இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

உடல் தகுதி இந்தியா சுதந்திர மோட்டார் பைக் பயணம் ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் வெற்றிகரமாக நிறைவடைந்தது

Posted On: 25 NOV 2022 11:09AM by PIB Chennai

சுதந்திர மோட்டார் பைக்  பயணத்தின் நிறைவு விழா புதுதில்லி ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் வியாழன்று நிறைவடைந்தது. தனித்துவமான இந்தப் பயணத்திற்கு அகில இந்திய மோட்டார் பைக் பயண அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.  மத்திய அரசின் சிறப்புத் திட்டமான உடல்தகுதி இந்தியா இதற்கு உதவி செய்தது.

இந்த நிறைவு விழாவில், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் அமைச்சக செயலாளர்   (விளையாட்டுக்கள்) திருமதி சுஜாதா சதுர்வேதி, இந்திய விளையாட்டுக்கள் ஆணையத்தின் தலைமை இயக்குநர் திரு சந்தீப் பிரதான் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

75 நாட்கள் நடைபெற்ற இந்தப் பயணத்தில் 11 பெண்கள் உட்பட  75 பேர் இடம் பெற்று கன்னியாகுமரி முதல் வாரணாசி வரையும், காந்திநகர் முதல் ஷில்லாங் வரையும் 34 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 75 பெருநகரங்கள் / சிறு நகரங்கள் வழியாக 18,000 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்துள்ளனர்.

கெவாடியாவின் ஒற்றுமை சிலை, சிம்லாவின் வைஸ்ராய் மாளிகை, குவஹாத்தியின் காமாக்கியா கோவில், மதுரையின் மீனாட்சி ஆலயம் போன்ற முக்கியமான இடங்களை பயணக்குழுவினர் பார்வையிட்டனர். இந்தப் பயணத்தின் போது அந்தந்த மாநில முதலமைச்சர்களும், ஆளுநர்களும், நாடாளுமன்ற  உறுப்பினர்களும், மாவட்ட ஆட்சியர்களும்  பயணக்குழுவினரை வரவேற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த மிகவும் மூத்த பெண் பயணியான  59 வயது  நீட்டா கண்டேகர் இந்தப் பயணம் பற்றி கூறுகையில், “எனது உடன் பயணித்தவர்களின் வழிகாட்டுதல் பிரமிக்கத்தக்கது. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்கள் மிகவும் வித்தியாசமாக இருந்தன. சேறும் சகதியுமான சாலைகளில்  பலமுறை நாங்கள் விழுந்து எழுந்திருந்தோம்.  இந்தப் பயணத்தில் சகோதரத்துவத்தை நாங்கள் கற்றுக் கொண்டோம்” என்றார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1878741

**************

AP/SMB/KPG/KRS



(Release ID: 1878785) Visitor Counter : 93