பிரதமர் அலுவலகம்
ஸ்ரீ அரவிந்தரின் 150வது பிறந்தநாளை நினைவுகூரும் நிகழ்ச்சியில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Posted On:
13 DEC 2022 6:48PM by PIB Chennai
வணக்கம்!
ஸ்ரீ அரவிந்தரின் 150வது பிறந்தநாளை நினைவுகூரும் இந்த முக்கியமான நிகழ்ச்சியின்போது உங்கள் அனைவரையும் நான் மனமார வாழ்த்துகிறேன்.
இந்தப் புனிதமான நாளில் நாட்டுமக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களை நான் தெரிவித்துக்கொள்கிறேன். ஸ்ரீ அரவிந்தரின் 150வது பிறந்தநாள் ஒட்டுமொத்த தேசத்திற்கும் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தருணமாகும். நமது புதிய தலைமுறைக்கு அவரின் சிறப்புகளையும் சிந்தனைகளையும் எடுத்துச் செல்வதற்காக இந்த ஆண்டு முழுவதையும் கொண்டாட நாடு தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக சிறப்பு உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. கலாச்சார அமைச்சகத்தின் ஆதரவில் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் பகுதியாக, கணிசமான காலத்தை மகரிஷி செலவிட்ட புதுச்சேரியில் இன்று நாடு அவருக்கு மகத்தான அஞ்சலியை செலுத்துகிறது. ஸ்ரீ அரவிந்தருக்கான நினைவு நாணயமும் அஞ்சல்தளையும் கூட இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஸ்ரீ அரவிந்தரின் வாழ்க்கையிலிருந்தும்,போதனைகளிலிருந்தும் ஊக்கம் பெறுவதற்கான தேசத்தின் முயற்சிகள் நமது தீர்மானங்களுக்குப் புதிய சக்தியையும் பலத்தையும் அளிக்கும் என்று நான் நிச்சயமாக நம்பிகிறேன்.
நண்பர்களே,
வரலாற்றின் பல தருணங்களில் ஒரேமாதிரியாக பல நிகழ்வுகள் நடந்துள்ளன. ஆனால், அவையெல்லாம் எதேச்சையான ஒத்திசைவுகள் என்றே பொதுவாகக் கருதப்படுகின்றன. இத்தகைய ஒத்திசைவுகளுக்குப் பின்னால் “யோக சக்தி” இருப்பதாக நான் நம்புகிறேன். “யோக சக்தி” என்றால் கூட்டு சக்தி, நம் அனைவரையும் இணைக்கின்ற சக்தி. சிறந்த தலைவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்தது, சுதந்திரத்திற்கு வழிவகுத்தது மட்டுமின்றி, தேசத்தின் ஆன்மாவிற்கும் புத்துயிரூட்டியது. மகரிஷி அரவிந்தர், சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி ஆகியோரது வாழ்விலும் பல முக்கியமான சம்பவங்கள் ஒரே நேரத்தில் நிகழ்ந்திருக்கின்றன. இந்த நிகழ்வுகள் அவர்களின் வாழ்வில் மட்டும் மாற்றத்தை ஏற்படுத்தாமல், நாட்டு மக்களின் வாழ்விலும் மாற்றங்களை ஏற்படுத்தின. கடந்த 1893ம் ஆண்டு அரவிந்தர் இங்கிலாந்திலிருந்து இந்தியா திரும்பிய அதே காலகட்டத்தில், சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா சென்று உலக அளவில் நடைபெற்ற சமய மாநாட்டில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தமது உரையைப் பதிவு செய்தார். அதே காலகட்டத்தில், மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்கா சென்றார். அவரது இந்தப் பயணம் இந்தியாவின் மாற்றத்திற்கு வழி வகுத்தது.
சகோதர, சகோதரிகளே,
சுதந்திரத்தின் 75வது அமிர்தப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த வேளையில், அரவிந்தரின் 150- வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுவதையும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுவதையும் ஒருங்கிணைத்து பார்க்கவேண்டும். எண்ணங்களும், செயல்களும் ஒன்றிணையும்போது, சாத்தியமில்லாத இலக்குகளைக் கூட சாதிக்க முடியும். இதற்கு அமிர்தப் பெருவிழாவின் வெற்றியும், அனைவரின் முயற்சி என்ற தீர்மானமும் உதாரணமாகத் திகழ்கின்றன.
நண்பர்களே,
வங்கத்தில் பிறந்து குஜராத்தி, பெங்காலி, மராத்தி, இந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட பல மொழிகளை அறிந்த ஸ்ரீ அரவிந்தரின் வாழ்க்கை ‘ஒரே பாரதம்-உன்னத பாரதம்’ என்பதன் பிரதிபலிப்பாக உள்ளது. அவர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை குஜராத் மற்றும் புதுச்சேரியில் கழித்தார், எங்கு சென்றாலும் ஆழமான முத்திரையைப் பதித்தார். நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை நாம் அறிந்து, அதன் மூலம் வாழத் தொடங்கும் போது, நமது பன்முகத்தன்மை நம் வாழ்வின் இயற்கையான கொண்டாட்டமாக மாறுகிறது.
நண்பர்களே,
இந்தியா தமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தால் எந்தள அவுக்குப் பின்னிப்பிணைந்த நாடு என்பதை காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி, உலகுக்கு எடுத்துரைத்துள்ளது. அத்தகையை சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு தமக்கு கிடைத்துள்ளது. ஒரே பாரதம்-உன்னத பாரதம் என்ற கோட்பாட்டிற்கிணங்க மொழி, கலாச்சாரம் ஆகிய வேறுபாடுகளைக் களைந்து இளைஞர்கள் ஒன்றிணைந்திருப்பதைக் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழா காலத்தில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்துவது அதன் உன்னதத்தை வெளிப்படுத்துகிறது.
நண்பர்களே,
இந்தியாவின் மேம்பட்ட கலாச்சாரம் ஒரு விதை போன்றது. அழியாத விதையான இந்தியா, சூழ்நிலைகளின் காரணமாக தன்னிலிருந்து சிறிய பாகத்தை இழக்குமே தவிர, ஒருபோதும் அழியாது. மனித குல நாகரீகத்தின் கொள்கைகளை உள்ளடக்கிய இந்தியா, மனிதாபிமானத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் நாடு. ஸ்ரீஅரவிந்தர் காலத்தில் அழியா விதையாக இருந்த இந்தியா, சுதந்திரத்தின் அமிர்தப்பெருவிழா காலமான இப்போதும் அழியா விதையாக உள்ளது. எனவே, அரவிந்தரை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு நம் அனைவரின் முயற்சியால் வளர்ச்சியடைந்த நாடாக இந்தியாவை மாற்ற நாம் அனைவரும் தயாராவோம். மகரிஷி அரவிந்தரை மீண்டும் வணங்குகிறேன். எனது அடிமனதிலிருந்து உங்கள் அனைவருக்கும் நன்றி!
**************
AP/SMB/KRS
(Release ID: 1883198)
(Release ID: 1884781)
Visitor Counter : 200
Read this release in:
Kannada
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam