விண்வெளித்துறை
azadi ka amrit mahotsav

இந்திய விண்வெளித் துறை 61 நாடுகளுடன் இணைந்து பணியாற்றுகிறது: பிஎஸ்எல்வி-சி54 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டபின் இஸ்ரோ தலைவர் திரு சோம்நாத் தகவல்

Posted On: 26 NOV 2022 5:47PM by PIB Chennai

பி எஸ் எல் வி -சி 54 ராக்கெட் மூலம் இந்தியா பூட்டான் கூட்டு ஒத்துழைப்பில் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள் உள்பட 9 செயற்கைக் கோள்கள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சத்தீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து இன்று (26.11.2022) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன.

இதைத் தொடர்ந்து இஸ்ரோ தலைவர் திரு சோம்நாத் கூறுகையில்,
செயற்கைகோள்கள் வெற்றிகரமாக அவற்றின் சுற்று வட்டப் பாதைகளில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன என்றார். இதற்காக  இஸ்ரோ குழுவினருக்கு அவர் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ள பூடான் செயற்கைகோள் இரு நாடுகளுக்கு இடையேயான அறிவியல் ஆராய்ச்சி பரிமாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று அவர் கூறினார்.

 சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் ஒன் விரைவில் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாகவும், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருவதாகவும், இன்னும் 24 மாதத்திற்குள் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து செயல்பாட்டுக்கு வரும்  என்றும் அவர் கூறினார்.  மேலும், நேபாளம், பூட்டான், இலங்கை உட்பட 61 நாடுகளுடன் இந்திய விண்வெளித்துறை இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

இதனிடையே காணொலி காட்சி மூலம் வெளியுறவு அமைச்சர் திரு ஜெய்சங்கர் பேசுகையில், ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததுடன். இந்தியா, பூடான் நாடுகளின் இரு தரப்பு ஆராய்ச்சி புதிய பரிமாணத்தை பெற்று வருகிறது என்றார். இரு தரப்பு ஆராய்ச்சி ஒத்துழைப்பு இதன்மூலம் புதிய உச்சத்தை அடைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 2019 ஆம் ஆண்டு பூடான்  பயணத்தின் போது இஸ்ரோ உதவியுடன் செயற்கைகோள் மையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார் என்றும், இந்த செயற்கைகோள் மையம் பூடானின் தொலைத்தொடர்பு, பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் முக்கியப் பங்காற்றி வருகிறது என்றும் திரு ஜெய்சங்கர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பூடான் தகவல் தொடர்பு அமைச்சர் திரு. கர்மா டன்னேன் வாங்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

***************


(Release ID: 1879183) Visitor Counter : 238