தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

ஜெய் பீம்’ என்பது வெறும் வார்த்தையல்ல: அது ஒரு உணர்வு: இயக்குநர் தா செ ஞானவேல்

விரைவில் ‘ஜெய் பீம்’ வரிசைப் படங்கள்: இணை தயாரிப்பாளர் கே ராஜசேகர்

Posted On: 28 NOV 2022 3:13PM by PIB Chennai

வழக்கத்திற்கு மாறாக 53-வது இந்திய சர்வதேச திரைப்படவிழாவின் பிரதிநிதிகள் தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளும் தனித்துவமான வாய்ப்பை வழங்கியுள்ளது. இதை நம்புவதற்கு சிரமமாக உள்ளதா? ஆம். நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும், சட்டச்செயலாக்கம் நீதி பரிபாலனத்தில் உள்ள குறைபாடுகளை துணிச்சலான முறைகளில் படமாக சித்தரித்த தா செ ஞானவேலின், ஜெய் பீம்’ என்பது வெறும் வார்த்தையல்ல அது ஒரு உணர்வு என்ற கூற்றை உணர்வதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

திரைப்படவிழாவில் பத்திரிகை தகவல் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த  டேபிள் டாக்ஸ் அமர்வில் உரையாற்றிய ஜெய் பீம் படத்தின் இயக்குநர் ஞானவேல், ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களுக்காக டாக்டர் பி ஆர் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட சொல் அது என்று தெரிவித்தார்.

ஜெய் பீம்’ படத்திற்கு அனைத்து தரப்பினரிடமிருந்தும் கிடைத்த கற்பனைக்கு எட்டாத வரவேற்பால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ள ஞானவேல், உலகம் முழுவதும் இருக்கக்  கூடிய பிரச்சினை என்பதால், அது அனைவரையும் இணைத்துள்ளது என்றார். ஜெய் பீம் படத்திற்கு பிறகு சாதிப் பாகுபாடு, சட்ட அமலாக்கம் மற்றும் நீதிபரிபாலனத்தில் உள்ள குறைகள் பற்றி பல நூற்றுக்கணக்கான கதைகளை தாம் கேட்டதாகவும், அநீதிக்கு எதிராக போராட அரசியல் சாசனம் தான் உண்மையான ஆயுதம் என்றும் அதையே  தான் படத்தில் சித்தரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ராஜாக்கண்ணு, செங்கேணி என்ற பழங்குடியின தம்பதிகள், உயர் சாதியினரால் ஏற்படுத்தப்படும் துன்புறுத்தல்களுக்கு ஆளாகியதை படம் எடுத்துக் காட்டுகிறது. செய்யாத குற்றத்திற்காக ராஜாக்கண்ணு, கைது செய்யப்படுவதிலிருந்து திரைப்படம் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளை பிரதிபலிக்கிறது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடும் ஒரு பாதுகாவலர் மூலம் நீதி  பெற்றுத்தரப்படுவதாக கூறிய இயக்குநர், கல்வி ஒன்றே மக்களை அதிகாரப்படுத்தும் கருவி என்ற அம்பேத்கரின் குரலை அடிப்படையாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். உண்மையான வாழ்க்கையில், ஹீரோக்களுக்கு இடமில்லை. கல்வி மூலம் ஒருவர் தன்னைத் தானே ஹீரோவாக உயர்த்திக் கொள்ளவேண்டும். ஒடுக்கப்பட்டவர்கள், அதிகாரம் பெறும்போது தான், என்னுடைய படம் தனது உண்மையான இலக்கை அடையும் என்று அவர் கூறினார்.

இத்திரைப்படம், நீதிபதி கே சந்துரு வழக்கறிஞராக இருந்த போது அவரது வாழ்க்கையில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை  அடிப்படையாகக் கொண்டு  எடுக்கப்பட்டது. சந்துருவின் பாத்திரத்தில் நடிகர் சூர்யா அற்புதமாக நடித்துள்ளார்.

படத்தின் இணை தயாரிப்பாளர் கே ராஜசேகர், இந்நிகழ்ச்சியில் பேசும்  போது, இயக்குநர் ஞானவேல், ஒரு பத்திரிகையாளராகவும், எழுத்தாளராகவும் தனது வாழ்க்கையைத் தொடங்கினார் என்றும் பல ஆண்டுகளாக அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்காக  குரல் எழுப்பி வருகிறார் என்றும் கூறினார். நடிகர் சூர்யா இந்தக் கதையைக் கேட்டதும் உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டதை  அவர் தெரிவித்தார்.

திரைப்படத்தின் பழங்குடியின தம்பதிகளான ராஜாக்கண்ணு, செங்கேணி பாத்திரத்தில் நடித்த மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் பழங்குடியின இருளர் சமுதாயத்தினரிடையே 45 நாட்கள் தங்கியிருந்து அவர்களின் பழக்க வழக்கங்களை கற்றுக் கொண்டனர்.

`ஜெய் பீம்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பையடுத்து அதன் வரிசைப் படங்கள் விரைவில் தயாராகும் என்றும் அதற்கான பணிகள் தொடங்கிவிட்டன என்றும் ராஜசேகர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை லிஜோமோல் ஜோஸ், தாம்  பெரும்பாலும் மலையாளப் படங்களில் நடித்து வருவதாகவும்  தமிழ் பேசும் இருளர் பாத்திரத்தில் தாம் நடித்தது உண்மையிலேயே சவாலாக இருந்தது என்றும் கூறினார். பழங்குடியினரிடையே தங்கியிருந்தது அவர்களது பழக்க வழக்கங்கள், பேசும் முறை ஆகியவற்றை  தெரிந்து கொள்ள உதவியது என்றும் அவர் தெரிவித்தார்.

ராஜாக்கண்ணு வேடத்தில் மணிகண்டன் இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு தனக்கு எதிர்பாராத வகையில் கிடைத்ததாக கூறினார். இந்தப் படத்தில் நடித்தது பற்றிய அனுபவங்களையும் இந்நிகழ்ச்சியில் அவர் விளக்கினார்.

`ஜெய் பீம்’ ஜெய் பீம் திரைப்படம் இந்திய பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது.

தமிழ் பட எழுத்தாளரான இயக்குநர் ஞானவேல், 2017-ஆம் ஆண்டு இயக்கிய கூட்டத்தில் ஒருத்தன் அவரது முதல் படமாகும்.  நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. இதன் இணை தயாரிப்பாளர்கள் ராஜசேகர் பாண்டியன்,  ஜோதிகா, கார்த்தி ஆவர்.

----- 

(Release ID: 1879532)

AP/PKV/KPG/KRS



(Release ID: 1879575) Visitor Counter : 242