குடியரசுத் தலைவர் செயலகம்

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மனித உரிமைகள் தின கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு


மனித உரிமைகள் தொடர்பான உணர்திறன் மற்றும் கருணையை வளர்ப்பதே மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான முக்கிய அம்சம்: குடியரசுத் தலைவர் திருமதி திரெளபதி முர்மு

Posted On: 10 DEC 2022 4:45PM by PIB Chennai

புது தில்லியில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் இன்று (டிசம்பர் 10, 2022) ஏற்பாடு செய்யப்பட்ட மனித உரிமைகள் தினக் கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார்.

 

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம் (UDHR) 1948 ஆம் ஆண்டு இதே நாளில் ஏற்றுக்கொள்ளப்பட்டதை சுட்டிக்காட்டினார். இது முழு மனிதகுலத்திற்கும் ஒரு முக்கியமான நிகழ்வு என்று அவர் கூறினார். மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தின் (யுடிஹெச்ஆர்) ஆவண விளக்கங்கள் 500 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்றும் இது வரலாற்றில் மிகவும் அதிக அளவில் மொழிபெயர்க்கப்பட்ட ஆவணமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். உலகின் பல பகுதிகளில் தற்போதும் தொடர்ந்து நடைபெற்று வரும் மனித உரிமைகள் தொடர்பான மோசமான நிகழ்வுகளை நாம் கருத்தில் கொள்ளும்போது, ஐநா-வின் இந்த பிரகடனம் மொழிபெயர்க்கப்பட்டு அது புரிந்து கொள்ளப்பட்டதா என்று ஆச்சரியப்படும் நிலை உள்ளது என்று அவர் கூறினார். மனித உரிமைகள் என்பது உலகம் முழுவதுமானதுக்கான செயல்திட்டப் பணியாக உள்ளது என்பதுதான் உண்மை என்று அவர் குறிப்பிட்டார்.

 

இந்தியாவில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் மனித உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வைப் ஏற்படுத்துவதற்கான சிறந்த முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்பதில் நாம் திருப்தி அடையலாம் என்று குடியரசுத் தலைவர் கூறினார். இப்போது தனது 30 வது ஆண்டில், அடி எடுத்து வைத்துள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளது என்று அவர் பாராட்டுத் தெரிவித்தார். இந்த அமைப்பு மனித உரிமைகளுக்கான பல்வேறு உலகளாவிய மன்றங்களில் பங்கேற்கிறது என்றும் இந்தியாவின் பணி சர்வதேச அளவில் பாராட்டப்படுவது பெருமை அளிப்பதாகவும் குடியரசுத் தலைவர் கூறினார்.

 

மனித உரிமைகள் தொடர்பான உணர்திறன் மற்றும் கருணையை வளர்ப்பதுதான் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான முக்கியத் திறவுகோல் என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார்.  இது அடிப்படையில் கற்பனைத் திறன் தொடர்பான ஒரு நடவடிக்கையாகும் என்று கூறிய அவர், மனிதர்களை விட குறைவாக நடத்தப்படுபவர்களின் இடத்தில் நம்மை கற்பனை செய்து பார்க்க முடிந்தால், அது நம் கண்களைத் திறந்து, மனித உரிமைகள் தொடர்பாக தேவையானதைச் செய்ய நம்மைத் தூண்டும் என்று கூறினார். "பிறர் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அவ்வாறே நீங்களும் அவர்களை நடத்துங்கள்" என்ற முக்கியமான 'தங்க விதி' ஒன்று உள்ளது என அவர் தெரிவித்தார். இந்த வாசகம் மனித உரிமைகள் தொடர்பான கருத்தை அழகாக தொகுத்து வழங்குகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

 

மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம் வெளியிடப்பட்டதன் 75-வது ஆண்டு கொண்டாட்டங்கள் உலக அளவில் இன்று தொடங்கியுள்ளதை குடியரசுத் தலைவர் சுட்டிக்காட்டினார். மேலும் ஐக்கிய நாடுகள் சபை 2022-ம் ஆண்டின் கருப்பொருளாக 'அனைவருக்கும் கண்ணியம், சுதந்திரம் மற்றும் நீதி' என்பதைத் தேர்ந்தெடுத்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். கடந்த சில ஆண்டுகளாக, அசாதாரண வானிலையால் உலகம் அதிக எண்ணிக்கையிலான இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். பருவநிலை மாற்றம் என்ற ஆபத்து நமது கதவுகளைத் தட்டுவதாகவும் சுற்றுச்சூழல் சீரழிவுக்கு ஏழை நாடுகளில் உள்ள மக்கள் அதிக விலை கொடுக்கப் போகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். நீதியின் சுற்றுச்சூழல் பரிமாணத்தை நாம் இப்போது கருத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

 

பருவநிலை மாற்றத்தின் சவால் மிகப் பெரியது என்று கூறிய குடியரசுத் தலைவர் அது உரிமைகளை மறுவரையறை செய்ய நம்மைத் தூண்டுகிறது என்று கூறினார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம், கங்கை மற்றும் யமுனை நதிகளுக்கு மனிதர்களைப் போலவே சட்டப்பூர்வ உரிமைகள் உள்ளன என்று கூறியதை அவர் சுட்டிக்காட்டினார். இந்தியா எண்ணற்ற புனித ஏரிகள், ஆறுகள் மற்றும் மலைகள் கொண்ட புனிதமான புவியியல் நிலப்பரப்பாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்த நிலப்பரப்புகளுக்கு, தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் வளமான பல்லுயிர்த் தன்மையைச் சேர்க்கிறது என்று அவர் கூறினார். பழங்காலத்தில், நமது ஞானிகளும், அறிஞர்களும், நம்முடன் அவை அனைத்தையும் சேர்த்து, உலகளாவிய முழுமைக்கான அம்சத்தின் ஒரு பகுதியாகவே பார்த்ததாக குடியரசுத் தலைவர் தெரிவித்தார். எனவே, மனித உரிமைகள் என்ற கருத்தாக்கம், ஒவ்வொரு மனிதனையும் நம்மிடமிருந்து வேறுபடுத்துவது அல்ல எனக் கருதுவதைப் போலவே, முழு உலகத்தையும் அதன் வாழ்விடத்தையும் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்பதும் அடங்கும் என அவர் குறிப்பிட்டார்.

 

“நம்மைச் சுற்றியுள்ள விலங்குகள் மற்றும் மரங்கள் பேச முடிந்தால் நமக்கு என்ன சொல்லும்? மனித வரலாற்றைப் பற்றி நமது நதிகள் என்ன சொல்லும்? மனித உரிமைகள் என்ற தலைப்பைப் பற்றி கால்நடைகள் என்ன சொல்லும்?” என்று தாம் ஆச்சரியத்துடன் எண்ணுவதாக தமது கருத்துகளைக் குடியரசுத் தலைவர் பகிர்ந்து கொண்டார். நீண்ட காலமாக அவைகளின் உரிமைகளை மறுத்து விட்டோம் என்றும் அதன் விளைவுகள் இப்போது நம் முன் வந்துவிட்டன என்றும் அவர் தெரிவித்தார். இயற்கையை கண்ணியத்துடன் நடத்த நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இது தார்மீகக் கடமை மட்டுமல்ல என்றும் அது நம் வாழ்வுக்கும் அவசியமானது எனவும் குடியரசுத் தலைவர் திருமதி திரெளபதி முர்மு கூறினார்.

******

SRI / PLM / DL



(Release ID: 1882333) Visitor Counter : 627