்கள் பகிரப்படுவது நமது பொறுப்பு என்று அவர் குறிப்பிட்டார்.  

நாளை நடைபெறவுள்ள கொவிட் சிகிச்சை தொடர்பான நாடு தழுவிய அளவிலான ஒத்திகை குறித்து கருத்து தெரிவித்த திரு மன்சுக் மாண்டவியா முந்தைய அனுபவங்களின் அடிப்படையில் கொவிட் பாதிப்பை எதிர்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவே அதன் ஒருபகுதியாகவே நாளை இந்த ஒத்திகை நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.  

இந்த சந்திப்பில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் காணொலி வாயிலாக பங்கேற்றனர். சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் திரு லாவ் அகர்வால் மற்றும் வல்லுநர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1886727

**************

SM/PLM/AG/KRS



(Release ID: 1886743) Visitor Counter : 133