விவசாயத்துறை அமைச்சகம்

தோட்டக்கலை குழு மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் விவசாயிகள் பயன் அடைவார்கள்: மத்திய வேளாண் அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர்

Posted On: 30 NOV 2022 4:23PM by PIB Chennai

மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் தோட்டக்கலை குழு மேம்பாட்டுத் திட்டத்தை (சிடிபி) தயாரித்துள்ளது. இந்த திட்டத்தை முறையாக அமல்படுத்துவது தொடர்பான கூட்டம் வேளாண் அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர் தலைமையில் நடைபெற்றது. இணையமைச்சர் திரு.கைலாஷ் சௌத்ரி இக்கூட்டத்தில் காணொலி வாயிலாக பங்கேற்றார். கூட்டத்தில் பேசிய அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர், நாட்டில் வேளாண் துறையை மேம்படுத்தி, விளைப்பொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதன் மூலம் விவசாயிகளின் வருவாயை பெருக்க வேண்டும் என்பதே அரசின் முக்கிய நோக்கம் என்று அதிகாரிகளிடம் தெரிவித்தார். எனவே, எந்தவொரு திட்டத்தின் மைய நோக்கமும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டே இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

தோட்டக்கலை குழு மேம்பாட்டுத் திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த தோட்டக்கலை துறையும் மேம்படும் என்று கூறினார். இத்திட்டம் விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 55 குழுக்கள் அடங்கிய பட்டியலில் அருணாசல பிரதேசம், அசாம், மேற்கு வங்கம், மணிப்பூர், மிசோரம், ஜார்க்கண்ட், உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களும், அவற்றின் முக்கிய பயிர்களை மையமாகக் கொண்டு சேர்க்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய வேளாண்துறை இணையமைச்சர் திரு.கைலாஷ் சௌத்ரி, இத்திட்டத்தின்கீழ் உள்கட்டமைப்பு தொடர்பான புவிகுறியீட்டு அம்சம் சேர்க்கப்பட வேண்டியது அவசியம் என்றும், இது குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் என்றும் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தின்போது, குழுக்கள் வாரியான 12 கையேடுகளை திரு.நரேந்திர சிங் தோமர் வெளியிட்டார். இத்திட்டத்தின் வாய்ப்புகள் மற்றும் இதற்காக நிதி உதவி கோரும் நடைமுறைகள் போன்ற விவரங்கள் இவற்றில் அடங்கி உள்ளன. முக்கியத்துவம் செலுத்த வேண்டிய பயிர்கள், மதிப்புக் கூட்டல் சாத்தியங்கள் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் போன்றவை தொடர்பான விவரங்களும் இக்கையேட்டில் அடங்கியுள்ளன.

மத்திய வேளாண்துறை செயலாளர் திரு.மனோஜ் அஹூஜா, இணைச்செயலாளர் திரு.பிரிய ரஞ்சன் மற்றும் தேசிய தோட்டக்கலை வாரியத்தின் அதிகாரிகள் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

                                                                                                         **************

AP/PLM/KG/KRS(Release ID: 1880042) Visitor Counter : 187