பிரதமர் அலுவலகம்

மகாராஷ்டிராவின் நாக்பூரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் துவக்க விழாவில் பிரதமரின் உரை

Posted On: 11 DEC 2022 3:26PM by PIB Chennai

மகாராஷ்டிர ஆளுநர் திரு பகத் சிங் அவர்களே, முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே அவர்களே, நாக்பூரின் சகோதர, சகோதரிகளே!

இந்தியா விடுதலையின் 75 ஆண்டு அமிர்த பெருவிழாவில் ரூ. 75 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைப் பெறும் மகாராஷ்டிர மாநில மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். மகாராஷ்டிராவில் பணியாற்றும் இரட்டை எஞ்சின் அரசின் வேகத்திற்கு இன்றைய நிகழ்வு ஓர் எடுத்துக்காட்டு. நாக்பூருக்கும், மும்பைக்கும் இடையேயான தூரத்தைக் குறைப்பதுடன், ‘சம்ருதி மகாமார்கம்' நவீன இணைப்புகளோடு மகாராஷ்டிராவில் 24 மாவட்டங்களை இணைக்கிறது.

நண்பர்களே,

இன்றைய தினம் மற்றொரு காரணத்திற்காகவும் சிறப்பு வாய்ந்தது. இன்று தொடங்கப்பட்டுள்ள திட்டங்களில் உள்கட்டமைப்பு வளர்ச்சியின் ஒட்டுமொத்த தொலைநோக்குப் பார்வை பிரதிபலிக்கப்படுகிறது. நாட்டிலேயே முதன்முறையாக உள்கட்டமைப்பிற்கு மனித வடிவம் தரும் அரசு, தற்போது செயல்படுகிறது. இத்தகைய மனித உணர்வு கொண்ட உள்கட்டமைப்பு அனைவரது வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. விடுதலையின் அமிர்த காலத்தில் வளர்ந்த இந்தியா என்ற மிகப்பெரிய உறுதிபாட்டோடு நாடு முன்னேறி வருகிறது. வளர்ந்த இந்தியாவை கட்டமைப்பதற்கு நாட்டின் கூட்டு வலிமை மிகவும் அவசியம். “நாட்டின் வளர்ச்சிக்கு, மாநிலங்களின் வளர்ச்சி” என்பது தான் வளர்ந்த இந்தியாவை கட்டமைப்பதற்கான தாரக மந்திரமாகும். வளர்ச்சிக்கு எல்லைகளை நிர்ணயிக்கும் போது வாய்ப்புகளும் குறைகின்றன. அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி' என்ற உணர்வை நாம் வலியுறுத்தி வருகிறோம். அதனால்தான் பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை நாம் ஊக்குவித்து வருகிறோம். சமுதாயத்தின் இந்த பிரிவினருக்கு தான் நமது அரசு முன்னுரிமை அளிக்கிறது.

நண்பர்களே,

மகாராஷ்டிர மக்களுக்கும், நாட்டு மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்க விரும்புகிறேன். குறுக்கு வழி அரசியல் சம்பந்தமானது அது; அரசியல் லாபத்திற்காக நாட்டின் வளங்களை களவாடுவது; வரி செலுத்துபவர்களின் கடின உழைப்பினால் பெற்ற பணத்தை சூறையாடுவது. இது போன்ற அரசியல் கட்சிகள் குறுக்கு வழிகளைப் பின்பற்றுவதோடு, இத்தகைய அரசியல் தலைவர்கள் தான் ஒவ்வொரு வரி செலுத்துபவரின் மிகப்பெரிய எதிரிகளாவர். இது போன்ற சுயநலமிக்க அரசியல் கட்சிகளையும், அரசியல் தலைவர்களையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வருமாறு இந்தியாவின் ஒவ்வொரு இளைஞரையும், வரி செலுத்துவோரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

மிக்க நன்றி!

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1882491

பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

**************

(Release ID: 1882491)

Sri/RB/RR



(Release ID: 1882663) Visitor Counter : 135