பிரதமர் அலுவலகம்

வாரணாசியில் காசி தமிழ் சங்கமத்தை தொடங்கிவைத்த பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 19 NOV 2022 7:00PM by PIB Chennai

ஹரே ஹரே மகாதேவ்!

வணக்கம் காசி!

வணக்கம் தமிழ்நாடு!

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல் அவர்களே, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே,  மத்திய அமைச்சரவையின் எனது சகா தர்மேந்திர பிரதான் அவர்களே மற்றும் எல் முருகன் அவர்களே,  முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களே, உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா அவர்களே, பனாரஸ் இந்து பல்கலைக்கழக துணை வேந்தர் சுதிர் ஜெயின் அவர்களே,  சென்னை இந்திய தொழில்நுட்ப கழக  இயக்குநர் பேராசிரியர் காமக்கோட்டி அவர்களே, காசி மற்றும்  தமிழ்நாட்டைச் சேர்ந்த எனது விருந்தினர்களே, அனைத்து பிரதிநிதிகளே,

உலகின்  பழமையான நகரங்களில் ஒன்றான காசி புனித தலத்தில் உங்களைக் காண்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் அனைவரையும் காசித்  தமிழ் சங்கம நிகழ்ச்சிக்கு வரவேற்கிறேன்.

நதிகள், சித்தாந்தம், அறிவியல் அல்லது அறிவின் சங்கமம் என எதுவாக இருந்தாலும், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களின் ஒவ்வொரு சங்கமமும் இந்தியாவில் கொண்டாடப்பட்டு போற்றப்படுகிறது. உண்மையில், காசி-தமிழ் சங்கமம் இந்தியாவின் வலிமை மற்றும் குணாதிசயங்களின் கொண்டாட்டமாகும். இதனால் இது தனித்துவம் பெறுகிறது.

ஒருபுறம் காசி இந்தியாவின் கலாச்சார தலைநகரமாகவும் அதேசமயம் தமிழ்நாடு மற்றும் தமிழ் கலாச்சாரம் இந்தியாவின் தொன்மை மற்றும் பெருமையின் மையமாகவும் விளங்குகிறது.. கங்கை மற்றும் யமுனை நதிகள் சங்கமிக்கும் இடத்தைப் போல காசித் தமிழ் சங்கமும் அதே போன்று புனிதமானது.. இந்த முக்கியமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த கல்வி அமைச்சகம், உத்தரபிரதேச அரசை நான் பாராட்டுகிறேன். இதற்கு ஆதரவை வழங்கியதற்காக சென்னை ஐஐடி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் போன்ற மத்திய பல்கலைக்கழகங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக காசி மற்றும் தமிழ்நாட்டின் மாணவர்கள் மற்றும் அறிஞர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன்.

நண்பர்களே ,

 

காசியும் தமிழகமும் காலத்தால் அழியாத நமது கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தின் மையங்களாகும்.. சமஸ்கிருதம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டும் மிகவும் பழமையான, இன்றும் உயிர்ப்புடன் திகழும் மொழிகளாக உள்ளன. காசியில் பாபா விஸ்வநாதர் இருக்கிறார், தமிழகத்தில் ராமேஸ்வரத்தின் அருள் உள்ளது. காசி, தமிழகம் இரண்டுமே சிவனின் அருளைப் பெற்றுள்ளன. இசையோ, இலக்கியமோ, கலையோ எதுவாக இருந்தாலும், காசியும், தமிழகமும் எப்போதும் அவற்றின் ஆதாரமாக விளங்குகிறது.

 

காசியிலும் தமிழ்நாட்டிலும் இசை, இலக்கியம் மற்றும் கலைக்கான சிறந்த ஆதாரங்கள் உள்ளன. காசியின் தபலா, தமிழ்நாட்டின் தண்ணும்மை! காசியில் பனாரஸ் சேலை கிடைத்தால் தமிழ்நாட்டின் காஞ்சிபுர சேலை உலகப்புகழ் பெற்றதாகும். இந்திய ஆன்மீகத்தின் கர்மபூமியாக காசியும் தமிழ்நாடும் உள்ளது. தமிழ்நாட்டில்  திருவள்ளுவர் வாழ்ந்த நிலையில், துளசியின் பக்தர்கள் வசித்த இடமாக காசி உள்ளது. ஒரே மாதிரி சக்தியை அனுபவிக்க முடியும். இன்றும் தமிழர்களின் பாரம்பரிய திருமண ஊர்வலத்தின் போது காசி யாத்திரை இடம் பெறுவதை நான் இங்கு சுட்டிக்காட்டுகிறேன். தமிழ்நாட்டின் காசி மீதான தீராத காதல், நமது முன்னோர்களின் வாழ்க்கை முறையான ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்னும் உணர்வைக் குறிக்கிறது.

நண்பர்களே ,

தமிழ்நாட்டில் பிறந்த டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தார். தமிழ்நாட்டில் வேரூன்றியிருந்தாலும் காசியில் வாழ்ந்த வேத பண்டிதர் ராஜேஷ்வர் சாஸ்திரி, காசியில் உள்ள அனுமான் படித்துறையில் வாழ்ந்த பட்டாபிராம சாஸ்திரிகளை  நினைவு கூருகிறேன். அரிச்சந்திரா படித்துறை கரையில் உள்ள தமிழர் கோவிலான காசி காசி காமகோடீஸ்வரர் திருக்கோயில் மற்றும் கேதார் படித்துறை கரையில் உள்ள இருநூறு ஆண்டுகள் பழமையான குமாரசாமி மடம் மற்றும் மார்கண்டேய ஆசிரமம் ஆகியவை இருந்தது. கேதார் படித்துறை மற்றும் அனுமான் படித்துறை கரையோரங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் வசித்து வருகின்றனர். அவர்கள்  பல தலைமுறைகளாக காசிக்கு மகத்தான பங்களிப்பைச் செய்துவருகின்றனர். பல ஆண்டுகளாக மாபெரும் கவிஞரும் புரட்சியாளருமான தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு சுப்பிரமணிய பாரதி காசியில் வாழ்ந்தார். சுப்ரமணிய பாரதிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இருக்கையை நிறுவி பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் பெருமை சேர்த்துள்ளது.

 

நண்பர்களே ,

 

விடுதலையின் அமிர்தப் பெருவிழா காலத்தில் காசி தமிழ் சங்கமம் நடைபெறுகிறது. அமிர்த காலத்தில் நமது தீர்மானங்கள் நாட்டின் முழு ஒற்றுமையால் நிறைவேற்றப்படும். ‘சம் வோ மனான்சி ஜானதாம்’ (ஒருவருக்கொருவர் மனதைப் புரிந்துகொள்வது) என்ற மந்திரத்தை மதித்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இயற்கையான கலாச்சார ஒற்றுமையுடன் வாழ்ந்த தேசம் இந்தியா. நம் நாட்டில், 12 ஜோதிர்லிங்கங்களை காலையில் எழுந்தவுடன் நினைவு கூரும் வழக்கம் உள்ளது. நாட்டின் ஆன்மீக ஒற்றுமையை நினைவுகூர்ந்து நமது நாளைத் தொடங்குகிறோம். நீராடி வழிபடும் போது மந்திரங்களை ஓதுவோம் –. அதாவது, கங்கை, யமுனை முதல் கோதாவரி, காவேரி வரை உள்ள அனைத்து நதிகளும் நமது நீரில் குடியிருக்கட்டும்! அதாவது இந்தியாவின் அனைத்து நதிகளிலும் குளிப்பது போல் உணர்கிறோம். சுதந்திரத்திற்குப் பிறகு ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் இந்த பாரம்பரியத்தையும் வலுப்படுத்தி நாட்டின் ஒற்றுமையாக மாற்ற வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, இந்த விவகாரத்தில் பல முயற்சிகள் எடுக்கப்படவில்லை. இந்த தீர்மானத்திற்கான களமாக இன்று காசி-தமிழ் சங்கமம் மாறும். இதன் மூலம் நாம் நமது கடமைகளை உணர்ந்து, தேசிய ஒற்றுமையை வலுப்படுத்த நமக்கு ஆற்றல் அளிக்கும்.

நண்பர்களே,

சுவாமி குமரகுருபரர் காசிக்கு வந்து அதைத் தம் கர்ப்பபூமியாக ஆக்கி, காசியில் கேதாரேஷ்வர் மந்திரைக் கட்டினார். பின்னர், அவரது சீடர்கள் தஞ்சாவூரில் காவேரி நதிக்கரையில் காசி விஸ்வநாதர் கோயிலைக் கட்டினார்கள். தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை எழுதிய மனோன்மணீயம் சுந்தரனாரின் குரு கொடகநல்லூர் சுந்தர சுவாமிகள், காசியின் மணிக்கர்ணிக்கா மலைகணவாய் பகுதியில் தமது பெரும்  நேரத்தை செவழித்துள்ளார். மனோன்மணீயம் சுந்தரனார் அவர்களுக்கும் காசிக்கும்  தொடர்புள்ளது. ராமானுஜாச்சாரியார் போன்ற தமிழகத்தில் பிறந்த துறவிகள், காசியிலிருந்து காஷ்மீருக்கு ஆயிரக்கணக்கான மைல்கள் தூரம் பயணம் செய்துள்ளனர். சி.ராஜகோபலாச்சாரியார் எழுதிய ராமயணம் மற்றும் மகாபாரதத்திலிருந்து தென்பகுதியிலிருந்து வடபகுதி வரை நாடு முழுவதும் இன்றும் உத்வேகம் அடைந்துள்ளது. இனி ராமயணமும், மகாபாரதமும் படிக்க வேண்டும் என்று எனது ஆசிரியர்கள் என்னிடம் கூறியது நினைவில் உள்ளது. ஆனால் ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை ஆழ்ந்து படிக்க விரும்பினால் ராஜாஜி எழுதிய ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை படிக்க வேண்டும் என்றும் அதன் மூலம் சிலவற்றை புரிந்து கொள்ளமுடியும் என்றும் அவர்கள் கூறினார்கள். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், சங்கராச்சாரியார், ராஜாஜி, ராமனுஜ ஆச்சார்யா போன்ற இந்திய தத்துவஞானிகளை புரிந்துகொள்ளாமல் இந்தியாவை புரிந்து கொள்ள முடியாது என்பது என்னுடைய அனுபவம். இந்த சிறந்த மனிதர்களை நாம் அறிய வேண்டும்.

நண்பர்களே,

இந்தியா இன்று 'பாஞ்ச் பிரான்' (ஐந்து உறுதிப்பாடுகள்) மூலம் நமது பாரம்பரியத்தில் பெருமைப்படுவதை முன்வைத்துள்ளது. உலகில் எந்த நாட்டில் பழமையான பாரம்பரியம் இருக்கிறதோ, அந்த நாடு அதில் பெருமை கொள்கிறது. அதை பெருமையுடன் உலகுக்கு பரப்புகிறது. எகிப்தின் பிரமிடுகள் முதல் இத்தாலியில் உள்ள கொலோசியம் மற்றும் பைசாவின் சாய்ந்த கோபுரம் வரை இதுபோன்ற பல உதாரணங்களை நாம் காணமுடியும். உலகின் பழமையான மொழியான தமிழ் நம்மிடமும் உள்ளது. இன்று வரை, இம்மொழி உயிர்ப்புடன்  இருப்பதைப் போலவே பிரபலமாக உள்ளது. உலகின் மிகப் பழமையான மொழி இந்தியாவில் உள்ளது என்பதை உலக மக்கள் அறிந்ததும், வியப்படைகிறார்கள். ஆனால் அதை பெருமைப்படுத்துவதில் நாம் பின்தங்கியுள்ளோம். இந்தத் தமிழ்ப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதுடன் செழுமைப்படுத்துவதும் 130 கோடி நாட்டு மக்களின் பொறுப்பாகும். தமிழைப் புறக்கணித்தால், தேசத்திற்குப் பெரும் கேடு விளைவிப்பவர்களாக ஆகிவிடுவோம். தமிழைக் கட்டுப்பாடுகளுக்குள் நாம் வைத்தால், அதற்குப் பெரும் கேடு விளைவிப்பதாக அமையும். மொழி வேறுபாடுகளை அகற்றி ஒற்றுமை உணர்வை நிலைநாட்ட நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

நண்பர்களே,

காசி-தமிழ் சங்கமம் என்பது வார்த்தைகளை விட அனுபவப்பூர்வமானது என்று நான் நம்புகிறேன். இந்த காசி யாத்திரையின் போது, ​​உங்கள் வாழ்க்கையின் முக்கியமானதாக மாறும் நினைவுகளுடன் நீங்கள் இணையப் போகிறீர்கள். காசி மக்கள் உங்களுக்கான விருந்தோம்பலில் எந்தக் குறையையும் வைக்க மாட்டார்கள். தமிழகம் மற்றும் பிற தென் மாநிலங்களிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும், நாட்டின் பிற பகுதிகளில் உள்ளவர்கள் அங்கு சென்று இந்தியாவை அறிந்து கொள்ள வேண்டும். இந்த காசி-தமிழ் சங்கமத்தில் இருந்து வெளிவரும் சிறந்த நிலைகளை இளைஞர்களுக்கு ஆராய்ச்சி மூலம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இந்த விதைகள் மேலும் தேசிய ஒருமைப்பாட்டின் ஆலமரமாக மாற வேண்டும். நாட்டு நலனே நமது நலன் என்ற தாரக மந்திரம் தமது குடிமக்களின் வாழ்க்கையின் தாரக மந்திரமாக இருக்கவேண்டும். இதே உத்வேகத்துடன் மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாரத் மாதா கி ஜே

பாரத் மாதா கி ஜே

பாரத் மாதா கி ஜே

நன்றி!

வணக்கம்!

-------

(Release ID: 1877325)

SM/IR/KPG/KRS



(Release ID: 1877809) Visitor Counter : 191