தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

கவிதைக்கும், மெட்டுக்கும் இடையே இணைப்பு இருக்க வேண்டும்: பிரசூன் ஜோஷி

Posted On: 22 NOV 2022 11:45PM by PIB Chennai

கவிஞரின் கவிதை வரிகளுக்கும், இசையமைப்பாளரின் மெட்டுக்கும் இடையே இணைப்பு இருந்தால் தான் சிறந்த பாடலாக அது அமையும் என்று கவிஞர் பிரசூன் ஜோஷி கூறியுள்ளார்.  கோவாவில் நடைபெற்று வரும் 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் நடைபெற்ற கலந்துரையாடல் அமர்வில் உரையாற்றிய அவர், கவிஞருக்கும், இசையமைப்பாளருக்கும் இடையிலான உறவு ஒத்திசைவாக இருப்பதுடன், ஒன்றுக்கு ஒன்று பாராட்டும் படியாகவும் இருக்க வேண்டும் என்று கூறினார்.

 கவிதை  புனையும் கலை என்பது குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய புகழ் பெற்ற கவிஞரும், எழுத்தாளருமான பிரசூன் ஜோஷி,  உண்மைத்தன்மைஎன்பது ஒரு கவிஞரின்  மிக முக்கியமான பண்புகளில் ஒன்றாகும் என்று கூறினார். “உன்னைப்போல யாரும் இல்லை, நீ தனித்துவமான இணையற்றவன். ஒரு கவிஞன் எப்போதும் தனது சொந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி, தனது சொந்த நடையில் எழுத வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

என்னுடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் எனது பூமி மற்றும் கலாச்சாரத்துக்கு சொந்தமானதாகும். நமது வளர்ப்பும், கலாச்சாரமும் நமது எழுத்துக்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். நான் என்னுடைய வார்த்தைகளையும், உவமை மற்றும் உருவகங்களையும், எனது சொந்த மொழி மற்றும் கலாச்சாரத்தில் இருந்தே கடன் வாங்குகிறேன். நமது சொந்த மொழியில் வார்த்தைகளுக்கு எப்போதும் பஞ்சமிருக்காது என்று அவர் தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு குறித்து பேசிய அவர், செயற்கை நுண்ணறிவு எந்தளவுக்கு நவீனமாக இருந்தாலும், அது படைப்பாற்றலுக்கும், மனிதனின் அறிவுக்கூர்மைக்கும் மாற்றாக இருக்க முடியாது என்றார்.

அண்மைக்கால ஆபாசக்கவிதைகள் குறித்து பிரசூன் ஜோஷி,  சந்தையில் தேவையிருக்காவிட்டால் எதையும் திணிக்க வேண்டிய அவசியம் இருக்காது. இவ்வித படைப்பாளர்களைப்போல வாசகர்களுக்கும், ரசிகர்களுக்கும் இதில் சமமான  பொறுப்பு உள்ளது என்று கூறினார்.

மூத்த பத்திரிகையாளர் ஆனந்த் விஜய் இந்த கலந்துரையாடலை நெறியாளுகை செய்தார்.

**************
 

(Release ID: 1878153)

SM/PKV/AG/RR



(Release ID: 1878230) Visitor Counter : 156