தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

இயக்குநர் சலீல் குல்கர்னியின் ‘ஏக்டா காய் ஸாலா’ கதைகள் மூலம் குழந்தைகளுக்கு தகவல்களை பரிமாறும் பிரத்யேக அணுகுமுறையை விளக்குகிறது

Posted On: 26 NOV 2022 3:06PM by PIB Chennai

முன்னொரு காலத்தில் என்று பெயரிடப்பட்ட ஏக்டா காய் ஸாலா என்ற மராத்தி மொழித்திரைப்படம் தூங்கும் நேரத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்வதை மையமாகக் கொண்டு  தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் எழுத்து, இயக்கம் , இசை என முப்பரிமாணத்தில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் சலீல் குல்கர்னி. இந்தப் படம் மிக அழகான கதையை உள்ளடக்கியது என்ற போதிலும் முழுக்க முழுக்க குழந்தைகளுக்கானது  அல்ல.

இது, 53-வது இந்திய சர்வதேச திரைப்படவிழாவில் இந்திய திரைப்படங்கள் வரிசையில் நேற்று திரையிடப்பட்டது.  ஒருவர் நடத்தும் பிரத்யேக பள்ளியை மையக் கருவாகக் கொண்ட இந்தத் திரைப்படத்தில் எண்ணங்கள் எப்படி இருந்தாலும், அதனை கதையின் மூலமாக சொல்லிவிடமுடியும் என்று நம்பியிருக்கிறார் இயக்குநர். இங்கு கற்பிக்கப்படவேண்டிய அனைத்துப் பாடங்களும் கதை வாயிலாகவே போதிக்கப்படுகின்றன. இங்கு பள்ளி நிர்வாகியின் மகனும் படிக்கிறான். நிர்வாகி தன் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் கடினமான சூழ்நிலை சார்ந்த சவால்களையும், தன் மகனுக்கு கதை மூலமாகவே கற்பிக்க முயற்சி மேற்கொள்கிறார்.

சர்வதேச திரைப்படவிழாவில் பத்திரிகை தகவல் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த ஐஎஃப்எஃப்ஐ டேபிள் டாக்ஸ் நிகழ்ச்சியில், பேசிய இயக்குநர் சுஷில் குல்கர்னி கதைகளை சொல்லும் போது சிறார்கள் மற்றும் இளைஞர்கள் அதனை எவ்வாறு ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டதாகக் கூறினார். சூழ்நிலைகளை சிறுவர்களுக்கு புரியவைப்பது சற்று கடினமாக இருந்தபோதிலும், இளைஞர்கள் இதனை வேறு விதமாக கையாள முன்வந்ததாகத் தெரிவித்தார்.  நற்செய்தியாக இருந்தாலும் சரி, தீய செய்தியாக இருந்தாலும் சரி அதனை எப்படி குழந்தைகளிடத்தில் கொண்டு செல்வது என்பதில் பிரத்யேக அணுகுமுறை குறித்து விளக்குகிறது இத்திரைப்படம்.  படத்தின் முடிவில் ரசிகர்களை கண்ணீரில் ஆழ்த்திவிடுகிறார் இயக்குநர். இந்தப் படத்தில் தனியாக வில்லன்கள் இல்லை, ஏனெனில் சூழ்நிலைகளே இங்கு வில்லனாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.

கதையின் முக்கிய கதாபாத்திரமாகத் திகழும் சிந்தன் என்ற அந்த கதாபாத்திரத்திற்கு மொத்தம் 1,700 குழந்தைகளிலிருந்து அர்ஜூன் குர்னா பட்டர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவருடைய தந்தையாகவே வாழ்ந்திருக்கிறார் சுமித் ராகவன்.  தமது கதாபாத்திரம் குறித்து, பேசிய சுமித் ராகவன், இயக்குநர் இந்த கதையை கூறிய உடனேயே நடிக்க சம்மதம் தெரிவித்ததாகவும் நல்ல கதைகள் கிடைக்கும் போது உடனே ஒப்புக்கொள்வதுதான் நல்ல நடிகருக்கு அழகு என்று கூறியுள்ளார். குழந்தைகளின்  நாடித்துடிப்பை நன்கு அறிந்தவர் சலீல், ஏனெனில் நீண்டகாலமாக அவர் பணியாற்றி வருகிறார் என புகழாரம்  சூட்டியுள்ளார்.

இந்தக் கதையின் கரு, பொதுவானது என்பதால் யார் வேண்டுமானாலும் எளிதில் கதையோடு தங்களை சம்பந்தப்படுத்தி பார்க்க முடிகிறது. இதன் காரணமாகவே இந்தத் திரைப்படம் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் சிறந்த திரைப்படமாக ஏற்கப்பட்டிருப்பதாகவும் அந்த சுமித் ராகவன் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1879071

------



(Release ID: 1879116) Visitor Counter : 159