பிரதமர் அலுவலகம்

வேலைவாய்ப்பு விழாவின் மூலம் புதிய பணியாளர் சேர்ப்புக்கு 71,000 நியமன கடிதங்களை பிரதமர் விநியோகித்தார்

புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கு இணையதளத்தில் புத்தாக்க பயிற்சி வழங்க கர்மயோகி ப்ராரம்ப் இணைய தளத்தை தொடங்கிவைத்தார்
“வேலைவாய்ப்பு விழா என்பது இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்து தேச வளர்ச்சியின் கிரியா ஊக்கியாக அவர்களை மாற்றும் முயற்சியாகும்”
“அரசுப்பணிகள் வழங்குவதற்கு இயக்கமுறையில் அரசு பணியாற்றுகிறது”
“தேச கட்டமைப்புக்காக இளைஞர்களின் திறமையையும், சக்தியையும் பயன்படுத்துவதற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளிக்கிறது”
“திறன் மேம்பாட்டுக்கு ‘கர்மயோகி பாரத்’ தொழில்நுட்ப அமைப்பு மாபெரும் உதவியாக இருக்கும்”
“இந்தியாவின் வளர்ச்சிப் பாதை மீது உலகம் முழுவதும் உள்ள நிபுணர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்”
“அரசு மற்றும் தனியார் துறையில் புதிய வேலைகளுக்கான சாத்தியம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் இளைஞர்களின் சொந்த நகரங்களிலும், கிராமங்களிலும் இத்தகைய வாய்ப்புகள் உருவாகி வருவது முக்கியமானது”
“இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் பாதையில் நாம் நண்பர்களாகவும், சக பயணிகளாகவும் இருக்கிறோம்”

Posted On: 22 NOV 2022 11:42AM by PIB Chennai

வேலைவாய்ப்பு விழாவின் மூலம் புதிய பணியாளர் சேர்ப்புக்கு 71,000 நியமன கடிதங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் விநியோகித்தார்.

புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கு இணையதளத்தில் புத்தாக்க பயிற்சி வழங்க கர்மயோகி ப்ராரம்ப் இணைய தளத்தை தொடங்கிவைத்தார். இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் தேச வளர்ச்சியில் நேரடி பங்கேற்பிற்கு அர்த்தம் உள்ள வாய்ப்புகளை வழங்குவதிலும், வேலை வாய்ப்பை உருவாக்குவதிலும் இந்த விழா கிரியா ஊக்கியாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த அக்டோபர் தொடக்கத்தில் வேலை வாய்ப்பு விழாவின் மூலம் புதிதாக நியமனம் செய்யப்பட்டோருக்கு 75,000 நியமன கடிதங்கள் வழங்கப்பட்டன.

இந்த விழாவின் போது திரண்டிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர், இந்தியாவின் 45-க்கும் அதிகமான நகரங்களில் 71,000-க்கும் அதிகமான இளைஞர்களுக்கு நியமன கடிதங்கள் வழங்கப்படுகின்றன என்றும் இதனால் புதிய சகாப்தத்தில் ஏராளமான குடும்பங்கள் மகிழ்ச்சியடையும் என்றும்  கூறினார். தந்தேராஸ் நாளில்  இளைஞர்களுக்கு 75,000  நியமன கடிதங்களை மத்திய அரசு வழங்கியதை அவர் நினைவுகூர்ந்தார். “நாட்டின் இளைஞர்களுக்கு  வேலைவாய்ப்புகள் வழங்க இயக்கமுறையில் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது என்பதற்கு இன்றைய வேலைவாய்ப்பு விழா எடுத்துக்காட்டாகும்” என்று பிரதமர் கூறினார்.

ஒரு மாதத்திற்கு முன் தொடங்கிய வேலைவாய்ப்பு விழா முன் முயற்சியை நினைவுகூர்ந்த பிரதமர், பல மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் அவ்வப்போது இத்தகைய வேலைவாய்ப்பு விழாக்களுக்கு ஏற்பாடு செய்ததாக குறிப்பிட்டார். மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப்பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், லடாக், அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவுகள், டாமன் டியூ, தாத்ரா நாகர்ஹவேலி, சண்டிகர் ஆகியவற்றின் அரசுகளால் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டிருப்பது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். ஒரு சில நாட்களில் கோவாவும், திரிபுராவும் கூட இதே போன்ற வேலைவாய்ப்பு விழாக்களுக்கு ஏற்பாடு செய்யவிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார். பிரமாண்டமான இந்த முயற்சியில் இரட்டை என்ஜின் அரசுகளின் செயல்பாட்டை பாராட்டிய பிரதமர், இத்தகைய வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் இந்திய இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

 நாட்டின் மிகப்பெரிய பலமாக இளைஞர்கள் இருக்கிறார்கள் என்று பிரதமர் கூறினார். தேச கட்டமைப்புக்காக இளைஞர்களின் திறமையையும், சக்தியையும் பயன்படுத்துவதற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளிக்கிறது. பணிநியமனம் பெற்ற அரசு ஊழியர்களை அவர் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். மிகச்சிறப்பான காலகட்டத்தில் அதாவது அமிர்தகாலத்தில் இந்த முக்கியமான பொறுப்பை அவர்கள் ஏற்கிறார்கள் என்பதை பிரதமர் நினைவுபடுத்தினார். அமிர்தகாலத்தில் வளர்ச்சியடைந்த நாடாக இந்தியாவை மாற்றுவதில் அவர்களின் பங்கினை அவர் எடுத்துரைத்தார். மத்திய அரசின் பிரதிநிதிகளாக இருக்கும் அவர்கள், தங்களின் பங்கினையும், பணிகளையும் விரிவாக புரிந்துகொள்ள வேண்டும் என்றும் தங்களின் கடமைகளை செய்யும் போது திறன் கட்டமைப்பில் நிலையான கவனத்தை செலுத்த வேண்டும் என்றும்  அவர் கேட்டுக்கொண்டார்.

 இன்று தொடங்கப்பட்ட கர்மயோகி பாரத் தொழில்நுட்ப  அமைப்பு பற்றி குறிப்பிட்ட பிரதமர், அரசு அலுவலர்களுக்கு ஏராளமான இணையவழி வகுப்புகள் உள்ளதாக தெரிவித்தார். அரசு ஊழியர்களுக்காக கர்மயோகி ப்ராரம்ப் எனப்படும் தனி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய அவர், இதனை புதிதாக நியமனம் பெற்றவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். இதன் பயன்களை எடுத்துரைத்த பிரதமர், இவர்களின் திறன்மேம்பாட்டிற்கு இது மிகப்பெரும் ஆதாரமாக இருக்கும் என்றும், வரும் காலங்களில் இவர்களுக்கு பயன்படும் என்றும் கூறினார்.

பெருந்தொற்று மற்றும் போர் காரணமாக உலகளவில் இளைஞர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளை பிரதமர்  எடுத்துக்காட்டினார். இந்த சிக்கலான தருணத்திலும் கூட,  இந்தியாவின் வளர்ச்சிப் பாதை மீது உலகம் முழுவதும் உள்ள நிபுணர்கள் நம்பிக்கை வைத்திருந்தனர் என்று அவர் கூறினார். நிபுணர்களின் கருத்துப்படி, சேவைத்துறையில் இந்தியா மாபெரும் சக்தியாக மாறியிருக்கிறது; விரைவில் இது உலக அளவிலும் உற்பத்தி குவி மையமாக மாறும் என்று பிரதமர் கூறினார். உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம் போன்ற முன்முயற்சிகள் இதில் மாபெரும் பங்களிப்பை செய்யும் என்று கூறிய பிரதமர், நாட்டின் முதன்மையான அடித்தளமாக இளைஞர்களும், திறன்மிக்க மனித ஆற்றலும் இருப்பதாக தெரிவித்தார். உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம் 60 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று அவர் கூறினார்.  இந்தியாவில் உற்பத்தி, உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு, உள்ளூர் பொருட்களை உலக அளவில் கொண்டு செல்லுதல் போன்ற இயக்கங்கள் புதிய வேலைவாய்ப்புகளையும், சுயவேலை வாய்ப்புகளையும் உருவாக்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.  “அரசு மற்றும் தனியார் துறையில் புதிய வேலைகளுக்கான சாத்தியம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் இளைஞர்களின் சொந்த நகரங்களிலும், கிராமங்களிலும் இத்தகைய வாய்ப்புகள் உருவாகி வருவது முக்கியமானது. இது இளைஞர்கள் புலம் பெயரும் நிர்ப்பந்தத்தை குறைத்துள்ளது. மேலும் தங்கள் பகுதியில் வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்பை செய்ய முடிந்துள்ளது” என்று அவர் கூறினார்.

ஸ்டார்ட் அப் தொடங்கி சுயவேலைவாய்ப்பு வரை, விண்வெளி முதல் ட்ரோன் வரையிலான துறைகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதை  பிரதமர் எடுத்துரைத்தார். இளைஞர்கள் தங்களின் திறன்களை வெளிப்படுத்தும் வாய்ப்பை 80,000 ஸ்டார்ட் அப்கள் வழங்கியுள்ளன. மருத்துவம், பூச்சி மருந்து தெளித்தல், ஸ்வமித்வா திட்டத்தில் வரைபடம் தயாரித்தல், பாதுகாப்புத்துறை ஆகியவற்றில் ட்ரோன்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.  இது இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது என்று அவர் கூறினார்.  ஒரு சில நாட்களுக்கு முன் இந்தியாவில் தனியார் துறை மூலம் முதலாவது ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டதை நினைவுகூர்ந்த அவர், விண்வெளித்துறையை தனியாருக்கு திறக்கும் முடிவை பாராட்டியதோடு, இந்திய இளைஞர்களுக்கு இது வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றார். இதுவரை அனுமதிக்கப்பட்ட 35 கோடிக்கும் அதிகமான முத்ரா கடன்களை உதாரணமாகவும் அவர் எடுத்துரைத்தார். ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்பை நோக்கிய உந்துதலுக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர், இதன் பயனாக நாட்டில் வேலைவாய்ப்புகள்  அதிகரித்துள்ளன என்றார்.

தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு நியமனதாரர்களை பிரதமர் வலியுறுத்தினார். இந்த நியமன கடிதங்கள் வளர்ச்சியின் உலகில் அவர்களுக்கு நுழைவாயில்களை திறப்பவை மட்டுமே என்பதை எடுத்துரைத்த அவர், அனுபவத்தில் இருந்தும் தங்களை விட மூத்தவர்களிடமிருந்தும் கற்றுக்கொண்டு தகுதிமிக்கவர்களாக மாற வேண்டும் என்று வலியுறுத்தினார். தமது கற்றலின் அனுபவத்தை பகிர்ந்து கொண்ட பிரதமர், எந்தவொரு வாய்ப்பிலும் புதிதாக சிலவற்றை தாம் கற்றுக்கொள்ளாமல் இருந்த்தில்லை என்றார். நியமனம் பெற்றவர்கள் இணைய தளம் மூலமான பயிற்சி அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் கர்மயோகி பாரத் இணைய தளத்தை மேம்படுத்த ஆக்கப்பூர்வமான கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்றும் திரு மோடி கேட்டுக்கொண்டார். “இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் பாதையில் நாம் நண்பர்களாகவும், சக பயணிகளாகவும் இருக்கிறோம்.இந்த தொலைநோக்குப் பார்வையுடன் முன்நோக்கி செல்வதற்கு நாம் உறுதியேற்போம்” என்று கூறி பிரதமர் உரையை நிறைவு செய்தார்.

பின்னணி:

வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு உயர்முன்னுரிமை அளிக்கப்படும் என்ற பிரதமரின் வாக்குறுதி நிறைவேற்றுவதை நோக்கிய முன்னெடுப்பாக வேலைவாய்ப்பு விழா அமைந்துள்ளது. வேலைவாய்ப்பு விழா என்பது கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும் இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்க அர்த்தமுள்ள வாய்ப்புகளை வழங்குவதிலும், தேச வளர்ச்சியில் நேரடி பங்களிப்பை செலுத்துவதிலும் கிரியா ஊக்கியாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேலைவாய்ப்பு விழாவின் போது அக்டோபர் மாதத்தில் 75,000 நியமன கடிதங்கள் புதிதாக சேர்க்கப்பட்ட நியமனதாரர்களுக்கு வழங்கப்பட்டன.

நாடு முழுவதும் 45 இடங்களில் (குஜராத், இமாச்சலப்பிரதேசம் நீங்கலாக) இந்த நியமன கடிதங்கள் நியமனதாரர்களுக்கு நேரடியாக ஒப்படைக்கப்படும். ஏற்கனவே நிரப்பப்பட்ட பணி இடங்கள் தவிர, ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், செவிலியர்கள், செவிலியர் அதிகாரிகள், மருத்துவர்கள், மருந்தகப்பணியாளர்கள், ரேடியோகிராபர்கள் இதர தொழில்நுட்ப மற்றும் துணை மருத்துவப் பணியிடங்களும் நிரப்பப்படவுள்ளன. மத்திய ஆயுத காவல்படையின் பல்வேறு பிரிவுகளில் கணிசமான எண்ணிக்கையிலான பணியிடங்களை மத்திய உள்துறை அமைச்சகம் நிரப்ப உள்ளது. கர்மயோகி ப்ராரம்ப் இணையதளத்தையும் பிரதமர் தொடங்கிவைத்தார். இது பல்வேறு அரசு துறைகளின் புதிய நியமனதாரர்கள் அனைவருக்கும் இணைய வழியாக புத்தாக்கப் பயிற்சி அளிக்கும். அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிமுறைகள், பணியிடத்தில் நெறிமுறையும், நேர்மையும், மனிதவள கொள்கைகள், பணிக்கால பயன்கள், படிகள் உள்ளிட்டவற்றை அறிந்துகொள்ள இது உதவும். நியமனதாரர்கள் தங்களின் அறிவு, திறன்கள், திறமைகளை விரிவாக்கிக்கொள்ள igotkarmayogi.gov.in என்ற  இணையதளத்தில் இதர வகுப்புகளை பயில்வதற்கான வாய்ப்பையும் இவர்கள் பெறுவார்கள்.

**************

(Release ID: 1877892)

SN/SMB/AG/KRS



(Release ID: 1877987) Visitor Counter : 218